உள்ளூர் செய்திகள்

இளஸ்... மனஸ்..! (219)

அன்புள்ள ஆன்டி...என் வயது, 12; நகரப் பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கும் மாணவன். எங்கள் வீட்டில், இரண்டு தெர்மோ பிளாஸ்க்குகள் உபயோகத்தில் உள்ளன. பரீட்சைக்கு படிக்கும் போது, ஒரு பிளாஸ்க்கில் காபியை வைத்து, ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை குடிப்பான், என் அண்ணன். அதை பார்க்கும் போது வியப்பாக இருக்கும். இந்த பிளாஸ்க் செயல்படும் விதம், பிளாஸ்க்கின் வகைகள் பற்றிய தகவல்களை கூறுங்கள்!இப்படிக்கு,எஸ்.முருகபாண்டி.அன்பு மகனே...தெர்மோ பிளாஸ்க்கை, துாய தமிழில், 'சேம செப்பு காப்புக்குடுவை...' என அழைக்கின்றனர். இது, 300 முதல், 1,000 மி.லி., வரை திரவத்தை சூடாகவோ, ஜில்லிப்பாகவோ வைத்திருக்கும். இதில், ஆறு மணி நேரத்திலிருந்து, 24 மணி நேரம் வரை பாதுகாப்பாக வைத்திருக்கும். அந்த பணியை, இந்த வகை பிளாஸ்க் செய்கிறது. பிளாஸ்க்கை, 1892ல் சர்ஜேம்ஸ் தைவார் கண்டுபிடித்தார். இது, இரு சுவர்கள் உடைய கண்ணாடி பாத்திரம். இரு சுவர்களுக்கு இடையே, வெற்றிடம் இருக்கிறது. அந்த வெற்றிடம், வெப்ப கடத்தலையும், வெப்ப சலனத்தையும், கதிர் இயக்கத்தையும் தடுத்து நிறுத்தி, பிளாஸ்க்கின் உள் பகுதி வெப்பத்தை அல்லது குளிர்ச்சியை பாதுகாக்கிறது.பிளாஸ்க்கை, பீக்கர், ஜக், ஆம்புலா, கோப்லெட், நோஜின், டம்ளர், பீக்கான், வியால் என்ற பெயர்களாலும் அழைக்கின்றனர். நம் நாட்டில், பிஜியன், மில்டன், செலோ, பொரோசில், பட்டர் ப்ளை போன்ற நிறுவனங்கள், பிளாஸ்க்கை தயாரித்து விற்கின்றன.பிளாஸ்க்கை சுத்தம் செய்வது ஒரு கலை. அவசரமாக கவனம் இன்றி கழுவினால் நொறுங்கி விடும். அரை கப் வெள்ளை வினிகர், 1 தேக்கரண்டி சலவை சோடாவை பிளாஸ்க்கில் கொட்ட வேண்டும். பின், வெதுவெதுப்பான நீரை அதன் மேல் ஊற்றி ஊற வைக்க வேண்டும். பிரஷோ, துணியோ வைத்து, பிளாஸ்க்கை சுத்தப்படுத்த வேண்டும்.பிளாஸ்க்கை வாங்கும் போது, நான்கு விஷயங்களை கவனிக்க வேண்டும்.* தர்மோ கண்ணாடி, இளம் சிவப்பு நிறத்தில் உள்ளதா என சோதிக்க வேண்டும். தர்மோ கண்ணாடியில், கறுப்பு புள்ளிகள் இருந்தால், ஆஸ்பெஸ்டாஸ் கலப்படம் இருப்பதாக அர்த்தம்* பிளாஸ்க்கை திறந்து முகர்ந்து பார்க்க வேண்டும். துர்நாற்றம் வீசினால் வாங்க கூடாது* பிளாஸ்க்கின் எடை தக்கையாக இருத்தல் கூடாது* பிளாஸ்க்கின் பாகங்களின் உறுதி தன்மையை பரிசோதிக்க வேண்டும். அடிப்பகுதி கலகலத்து போயிருந்தால், அந்த பிளாஸ்க்கை வாங்க கூடாது. பிளாஸ்க்கின் மூடி இறுக்கமாக மூடுகிறதா... கண்ணாடி மீதான ரப்பர் உயர்தர சிலிக்கானால் ஆனதா, இரு சுவர்களுக்கிடையே திரவத்துளிகள் விழுந்து பாக்டீரியா பெருக வாய்ப்பிருக்கிறதா என ஆராய வேண்டும். இப்படி ஆராய்ந்து வாங்கினால், சிறப்பாக பலன் தரும். சுற்றுலா, தேர்வு, மருத்துவமனையில் இருக்கும் போது என உதவும் நண்பனாக இருக்கும்!- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !