இளஸ்... மனஸ்...
அன்பு சகோதரி ஜெனிபருக்கு, மிகுந்த கண்ணீருடன் எழுதும் சகோதரி. என் கவலையை யாரிடம் சொல்லி அழுவது என்று தெரியவில்லை. தற்போது, பிள்ளைகளின் பிரச்னைக்கு பதில் சொல்லும் உங்களை, என் சகோதரியாக நினைத்து என் வேதனையை உங்களிடம் கொட்டுகிறேன். உங்களால் தான் என் பிரச்னைக்கு பதில் சொல்ல முடியும். என்னை எப்படியாவது காப்பாத்துங்க...என் மகன் தற்போது ஒன்பதாவது பெயில். சிறுவயது முதலே நன்றாக படிக்க மாட்டான்; படிப்பே வராது. எட்டாவது வரை, 'ஆல் பாஸ்' போட்டதால் தப்பித்தான். ஒன்பதாவதில், 'பெயில்' ஆகிவிட்டான். எல்லா பாடத்திலும் பெயில். அவனுக்கு படிப்பு வரவே மாட்டுது. இவன் எதிர்காலத்தை நினைச்சா ரொம்ப கவலையா இருக்கு சகோதரி. சரியான மக்கு பையனாக இருந்தாலும், குணத்தில் தங்கம். இவனை எப்படி மேலே படிக்க வைப்பது? இவனை நினைத்து நான் கண்ணீர் வடிக்காத நாளே இல்லை. நான் என்ன செய்யட்டும் சகோதரி?உங்களது கவலை எனக்கு புரிகிறது சகோதரி. சோர்ந்து போக வேண்டாம். எல்லா பிரச்னைகளுக்கும் ஒரு தீர்வு உண்டு. உங்கள் மகன் நல்லவனாக இருக்கிறானே... அதை நினைத்து சந்தோஷப்படுங்கள். இந்த காலத்தில் எல்லாருமே நன்றாக படிக்கின்றனர்; ஆனால், ஒழுக்கம் என்பதே இல்லை. பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்க வேண்டியது நம் கடமை... உங்கள் மகனுக்கு, 'கற்றல் குறைபாடு' உள்ளது. இவர்களால், மற்ற மாணவர்களுடன் இணைந்து படிக்க முடியாது. இவர்களுக்கு சொல்லித்தரும் ஆசிரியர்களும், பெற்றோர்களும் மிகவும் கஷ்டப்படுவர்.இந்த மாதிரி குறைபாடுள்ள குழந்தைகளுக்கு கற்றுத்தருவதற்கென்றே சில, 'டிரெய்னர்ஸ்' இருக்காங்க. 'MDA Chennai.com' என்ற இணையதளத்தை போய் பாருங்கள். MADRAS DYSLEXIA ASSOCIATION என்று பெயர். DYSLEXIA என்ற வார்த்தை கிரேக்க மொழியில் இருந்து வந்தது. DYS என்றால் Difficulty with என்றும், LEXIA என்றால் With language என்றும் அர்த்தம்.ஆரம்பத்திலேயே இந்த மாதிரியான பயிற்சி வகுப்பில் சேர்த்து, 'டிரெயின்' செய்திருந்தால், உங்கள் பிள்ளையும் சாதனை மாணவனாக மாறியிருப்பான். லேட்டாக பேசும் குழந்தை, எல்லாவற்றிலும் பின் தங்கிய நிலையில் இருக்கும் போதே, உங்கள் குழந்தையை, குழந்தை நல மருத்துவர் மற்றும் நியூராலஜிஸ்ட்யிடம், 'செக்' பண்ணியிருந்தால், குழந்தையின் குறைபாட்டை கண்டறிந்து சொல்லியிருப்பர். இந்த குறைபாடு குழந்தை பருவத்திலிருந்தே ஆரம்பிக்கும். இது நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னை.சரி விடுங்க... இனி மேலாவது இந்த மாதிரி பயிற்சி வகுப்பில் சேர்த்து அவன் கற்றல் திறனை சரி செய்யுங்கள். பொதுவாக இந்த மாதிரி குழந்தைகளுக்கு படிப்பைத் தவிர மற்ற, 'டேலன்ட்'கள் அதிகம் இருக்கும். அதில் பயிற்சி அளித்து மிகவும் சிறப்பானவனாக கொண்டுவந்து விடலாம். இவர்களது போன் நம்பர்: 044 - 28157908, 28156697; சென்னை, தி.நகரில் உள்ளனர். இவர்கள் உங்கள் மகனது திறமை என்னவென்று கண்டுபிடித்து சொல்வர். கற்றல் குறைபாடு இருந்தும், புகழ் பெற்றவர் எத்தனையோ பேர் உள்ளனர். அவர்களில், மைக்கேல் பெல்ப்ஸ் - இவர் நீச்சலில் எத்தனையோ ஒலிம்பிக் மெடல்கள் வாங்கியுள்ளார். ப்ரூஸ் ஜென்னர்... இப்படி நிறைய உதாரணங்கள் சொல்லலாம். இந்த வகுப்புகள் மூலம் உங்கள் மகனது அறிவை மேம்படுத்துங்கள்.அதன் பிறகு, 'நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஓப்பன் ஸ்கூலிங்' என்ற இணையதளத்தை பாருங்கள். அதில் உள்ள, 'ஓபன் ஸ்கூலில்' சேர்ந்து, பத்து, பனிரெண்டாம் வகுப்பை முடித்துவிட்டால், இவர்கள் தரும், சான்றிதழை வைத்து, எந்த காலேஜிலும் சேரலாம். அதாவது 'ஐ.ஐ.டி., மெட்ராஸ்'ல் கூட சேர்த்துக் கொள்வர் என்றால் பார்த்துக் கோங்களேன். அவ்வளவு தரம் வாய்ந்தது. இனி உங்கள் மகனை திட்டி தீர்க்காமல் ஆகவேண்டிய காரியங்களை பாருங்கள். எதிர்காலத்தில் உங்கள் மகனும் இவர்களைப் போல் புகழ்பெற வாய்ப்புண்டு. அது ஒரு தாயின் கையில்தான் உள்ளது. கொஞ்சம் சிரிங்களேன்!-வாழ்த்துகளுடன்,ஜெனிபர் பிரேம்.