உள்ளூர் செய்திகள்

இளஸ்... மனஸ்... (66)

அன்புமிக்க அம்மாவுக்கு,கடினமாக உழைக்க விரும்பும் மாணவி எழுதிக் கொள்வது...நான், 11ம் வகுப்பு படிக்கிறேன்; கடவுள் புண்ணியத்தில் விரும்பிய பாட பிரிவே கிடைத்து விட்டது. நான், 2ம் வகுப்பு படிப்பு படித்தபோதே, ராணுவத்தில் சேரும் ஆசை வந்தது; குடும்பத்திலும் சம்மதித்தனர். 10ம் வகுப்பு படிக்கும் போது, கணிதம் கடினமாகியது. இருந்தாலும், குறிக்கோளிலிருந்து மாறவில்லை; இப்போது, 'ராணுவத்தில் சேர வேண்டாம்...' என்று தடுக்கின்றனர் பெற்றோர்.இதனால், குறிக்கோளை மாற்ற வேண்டியுள்ளது; ராணுவ அதிகாரி அல்லது வனத்துறை அதிகாரியாக வேண்டும் என விரும்புகிறேன்! எது கிடைத்தாலும் மகிழ்ச்சியடைவேன்; கணித பாடத்தில், நல்ல மதிப்பெண் வாங்க முடிவெடுத்துள்ளேன். நான் குறிப்பிட்டுள்ள துறைகளில், என்னைப் போல் சேர ஆசைப்படும் சிறுமியர், சிறப்பாக வர நல்ல ஆலோசனை வழங்கி உதவுங்கள்!அன்புள்ள மகளுக்கு...முதலில் ராணுவத்தில் சேருவதை பற்றிப் பார்ப்போம்...பிளஸ் 2 முடித்ததும், 'நீட்' தேர்வு எழுதலாம்; 'ஆர்ம்டு போர்சஸ்' என்ற ராணுவ மருத்துவ கல்லுாரியில் நுழைவு தேர்வு எழுதியும் மருத்துவம் படித்து, ராணுவ மருத்துவ பணியில் சேரலாம்; இதில், பெண்களுக்கு, 25 சதவீத இடங்கள் ஒதுக்கீடு உண்டு. பிளஸ் 2 முடித்ததும், ராணுவ செவிலியர் சர்வீஸ் என்ற தேர்வு எழுதி, ராணுவ செவிலியர் கல்லுாரியில் சேரலாம். அங்கு படித்து, ராணுவத்தில் செவிலியர் அலுவலர் ஆகலாம்.ராணுவத்தில் பெண் காவலர் பணிக்கு, 10ம் வகுப்பில், 45 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 17 முதல், 21வயதுக்குள் இருக்க வேண்டும். விவாகரத்து பெற்ற பெண்கள், கணவனை இழந்த, குழந்தை இல்லாத பெண்கள் மற்றும் ராணுவ விதவைகள் சேர வயது வரம்பில் சலுகை உண்டு. இதில் சேர, பொது நுழைவு தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்; மருத்துவ பரிசோதனையும் உண்டு. உடல் திறன் தேர்வில், 1.6 கி.மீ., துாரத்தை, 7 நிமிடம், 30 நொடிகளில் ஓடி கடக்க வேண்டும். நீளம் தாண்டுதலில், 10 அடி துாரத்தை தாண்ட வேண்டும்; மூன்று அடி உயரத்தையும் தாண்ட வேண்டும். மற்ற ராணுவ பணிகளில் சேர எதாவது ஒரு பாடத்தில், இளங்கலையில், 50 சதவீதம் மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றிருக்க வேண்டும்; 19- முதல், 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.அடுத்து, வன அதிகாரி பணியில் சேர்வதற்கான தகுதி பற்றிப் பார்ப்போம்... அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சிவில் சர்வீசஸ் ஆரம்பக்கட்டத் தேர்வை எழுதியிருக்க வேண்டும்; இரண்டாவது கட்டமாக, 'இன்டியன் பாரஸ்ட் சர்வீஸ்' பிரதான தேர்வை எழுத வேண்டும். மொத்தம், 1,700 மதிப்பெண்கள். எழுத்து தேர்வுக்கு பின், நேர்காணல் நடக்கும்; மூன்றாவது கட்டமாக ஆளுமை தேர்வு நடக்கும்; ஆளுமை தேர்வுக்கு பின், உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள, இந்திரா காந்தி நேஷனல் பாரஸ்ட் அகாடமியில், மூன்று ஆண்டு பயிற்சி பெற வேண்டும்; பெண்களுக்கு, 85 இடங்கள் உண்டு.'பாரஸ்ட் கார்டு' என்ற பணியில் சேர, 10ம் வகுப்பு அல்லது பிளஸ் 2 படித்திருந்தால் போதும்; நுழைவுத் தேர்வு உண்டு.ராணுவத்தில் சேர்வதை விட, வன அதிகாரியாவது மிகவும் கடினம். எதாவது பயிற்சி மையத்தில் சேர்ந்து படிப்பது வெற்றிக்கு வழி வகுக்கும். அகில இந்திய அளவில், 'ராங்க் ஸ்கோர்' செய்தால், வன அதிகாரியாக வாய்ப்பு அதிகம். கணித பாடத்தில் மட்டும் சிறப்பு கவனம் செலுத்தினால் போதாது; பொது அறிவு, ஆங்கில அறிவு, ஆளுமைத் திறன் ஆகியவையும் முக்கிய தேவையாகும்.ராணுவத்தில் சேர்ந்தால், உனக்கு ராயல் சல்யூட்; வன அதிகாரியாக பணியாற்றினால், என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!- என்றென்றும் அன்புடன், பிளாரன்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !