பயமா இருக்கு!
பள்ளிகளுக்கு மாவட்ட அளவில் கட்டுரைப் போட்டிகள் அறிவித்திருந்தனர். ஆசிரியை மாணவிகளிடம் கட்டுரை போட்டி பற்றி தெரிவித்தார்.'மாணவிகளே! மாவட்ட அளவில் பள்ளிகளுக்கான கட்டுரைப் போட்டி அறிவிச்சுருக்காங்க. 'உலகம் வெப்பமயமாதலும் தற்காத்தலும்' அப்படீங்கற தலைப்புல தான் கட்டுரை எழுதணும்!''மாணவிகள் ஆசிரியையின் முகத்தையே பார்த்தனர். ஆசிரியை தொடர்ந்தார்.'சரி... உங்கள்ல யாரெல்லாம் கட்டுரை போட்டியில பங்கெடுத்துக்கப் போறீங்க?'' என்று கேட்டார்.தமிழரசி எழுந்து நின்றாள்; இலக்கியாவும் எழுந்து நின்றாள். வேறு எந்த மாணவிகளும் எழுந்திருக்கவில்லை.'சபாஷ்... நீங்க ரெண்டு பேராவது தைரியமாக முன் வந்தீங்களே. நீங்க ரெண்டு பேரும் வெற்றியடைய நான் மனமாறப் பாராட்டறேன்,'' என்றார் ஆசிரியை.பள்ளி இடைவேளையின்போது தமிழரசியிடம் புலம்பினாள் இலக்கியா.'தமிழ்... நீ எழுந்து நின்னதும், அந்த தைரியத்துல நானும் எழுந்து நின்னுட்டேன். சத்தியமா சொல்றேன்... எனக்கு உலக வெப்பமயமாதல் பற்றியும் தெரியாது... அதை பாதுகாக்கிறது எப்படின்னும் தெரியாது,'' என்றாள்.தமிழரசி சிரித்தபடியே 'இலக்கியா நான் எழுந்து நின்ன தைரியத்துலதான் நீயும் எழுந்து நின்னேன்று இப்பத்தானே சொன்னே! யாமிருக்க பயமேன்?'' என்றாள்.'தமிழ்... எப்படி கட்டுரை தயார் செய்யறது?'' என்று கேட்டாள் இலக்கியா.'வா... ரெண்டு பேரும் நூலகம் போவோம்... நிறைய குறிப்புகள் எடுப்போம். பிறகு கட்டுரை தயார் பண்ணுவோம்,'' என்றாள் தமிழரசி.இருவரும் நூலகம் சென்றனர். ஏராளமான குறிப்புகள் எடுத்தனர். இரண்டு கட்டுரைகள் தயார் செய்தனர்.போட்டிக்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்தன. இலக்கியாவிற்கு கை, கால்கள் நடுங்கத் தொடங்கின. தமிழரசி தைரிய மூட்டினாள்.'இலக்கியா கட்டுரையும் தயார் பண்ணி வச்சுட்டு, கொஞ்சம் மனப்பாடம் பண்ணிட்டாப் போதும். அழகாக போட்டியில் கலந்துக்கலாம்,'' என்றாள் தமிழரசி.ஆனால், இலக்கியாவிற்கு இன்னமும் நடுக்கம் போகவில்லை. இதனை ஆசிரியையும் அறிந்தார். இலக்கியாவிற்கு அறிவுறுத்தினார்.'இலக்கியா போர்க்களத்துல எந்தக் காரணத்தை கொண்டும் புறமுதுகிடக் கூடாது. தோல்வியே கிடைக்கும்னு தெரிஞ்சாலும் சரி. உயிரே போகும்னு தெரிஞ்சாலும் சரி. புற முதுகிடாம கடைசி வரைக்கும் போராடணும். அந்த தைரியம்தான் நமக்கு வெற்றிக் கனியை பறிச்சுத் தரும்,'' என்றார்.இலக்கியாவின் மனதிற்குள் தெளிவு பிறந்தது. துணிவுடன் போட்டியில் கலந்து கொண்டாள். தமிழரசி முதல் பரிசை பெற்றாள்; இலக்கியா இரண்டாம் பரிசு பெற்றாள்.ஆசிரியை இருவரையும் வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தார்.இவர்களைப் பார்த்த மற்ற மாணவிகளும் போட்டியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டினர். அப்போ நீங்க குட்டீஸ்?***