உள்ளூர் செய்திகள்

சமத்து வெட்டுக்கிளி!

தோட்டத்தின் ஓரத்தில் பச்சைப் பயிர்கள் செழிப்பாக வளர்ந்திருந்தன. இரண்டு ஆடுகள் அந்தப் பச்சைப் பயிர்களை எல்லாம் நன்கு ருசித்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தன.அப்போது அந்தப் பச்சை பயிர்களின் இடையே வெட்டுக் கிளியானது அப்படியும், இப்படியுமாகப் பறந்து கொண்டிருந்தது. இரண்டு ஆடுகளும் அந்த வெட்டுக் கிளியைப் பார்த்து ஆத்திரமடைந்தன.''வெட்டுக்கிளியே, நாங்கள் இரை தேடுகிற இடத்தில் நீ எதற்காக இப்படியும், அப்படியுமாக பறந்து கொண்டிருக்கிறாய்?'' என்று கேட்டன ஆடுகள்.''ஆடுகளே, இதென்ன கேள்வி, பச்சைப் பயிர்கள் எங்கெல்லாம் காணப்படுகிறதோ அங்கெல்லாம் நான் இருப்பேன். நீங்கள் இரை தேடிக் கொண்டிருக்கிறீர். அதற்கு நான் எந்த இடையூறும் செய்யவில்லையே,'' என்றது வெட்டுக்கிளி.''வெட்டுக்கிளியே, நீ எங்களுக்கு எந்த இடையூறும் செய்யவில்லை. ஆனால், நாங்கள் இரை தேடுகிற இடத்தில் நீ சுற்றிக் கொண்டிருக்காதே. மரியாதையாக இந்த இடத்தை விட்டுச் சென்றுவிடு,'' என்றது ஒரு ஆடு.''வெட்டுக்கிளியே, நாங்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு இந்த இடத்தை விட்டுப் பறந்து சென்றுவிடு. இல்லையென்றால், உன்னை நாங்கள் எங்கள் கால்களால் மிதித்துக் கொன்று விடுவோம்,'' என்றது மற்றொரு ஆடு.''எங்கே மிதியுங்கள் பார்க்கலாம்,'' என்று கூறிய வெட்டுக் கிளியானது ஒரு ஆட்டின் முதுகில் பறந்து சென்று அமர்ந்துக் கொண்டது.மற்றொரு ஆடோ வெட்டுக் கிளியை குறி பார்த்து ஓங்கி மிதித்தது. உடனே அந்த ஆடானது பொத்தென்று தரையில் விழுந்தது. வெட்டுக்கிளியோ வேறு எங்கோ பறந்து சென்றது.கீழே விழுந்த ஆடானது கோபத்துடன் தரையிலிருந்து எழுந்தது. தன்னை கீழே விழும்படியாக எட்டி உதைத்த மற்றொரு ஆட்டைக் காலால் உதைத்தது. உடனே அந்த ஆடும் பொத்தென்று தரையில் விழுந்தது.உடனே தரையை விட்டு எழுந்துகொண்ட அந்த ஆடானது பதிலுக்குத் தன் கொம்புகளால் அந்த ஆட்டை முட்டிக் கீழே தள்ளியது.இப்படியே இரண்டு ஆடுகளும் ஒன்றையொன்று தாக்கியபடியே கடுமையான முறையில் சண்டையிட்டன. இக்காட்சியினை சற்றுத் தூரத்தில் புல்லின் நுனியில் அமர்ந்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது வெட்டுக்கிளி.இரண்டு ஆடுகளும், ஆணவத்தால் என்னை எப்படியாவது விரட்ட வேண்டும் என்று முடிவு செய்தன. இப்போது அவைகளே ஒன்றுக்குள் ஒன்று சண்டையிட்டபடி இந்த இடத்திலேயே இரை தேடிக்கொள்ள முடியாதபடி செல்லப் போகின்றன.ஆணவக்கார ஆடுகளுக்கு இதுதான் சரியான தண்டனை என்று தன் மனதுக்குள் கூறிக்கொண்டது வெட்டுக்கிளி.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !