உள்ளூர் செய்திகள்

இளஸ் மனஸ்! (111)

அன்புள்ள அம்மா...நான், 14 வயது சிறுமி. உடன் பிறந்தவர்கள் இரண்டு பேர்; மூத்தவள், பிளஸ் 1 படிக்கிறாள்; இரண்டாமவள், 10ம் வகுப்பு படிக்கிறாள். அப்பா, லாரி ஓட்டுனர்; வீட்டில் மிஷின் வைத்து தையல் வேலைகள் செய்கிறார் அம்மா.குடும்பத்தில், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தான், புது துணி ஒரு செட் எடுப்பர்; அக்கா போட்ட துணியை, உள் தையல் மட்டும் ஆல்டர் செய்து, இளைய அக்காவுக்கு கொடுப்பார் அம்மா; இளைய அக்காளின் ஆடைகளை, உள் தையல் மற்றும் ஆல்டர் செய்து, எனக்கு கொடுப்பார். தீபாவளிக்கு எல்லாரும் புது துணி உடுத்த, நாங்கள் மட்டும் பழைய துணியை உடுத்துவோம். சாயம் போன, கிழிந்த, நைந்த பழைய மாடல் ஆடை தான், ஆயுளுக்கும் அணிய வேண்டுமா... இதை எண்ணி, அழுது அழுது முகம் வீங்கி நிற்கிறேன் அம்மா. இந்த நிலை மாற ஏதாவது ஒரு வழி சொல்லுங்க...அன்புள்ள மகளுக்கு...அடுத்தடுத்து பெண் குழந்தைகளோ, அடுத்தடுத்து ஆண் குழந்தைகளோ பிறந்துள்ள ஏழை குடும்பங்களில், ஆடை எக்ஸ்சேஞ்ச் இயல்பான விஷயம் தான்.தொடர் வண்டியில், பேருந்தில், திரையரங்குகளில் முன்பதிவு செய்து, அமரும் இருக்கை, ஏற்கனவே ஒருவர் அமர்ந்தது தானே. அதற்காக, வீட்டில் இருந்து, புது இருக்கை எடுத்து சென்றா அமர்கிறோம். அக்கா பால் உறிஞ்சும் பாலுாட்டும் அவயத்திலிருந்து தான், அடுத்தடுத்து பிறப்பவர் பால் குடிக்கிறோம்; ஒவ்வொரு குழந்தைக்கும் தனி தனி பாலுாட்டும் அவயம் சாத்தியமா...முதலில், குடும்பத்தின் பொருளாதார நிலையை யோசித்து பார்! ஒவ்வொரு ஆண்டும் குடும்பத்தின், ஐந்து உறுப்பினர்களுக்கும், தலா இரண்டு புது ஆடைகள் எடுப்பதென்றால் எவ்வளவு பணம் செலவாகும். அக்காளின் வாழ்க்கையை, இளைய அக்கா வாழ்ந்து பார்க்கிறாள்; இளைய அக்காளின் ஓராண்டு வாழ்க்கையை நீ வாழ்ந்து பார்க்கிறாய். உன் அக்காளின் வண்ண மயமான இறக்கைகளை, உன் இளைய அக்காளும், இளைய அக்காளின் வண்ணமயமான இறக்கைகளை நீயும் எடுத்து பறப்பதில் என்ன தவறு.தொடர்ந்து, 20 ஆண்டுகள் யாரும் ஏழையாக இருப்பதில்லை; யாரும் பணக்காரர்களாகவும் இருந்ததில்லை; ரங்கராட்டினத்தின் கீழ் இருக்கும் நீ, மேலே வருவாய்.குடும்ப வறுமையை போக்க, நன்றாக படிக்க வேண்டும். உன் மூத்த அக்கா முதலில் படித்து நல்ல வேலைக்கு சென்று விட்டால் நிலைமை மாறும்; விலையுர்ந்த ஆடைகளும், சுவையான உணவும், வாகனமும், வீடும் கிடைக்கும். மூன்று சகோதரிகளுக்கிடையே, ஒற்றுமையும், சுயநலமின்மையும், தொடர்ந்து போராடும் குணமும், விடாப்பிடி கல்வி அறிவும் இருந்தால், இந்த உலகத்தை தலைகீழாய் புரட்டி போட்டு விடலாம்.புது துணிகளை சாதாரணமாய் உடுத்தும் கணத்தில், ஏழ்மை காலத்தில் அக்காள்களின் ஆடைகளை உடுத்தி, களித்த காலம் பொற்காலமாய் தோன்றும். மூன்று சகோதரிகளும் படித்து வேலைக்கு சென்று, பெற்றோரை வசதியாய் பார்த்துக் கொள்ள வேண்டும் என, சங்கல்பம் கொள்ளுங்கள். உங்களுக்கெல்லாம் திருமணமானால், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ள கூடாது என தீர்மானம் செய்யுங்கள்.வசதி வாய்ப்பு வந்த பின், அம்மாவுக்கு நிறைய புதிய புடவைகள் வாங்கி கொடுத்து, பழைய புடவைகளை மூன்றாக பங்கிட்டு கொள்ளுங்கள். அக்காளின் ஆடைகளை தங்கை அணிவதும், தங்கையின் ஆடைகளை அக்கா அணிவதும் அன்பை பல மடங்காய் கூட்டும்.மூன்று சகோதரிகளும், தற்சமய ஆடைகளுடன் குரூப் புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள்; பின்னாளில் பார்த்து மகிழ உதவும்!- வாழ்க்கை சிறப்பாக வாழ்த்துகளுடன், பிளாரன்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !