உள்ளூர் செய்திகள்

இளஸ் மனஸ்! (141)

அன்புள்ள பிளாரன்ஸ்...நான், இரண்டு குழந்தைகளுக்கு அம்மா; பங்கு சந்தை நிறுவனத்தில் பணி புரிகிறேன். கணவர், மின்னிதழ் நிறுவனம் நடத்துகிறார்; மூத்த மகன், 7ம் வகுப்பு படிக்கிறான்; இரண்டாவது மகளுக்கு வயது, 10; இருவரும் படிப்பில் கெட்டிக்காரர்கள். உறவு மற்றும் நட்பு வட்டாரத்தில், மணிப்பிள்ளைகளை பெற்றிருப்பதாக என்னை புகழ்கின்றனர். ஆனால், வீட்டுக்குள் இரு குழந்தைகளிடமும் ஒழுங்கு இல்லை. படுத்த படுக்கையை மடித்து வைக்க மாட்டார்கள். சாப்பிட்ட தட்டை கழுவி வைக்க மாட்டார்கள். போட்டது போட்டபடியே கிடக்கும்; ஆயிரம் முறை திட்டினாலும், திருந்த மாட்டேன் என்கின்றனர். அவர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்க வேண்டுகிறேன்.இப்படிக்கு, நா.அமுதா.அன்புள்ள அம்மா...நான் எழுதியுள்ள பதிலை, உங்கள் மகன், மகளிடம் படிக்க கொடுக்கவும்.செல்லங்களா... சுத்தம், ஒழுங்கை வீட்டிலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். பொதுவாக, 'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது' என்பர். இப்போதே ஒழுங்கீனமாய் இருந்தால், பின்னாளில் மிகவும் சிரமம் ஏற்படும். உங்களுடன் இருப்பவர்களையும் சிரமப்படுத்த நேரிடும்.மருத்துவர் மேக்ஸ்வெல் மால்ட்ஸ் எழுதிய, 'சைக்கோ சைபர் நெட்டிக்ஸ்' என்ற புத்தகத்தில், 'ஒரு பழக்கத்தை கைக்கொள்ள, 21 நாட்கள் போதும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.காலை எழுந்தவுடன், படுக்கையை தட்டிப் போட்டு, போர்வையை மடித்து வையுங்கள். பல் துலக்கிய பின், டூத்பிரஷை உரிய இடத்தில் வையுங்கள்; குளித்து விட்டு, சோப்பை உரிய டப்பாவில் வைத்து மூடுங்கள்.தலை துவட்டிய பூத்துவாலையை வெயிலில் காய போடுங்கள்; தலையணை உறையை, வாரத்துக்கு ஒருமுறை துவைத்து போடுங்கள். சீப்பை அவ்வப்போது பழைய டூத்பிரஷால் சுத்தம் செய்யுங்கள். கழிப்பறைகளை, விடுமுறை நாட்களில் சுத்தம் செய்யுங்கள்; மாதம் ஒருமுறை வீட்டை ஒட்டடை அடியுங்கள்.வசிக்கும் வீடு கோவிலுக்கு சமம்; பொதுக்கழிப்பிடம் போல, பேருந்து நிலைய குப்பை நிறைந்த நடைமேடை போல, கலீஜாக வைக்க கூடாது. பெற்றோர் ஓய்வில்லாமல் உழைத்து, நமக்கு சோறு போடுகின்றனர்; படிக்க வைக்கின்றனர். நம் பங்குக்கு படிப்புடன் சேர்த்து, வீட்டையும் சுத்தமாக பராமரிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.கன்றுக்குட்டிகளே... உங்கள் படுக்கையறையையும், குளியலறையையும் பிரகாசமான வால் பேப்பர்களால் அலங்கரியுங்கள். பெட்ஷீட்டிலும், தலையணை உறையிலும், பொம்மை டிசைன்கள் இருக்கட்டும். படுக்கையறையை ஒட்டி, பால்கனி இருந்தால், மூங்கில் ஊஞ்சல் அமையுங்கள். பால்கனியில், அலங்கார பூஞ்செடிகளை, தொட்டில்களில் வளருங்கள்; படுக்கையறையின் சீலிங்கில், ஓவிய சுவரொட்டிகளை ஒட்டுங்கள். வீட்டுப் பாடம் செய்ய, மேஜை நாற்காலி, விளக்கு தயார் செய்யுங்கள். மொத்தத்தில், உங்கள் படுக்கையறைக்குள் புகுந்தால், சோம்பேறித்தனம் தலைதெறித்து ஓட வேண்டும். படைப்புதிறன் பொங்கி வழிய வேண்டும்.பூக்குட்டிகளா... பொறுப்புணர்ச்சியுடன் செயல்படுங்கள்... உங்கள் முடிவுகளை நீங்களே எடுக்கப் பழகுங்கள். சமுதாயத்தின் அங்கத்தினர்களாக, உங்கள் பங்களிப்பை நிறைவேற்றுங்கள்.உறவுகளை, நட்புகளை கண்ணியப் படுத்துங்கள்; எதிர்கால குறிக்கோள்களை நிர்ணயியுங்கள்!நாத்தக்குட்டிகள் என அவப்பெயர் வாங்காமல், சுறுசுறுப்பு மிக்க தேனீக்கள் என புகழ் பெறுங்கள். எங்கே கிளம்பிட்டீங்க பன்னீர் புஷ்பங்களா... வீட்டை சுத்தம் செய்யவா... பெஸ்ட் ஆப் லக்!- அன்புடன், பிளாரன்ஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !