உள்ளூர் செய்திகள்

வலிமருந்து!

ஆற்றுப்படுகையை ஒட்டிய வனத்தில், கீரி ஒன்று வாழ்ந்து வந்தது. மிகவும் குறும்புத்தனமும், குரூர புத்தியும் உடையது. காயம்பட்டு அவதிப்படும் விலங்குகளை எரிச்சலுாட்டும்.விலங்குகளுக்கு காயம் ஏற்பட்டதை அறிந்தால், உடனே அங்கு ஆஜராகி விடும்; பெரிதாக அக்கறை உள்ளது போல் நடிக்கும். பின், ஒருவகை திரவத்தை கொடுக்கும். அதை காயத்தில் தடவினால், நிவாரணம் கிடைக்கும் என நம்ப வைக்கும்.காயம் பட்ட விலங்கு உடனே பயன்படுத்தும். திரவத்தை தடவியதும், வலியும், எரிச்சலும் அதிகரிக்கும். அப்போது, அந்த விலங்கு படும் வேதனையை கண்டு ரசித்து மகிழும் கீரி.பல விலங்குகள் இவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தன; அதில் ஒன்று முயல். இத்தகைய செயலுக்கு பாடம் கற்பிக்க திட்டமிட்டது.ஒரு நாள் -பழம் சேகரிக்கும் கூடைகள் இரண்டை தயார் செய்தது முயல். ஒன்று பெரிதாகவும், மற்றொன்று சிறிதாகவும் இருந்தன. பெரிய கூடையின் அடிப்பகுதியில், வெப்பத்தில், உருகும் தாரை மறைத்து வைத்திருந்தது. இரு கூடைகளோடு கீரியை சந்தித்தது. மாம்பழங்கள் பறிக்க அழைத்தது. இரண்டும் தோட்டத்துக்கு சென்றன. அதிக பழங்களை சேகரிக்கும் பேராசையில், பெரிய கூடையை எடுத்தது கீரி. பழங்களை பறித்து, கூடையை நிரப்பின. அதிக பழங்களை பறித்த கீரியால் கூடையை துாக்க முடியவில்லை. அதை தரையில் வைத்திருந்தது. நேரம் செல்ல செல்ல கூடையிலிருந்த தார், வெப்பத்தால் உருகியது. இதை கவனிக்காத கீரி, கூடையை துாக்க முயன்றது. நகர்த்த கூட முடியவில்லை. அதன் கூரிய நகங்கள் பிய்ந்தன; வலியால் துடித்தது.உடனே முயல், 'காயத்திற்கு மருந்து இருக்கு; அதை போட்டால் நிவாரணம் கிடைக்கும்...' என்றது. முயல் கொடுத்த திரவத்தை தடவியதும், வலியும், வேதனையும் அதிகரித்தது. முயலின் செயலை புரிந்த கீரி, 'விலங்குகளை எவ்வாறு எல்லாம் துன்புறுத்தியுள்ளேன்' என வருந்தி மன்னிப்பு கேட்டது.குழந்தைகளே... வலியால் துடிப்போருக்கு உதவ வேண்டுமே தவிர, வேடிக்கை பார்க்க கூடாது!எஸ்.பிரபுராஜா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !