இளஸ்.. மனஸ்...
ஹாய் ஜெனி ஆன்டி. என் பெயர் XXX- கோவையில் உள்ள புகழ்பெற்ற பணக்கார பள்ளியில் +1 படிக்கிறேன். நாங்கள் மிடில் கிளாஸ்தான். ஆனால், என்னுடன் படிக்கும் மாணவர்கள் எல்லாரும் மிகவும் பணக்காரர்கள். 'பாக்கெட் மணி' என்ற பெயரில் அவர்களது பர்ஸ்சில் ஐந்தாயிரத்துக்கும் குறையாது பணம் இருக்கும். எப்பவுமே கேன்டினிலும், வெளியிலும் பர்க்கர், பீஸா, தந்தூரி சிக்கன், பிரியாணி என விதவிதமாக சாப்பிடுவர். வாழ்க்கையை பயங்கரமாக, 'என்ஜாய்' பண்ணுவர். ஒருத்தருடைய காரில் நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து, 'வீக்' எண்ட்ஸ்ல வெளியே போய் ஊர் சுற்று வாங்க. என்னோட பர்ஸ்சிலோ ஐம்பது, நூறு, மிஞ்சி போனா இருநூறு ரூபாதான் இருக்கும். இதைக் கொடுக்கவே என்டாடி ரொம்ப அழுவார். 'என்ன செலவு செய்தாய்?' என கணக்கு கேட்பார். எனக்கு ரொம்ப எரிச்சலா வருது. இதனால் பேரண்ட்ஸ் கிட்ட பொய் சொல்லி பணம் வாங்குறேன். இது என் மனசாட்சியை குத்துது.. என்னை தப்பு பண்ண தூண்டுவதும் ஒருவிதத்தில் என் பெற்றோர்தானே ஆன்டி? நான் என்ன செய்யட்டும்?ஹாய்டா... யு ஆர் சோ சுவீட்... ஏன் தெரியுமா? நீ உண்மையை ஒத்துக்கிட்டியே அதுக்குதான் இந்தப் பாராட்டு?மொதல்ல ஒண்ணு தெரிஞ்சிக்கோ... மிடில் கிளாஸ் பேரண்ட்ஸ் இவ்ளோ பெரிய ஸ்கூல்ல உன்ன படிக்க வைக்கிறாங்கன்னா என்ன அர்த்தம்? நீ நல்லா படிச்சி, பெரிய ஆளா வரணும் என்பது அவங்க ஆசை. சரியா? ஒவ்வொரு வருடமும், 'ஸ்கூல் பீஸ்' கட்ட அவங்க எவ்ளோ கஷ்டப்படுவாங்க தெரியுமா? நிறைய தியாகம் பண்ணிதான் உனக்கு, 'பீஸ்' கட்டுவாங்க. அதையெல்லாம் உன்கிட்ட சொல்லமாட்டாங்க கண்ணா...இரண்டாவது உன்னோட பணக்கார நண்பர்கள் செலவு பண்ணும்போது உனக்கு ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா, உனக்கு அப்படி ஒரு ப்ரெண்ட்ஸ் தேவையே இல்லை... உன் எதிர்காலத்தை அழிச்சிடுவாங்க... தெரியுமா?பணக்கார பிள்ளைகளில் இரண்டுவகை இருக்காங்க... ஒரு டைப் மாணவர்கள் ஜாலியாக படிச்சிகிட்டு, நண்பர்களோடு ஜாலி பண்ணி பொழுதுபோக்கிட்டு இருப்பாங்க... இவங்க ரொம்ப, 'ஹார்ட் ஒர்க்' பண்ணாம, 'ஆவரேஜ்' மதிப்பெண்கள்தான் வாங்குவாங்க. ஆனால், நேரம் வரும்போது பெற்றோர்களின் பிஸினஸ்சை பார்க்க ஆரம்பித்து, அவர்களது திறமையில் மேலே போயிடுவாங்க.இன்னொரு, 'க்ரூப்' பெற்றோரின் பணத்தில் எல்லா கெட்ட பழக்கங்களையும் கற்றுக்கொண்டு, 'ஸ்பாயில்ட் சைல்ட்' ஆகி கெட்டுப்போய் வாழ்க்கையை வீணாக்கிடுவாங்க. பெற்றோர் விட்டுச் சென்ற சொத்துக்களை அழித்து, நாசம் செய்து வாழ்க்கையில் முன்னேறாமல் போய் விடுகின்றனர். இவர்களையும் என் வாழ்க்கையில் பார்த்திருக்கேன். ஆனால், இப்போதைய, 'ட்ரெண்ட்' என்ன தெரியுமா?ஆட்டோகாரர்கள், அயன்காரர்கள், வீட்டு வேலை செய்யும் பணிப் பெண்கள் இவர்கள் எல்லாருமே கடினமாக உழைத்து, தங்கள் பிள்ளைகளை பி.இ., எம்.இ., என படிக்க வைக்கின்றனர்.அவர்களும் படித்து நல்ல கம்பெனிகளில் வேலைக்குச் சென்று, தங்களுடன் வேலை செய்யும் பெண்களை மணந்து, அவர்களது வாழ்கைத்தரம் இன்று, 'அப்பர் மிடில் கிளாஸ் லெவல்'க்கு வந்து விடுகின்றனர். இதில் நீ எந்த, 'க்ரூப்'பில் இருக்க ஆசைபடுற...கண்ணா, உன் கையில் அதிகப் பணம் இருந்தால் கெட்டுப்போய்டுவ. எனவே, இருக்கும் பணத்தில் சந்தோஷப்படு... நன்கு படி... பெற்றோரை ஏமாற்றாதே... அவர்களுடைய ஆசிர்வாதம் இருந்தாதான் நீ முன்னேற முடியும். நீயும் வசதியான வாழ்க்கை வாழலாம் சரியா?-உங்கள் நலனில் அக்கறை கொள்ளும்ஜெனிபர் பிரேம்.