அனல் உலகம்
மேற்காசிய நாடான ஈரானில் உள்ளது, 'லுட்' பாலைவனம். இது, 52 ஆயிரம் சதுர கி.மீ., பரப்பளவுள்ளது. இங்குள்ள, 'கேன்டம் பேரியான்' என்ற பகுதியில், 2005ல், 70.7 டிகிரி வெப்பம் நிலவியது; உலகிலே அதிக வெப்பம் நிலவும் பகுதியாக கணிக்கப்பட்டுள்ளது. இதை, உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது, யுனஸ்கோ நிறுவனம்.ஆப்ரிக்க நாடான லிபியா, எலாசிசியா நகரில் செப்டம்பர் 13, 1922ல், 58 டிகிரி வெப்பம் நிலவியது. இதுவும் பயங்கர வெப்பம் நிலவும் பகுதிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கா, கிழக்கு கலிபோர்னியா, 'மொகாவி' பாலைவனத்தில், ஒரு பள்ளத்தாக்கு உள்ளது. இங்கு, ஜூலை 10, 1913ல், 56.7 டிகிரி வெப்பம் பதிவானது. அந்த பகுதியில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த பலர் மாயமாய் மறைந்தனர். அதை தொடர்ந்து, 'சாவு பள்ளத்தாக்கு' என, அழைக்கப்படுகிறது. ஆப்ரிக்க நாடான எத்தோப்பியாவில் உள்ள, 'டனகில்' பாலைவனத்தில் எரிமலைகள் உள்ளன. ஆண்டு சராசரி வெப்பம், 49 டிகிரி வரை பதிவாகிறது. இங்கு, 2011ல் எரிமலை வெடித்தபோது, ஏராளமான சுடு நீரூற்றுகள் தோன்றின.அமில ஊற்றுக்களும், பொட்டாஷியம், இரும்பு ஆக்ஸைடு, கந்தகம் மற்றும் பல வகை உப்பு பாறைகளும், படிமங்களும் காணப்படுகிறது. வெப்பமயான இங்கு, 'அபர்' என்ற பழங்குடிமக்கள் வாழ்கின்றனர். உப்பு படிவத்தை வெட்டி, ஒட்டகம் மற்றும் கழுதைகளில் ஏற்றி சென்று, விற்று பிழைக்கின்றனர். இந்த பகுதியை, 'நரகத்தின் நுழைவாயில்' என்கின்றனர். குளிர் காலத்தில் கூட, காலை நேர வெப்பம், 45 டிகிரியாக இருக்கும். - ராஜி ராதா