அன்பு பிளாரன்ஸ் ஆன்டி...
நான், 15 வயது சிறுமி; 10ம் வகுப்பு படிக்கிறேன். என் பெற்றோர் படித்தவர்கள்; நல்ல வேலையில் இருக்கின்றனர். சொந்த வீட்டில் குடியிருக்கிறோம்; சிறப்பான தனியார் பள்ளியில் படிக்கிறேன். கேட்பதை தயங்காமல் வாங்கி கொடுக்கின்றனர் பெற்றோர். எல்லாம் இருந்தும், எனக்கு மகிழ்ச்சி இல்லை. உலகத்திலேயே சந்தோஷமாக வாழும் நாடு எது... எதனால், அங்கு குழந்தைகள் சந்தோஷமாக வாழ்கின்றனர் என அறிய விரும்புகிறேன்.என்ன செய்தால் மகிழ்ச்சியாக இருக்க முடியும்... தகுந்த விளக்கம் தாருங்கள் ஆன்டி!இப்படிக்கு, மு.சுபா.
அன்பு மகளே...
மகிழ்ச்சி என்பது, இதயம் சொன்னதை முழு மனதுடன் பின்பற்றுவது தான். மகிழ்ச்சி என்பது விடியலுக்கு பின், அரை மணி நேரம் வெது வெதுப்பான போர்வைக்குள் உருண்டு புரள்வது போன்றது.உருகி ஓடும் சாக்லெட் ஐஸ்கிரீமை, வாயில் இழுவி சுவைப்பது போன்றது மகிழ்ச்சி. உனக்கு பிடித்ததை நீ சமைக்க, அடுத்தவர் பாராட்டுவதும் மகிழ்ச்சி தான். உன் குடும்ப உறுப்பினர்களுடன், நெகிழ்வுடன் இருப்பது என, பல விஷயங்கள் மகிழ்ச்சியை அள்ளி தரும்.உலகிலேயே மகிழ்ச்சியாக குழந்தைகள் வாழ்வது ஐரோப்பிய நாடான, நெதர்லாந்தில் என, சர்வதேச நிறுவனமான, 'யுனிசெப்' அறிவித்துள்ளது. உலகிலே மதிப்பு வாய்ந்த குழந்தைகள், ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் உள்ளனர் என கணிக்கப்பட்டுள்ளது.வாழ்வதற்கான உரிமை, உடல் நலத்துக்கான உரிமை, கல்விக்கான உரிமை, பாதுகாப்புக்கான உரிமையை பெறும் சூழலை கொண்டு, குழந்தைகள் மகிழ்ச்சி குறியீடு நிர்ணயிக்கப்படுகிறது. இதில் முதலிடம் வகிப்பது ஐஸ்லாந்து நாடு. இரண்டாம் இடம் நெதர்லாந்து பெற்றுள்ளது. இந்தியாவுக்கு, 112வது இடம்; குழந்தைகள் மிக மிக சோகமாய் வாழும் நாடு, ஆசிய நாடான ஆப்கானிஸ்தான் என கணிக்கப்பட்டுள்ளது.நெதர்லாந்து குழந்தைகள் மகிழ்ச்சியாக வாழ பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவை...* பெற்றோர் மகிழ்ச்சியாக வாழ்வதால், குழந்தைகளும் மகிழ்ச்சியாக உள்ளனர்* நெதர்லாந்து அம்மாக்கள் மிகவும் மகிழ்ச்சியானவர்கள்* குழந்தை வளர்ப்பில், அப்பாக்கள் சிறந்து விளங்குகின்றனர்* பள்ளிகளில், குழந்தைகள் துன்புறுத்தப்படுவதில்லை; வீட்டு பாடம் எழுத வற்புறுத்தல் இல்லை* ஆரோக்கியமான, சுவையான உணவு* கருத்துக்களை சுதந்திரமாக சொல்ல அனுமதி* குழந்தை வளர்ப்புக்காக, ஒவ்வொரு மாதமும், கணிசமான தொகையை அலவன்சாக வழங்குகிறது அந்நாட்டு அரசு. பொதுவாக, இரண்டு குழந்தைகள் உள்ள குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருக்கும். சாகும் வரை, கல்வி கற்றல், சுயநலமின்மை, போதும் என்ற மனம், ஆரோக்கியம், சுவையான உணவு, நம்மை சுற்றி, நல்ல உள்ளங்கள் இருந்தால் என, அமைத்துக் கொண்டால் தினமும் தீபாவளி தான். - அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.