மாயவிழிகள்! (17)
முன்கதை: தோப்பு கிணற்று தண்ணீர் குடித்த சிறுமியர் தியாவும், அனுவும் வினோத சக்தி பெற்றிருந்தனர். காட்டில் துப்பறிந்து வார்டன் மற்றும் மாணவியரை காப்பாற்ற முயன்றனர். இனி - ''அக்கா... சுற்றி வளைச்சுட்டாங்க. நான் ஒருவனை உறைய செய்கிறேன். நீ, இன்னொருவனை மறையச் செய்; மூன்றாவது நபர் பயந்து ஓடி விடுவான்...''அவசரமாக கூறினாள் அனு.''வேண்டாம். அது ஆபத்து...''''ஐயோ அக்கா... பிடிப்பட்டு விடுவோம்...''''தப்பிக்க வழியில்லை. சிக்கி விட்டோம்...''சோர்வுடன் கூறினாள் தியா.''அவங்கள ஏன், 'ப்ரீஸ்' செய்ய வேண்டாம்ன்னு சொல்லுற அக்கா...''''நமக்கு இந்த மாதிரி சக்திகள் இருக்கிறது அவங்களுக்கு தெரியக்கூடாது அனு...''''நம்ம சக்தியை காட்டினால், அவர்கள் பயந்து ஓடிடுவாங்க தானே...''''இல்லை அனு. நீ தப்பா யோசிக்கிற... நம்ம கிட்ட சக்தி இருக்குன்னு தெரிஞ்சா தங்களை காத்துக்கொள்ள, நம்மை கொலை செய்ய தான் முயற்சி செய்வாங்க. இது நமக்கு ஆபத்து...''''யோசித்து பார்த்தா நீ சொல்றதும் சரி தான் அக்கா...''''என்னைக்குமே யுத்தத்தில் ஜெயிக்க வேண்டும் என்றால், நம்மிடம் என்ன ஆயுதம் இருக்கிறது என்பது எதிரிக்கு தெரியக்கூடாது. ஆயுதத்தை மறைத்து வைத்து எப்போது பயன்படுத்த வேண்டுமோ, அப்போது பயன்படுத்தினால் தான் வெற்றி கிடைக்கும்...''''ஆனால், அவர்கள் உறைந்து நின்றதற்கு காரணம் என்ன என்று சந்தேகம் வருமே அக்கா...''''கண்டிப்பாக வரும். எதிர்பாராத ஒரு சந்தர்ப்பத்தில் அவங்க நம்புற மாதிரி அதற்கு ஒரு கதையை சொல்லி விடலாம்...''புத்திசாலித்தனமாக பேசும் தியாவை அந்த இக்கட்டான சூழ்நிலையிலும், அனு பெருமையாக பார்த்தாள்.மூவரும் நெருங்கி வந்து இவர்களை பிடித்தனர்.''யார் நீங்க... இங்கே என்ன செய்றீங்க...''அதட்டினான் செல்வா. இருவரும் பயந்தனர். அனு மெல்ல பேசினாள்.''நான் இந்த ஊரு தான். என் பெயர் அனு. இங்கே வேன் நின்றதால் வேடிக்கை பார்க்க வந்தோம்...''''வேன்ல என்ன பார்த்தீங்க...''''எதுவும் பார்க்கல...''''பொய் சொல்லாத...''''வேன்ல யாரோ இருக்கிற மாதிரி சத்தம் கேட்டது. அவ்வளவு தான் வேறு எதுவும் எனக்கு தெரியாது...''''அப்புறம் ஏன் ஓடுனீங்க...''''நீங்க துரத்தினதால் பயந்து ஓடினோம். எங்களை விட்ருங்க. நாங்க போயிடுறோம்...''''என் மேல் பாம்பு வேற துாக்கிப்போட்ட நீ...''''சாரி சார்... நான் பயத்துல செய்துட்டேன். அது விஷம் இல்லாத பாம்பு...''அப்பாவித்தனமாக பேசும் அவளை, 'நம்புவதா... வேண்டாமா' என்று குழப்பத்துடன் பார்த்தான் செல்வா.''இந்த வேனில் இருந்தவர்கள் எங்கே...''''எங்களுக்கு தெரியாது...''''அவங்கள நீங்க திறந்து விடலையா...''இப்போது குறுக்கிட்டாள் தியா.''திறந்து விட்றதா... அவங்களே கதவை திறந்துக்க மாட்டாங்களா...''அவள் கேட்ட குறுக்கு கேள்விக்கு பதில் சொல்ல தயங்கினான் செல்வா.'உண்மையிலேயே இவர்களுக்கு விஷயம் தெரியாமல் இருந்து நாம் ஏதாவது உளறி விடுவோமோ' என்று யோசித்து பேச்சை மாற்றினான்.''ஆமாம்... நாங்க முதல்ல பார்க்கும் போது, ரெண்டு பேரும் பை வெச்சுருந்தீங்களே...''''எங்க வீடு பக்கத்துல தான் இருக்கு... பையை வீட்டில் வைத்து விட்டு திரும்ப வந்தோம்...''''எதுக்கு அந்த மரத்துக்குள் போய் ஒளிஞ்சிருந்தீங்க... எனக்கு சந்தேகமாக இருக்கிறது. வேனில் வந்தவர்களை நீங்க தான் திறந்து விட்டு இருக்கணும். உண்மைய சொல்லுங்க...'' அதட்டினான் செல்வா.''நிஜமாகவே எங்களுக்கு தெரியாது சார். முதல்ல நாங்க வேன் அருகே போனப்ப நீங்க, எங்கள துரத்துனதால, பயந்து இந்த மரத்து பக்கம் வந்து வேனை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தோம்...'' என்ற தியா, அவன் கவனத்தை திசை திருப்ப என்ன செய்வது என்று யோசித்தாள்.அவளுக்கு சட்டென ஒரு யோசனை தோன்றியது.''சார் கொஞ்சம் தள்ளி போய் நிற்கலாமா...''''ஏன்...''''இந்த இடத்துல பூமிக்கு அடியில நிறைய ரேடியமும், யுரேனியமும் இருக்குது. அதோட கதிர் வீச்சு அப்பப்ப நம்மள தாக்கி கொஞ்ச நேரத்துக்கு செயல்பட விடாமல் செய்திடும். நம்மால அசைய கூட முடியாம போயிடும். இந்த ஏரியாவே அப்படித்தான். தள்ளி போயிடலாம் சார்...'' என்றாள் தியா.இதைக்கேட்டு மூவரும் ஜெர்க் ஆயினர்.''செல்வா அண்ணா இங்கே இருந்து போய் விடலாம்...'' என்றான் டிரைவர்.வீராவும், 'ஆமாம்' என்பது போல தலையசைத்தான்.தியாவையும், அனுவையும் வேனில் ஏற்றி அங்கிருந்து புறப்பட்டனர். அரை கி.மீ., வந்தவுடன் வேனை நிறுத்தினர்.அவர்களை வேனுக்குள் வைத்து கதவை சாத்தி கீழே இறங்கிய மூவரும் தங்களுக்குள் விவாதித்தனர்.''இப்ப என்ன செய்றது...'' என்று ஆரம்பித்தான் வீரா.''தப்பிச்சு போனவங்களை எப்படியாவது கண்டுபிடிக்கணும்...''''இந்த இரண்டு பிள்ளைகளையும் என்ன செய்றது. விட்டு விடலாமா...''''இவங்க பேச்சுல எனக்கு நம்பிக்கை இல்லை. அப்படியெல்லாம் அசால்டா விட முடியாது. இவங்களுக்கு ஏதாவது தெரிஞ்சு ஊருக்குள்ள போய் சொல்லிட்டாகன்னா பிரச்னையாகிடும்...'' கறாராக சொன்னான் செல்வா.''இவங்களுக்கும் வேன்ல நாம் கூட்டிட்டு வந்தவங்களுக்கும் தொடர்பு இருக்கும்ன்னு தோணல செல்வா அண்ணா...''''இதுங்க ஓடுனதையும், ஒளிஞ்சதையும் பார்த்தா எனக்கு சந்தேகமா இருக்கு...''''இவங்களை வேன் அருகில் பார்த்ததும் நாம் கூட்டி வந்த பிள்ளைகள் தப்பி விட்டனர் என்று நினைத்து தான், நாம் இவர்களை துரத்த ஆரம்பித்தோம். துரத்தியதை பார்த்து தான் பயந்து ஓடி இருப்பர்...'' என்றான் வீரா.''இப்ப என்ன செய்றது...'' கேட்டான் டிரைவர்.- தொடரும்...- ஜே.டி.ஆர்.