எனக்குத்தான்!
ஒரு காட்டில் குரங்கும், மானும் நண்பர்களாக வாழ்ந்தன. குரங்கு பிடிவாத குணம் கொண்டது. சில சமயம் அது சுயநலத்தோடும் நடந்து கொள்ளும். ஆனால், மான் மிகவும் சாது. நற்குணம் கொண்டது.ஒருசமயம் காட்டில் தொடர்ந்து பல நாட்களாக மழை பெய்தது. மழைக்குப் பயந்த குரங்கும், மானும் பாதுகாப்பாக ஒரு குகைக்குள் சென்று வசித்தன. ஒரு வழியாக மழை ஓய்ந்தது. லேசாக வெயில் அடிக்கத் தொடங்கியது. ஆங்காங்கே தேங்கிக் கிடந்த நீர் சற்று வடியத் தொடங்கியது.''குரங்கே, இரண்டு நாட்களாக குகைக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறோமே! கொஞ்சம் வெளியே சென்று உணவு தேடி விட்டு வரலாம்!'' என்று மான் சொன்னது.குரங்கும் அதற்கு சம்மதித்தது. இரண்டும் குகையை விட்டு வெளியே வந்தன.இரண்டும் ஆற்றங்கரை பக்கமாக வந்தன. மழையால் ஆறு நிரம்பி ஓடிக் கொண்டிருந்தது. அவ்வேளையில், ஆற்றில் ஒரு வாழை மரம் மிதந்து வந்து கொண்டிருந்ததை குரங்கு பார்த்தது. அதைப் பற்றி மானிடம் கூறியது.உடனே மானும், ''நாம் அந்த வாழை மரத்தை எடுத்து வேறொரு இடத்தில் நட்டு வைப்போம்! பிறகு வாழையில் கனிகள் தோன்றும். தொடர்ந்து வாழைக்கன்றுகள் வளரும். நாம் உணவிற்காக வேறெங்கும் அலைந்து திரிய வேண்டாம்,'' என்று கூறியதுகுரங்குக்கும் அது நல்ல யோசனையாகத் தோன்றவே, அதற்கு சம்மதித்தது.வாழைமரம் அருகில் மிதந்து வரும்வரை காத்திருந்த மான் மெதுவாக ஆற்றில் இறங்கி, வாழை மரத்தை கரைக்கு இழுத்து வந்தது. ஒருவழியாக வாழை மரத்தை அவை இரண்டும் தரைக்குக் கொண்டு வந்து சேர்ந்தன.அந்நேரத்தில் குரங்கிற்கு ஒரு சுயநல புத்தி தோன்றியது. அது மானிடம், ''இந்த வாழை மரத்தை நான்தான் முதலில் பார்த்தேன். அதனால் இது எனக்குத்தான் சொந்தம்!'' என்று கூறியது.''ஏன் அப்படியெல்லாம் கூறுகிறாய்? நான் தான் ஆற்றுக்குள் இறங்கி அதை இழுத்து வந்தேன். நாம் இருவருமே இதை நட்டு வைத்தால், நம்மிருவருக்குமே அது பயன்படும் அல்லவா?'' என்று பொறுமையோடு பதில் கூறியது மான். ஆனால், குரங்கு அதற்கு சம்மதிக்க வில்லை.''அப்படியென்றால் இந்த வாழை மரத்தை நாம் ஆளுக்குப் பாதியாக எடுத்துக் கொள்வோம்! அதன் பலனை நாம் தனித் தனியே அனுபவிப்போம்!'' என்று பிடிவாதமாகக் கூறியது குரங்கு.குரங்கின் பிடிவாதம் மானுக்கு தெரியும். ஆதலால், ''சரி, உனக்கு வேண்டிய பாகத்தை நீ எடுத்துக்கொள். அதன் பிறகு என் பாகத்தை நான் எடுத்துக் கொள்கிறேன்,'' என்று பொறுமையாக பதில் கூறியது மான்.'இலைகளும், தழைகளுமாக இருக்கும் மேற்பக்கத்தில்தானே வாழைக் குலை வரும்' என்று நினைத்த குரங்கு, வாழை மரத்தின் மேல் பாகம்தான் தனக்கு வேண்டும் என்று கூறியது.மானும் அதற்கு சம்மதித்து, மேல் பாகத்தை குரங்கிடம் கொடுத்துவிட்டு, கீழ்ப்பாகத்தை தான் எடுத்துக் கொண்டது. இரண்டும் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று மரத்தைத் தனித்தனியே நட்டு வைத்தன.மான், தான் நட்டுவைத்த வாழை மரத்திற்கு தினமும் தண்ணீர் ஊற்றி, உரமிட்டது. ஆனால், குரங்கோ, ஏற்கெனவே நன்றாக இலையும், தழையு மாக இருக்கும் வாழை மரத்திற்கு நான் ஏன் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று சோம்பேறித் தனமாக இருந்தது. மழைக்காலம் முடிந்து, வெயில்காலம் ஆரம்பமாகி விட்டதால், வாழை இலைகளும் தண்டும் கருகி விட்டன. ஆனால், மானின் வாழை மரமோ வேர்ப்பகுதி ஆகையால் நன்றாக துளிர்ந்து, தழைத்து வளர்ந்தது. அந்த மரம் வாழைக் குலையும் ஈன்றிருந்தது.சில மாதங்களுக்கு பின், குரங்கு தன் மரத்தைச் சென்று பார்த்தது. வாழை மரம் கருகிப்போய் கிடந்தது. உடனே குரங்கிற்கு, மானின் வாழை மரம் எப்படி இருக் கிறது என்று பார்க்கும் ஆசை வந்தது. எனவே, அது மானின் இருப்பிடத்திற்குச் சென்றது. மானின் வாழைமரம் நன்றாகச் செழித்து வளர்ந்து, குலையும் ஈன்றிருந்தது. வாழைப்பழம் நன்றாகப் பழுத்துத் தொங்கிக் கொண்டிருந்தது.மானிடம் ,''என் சோம்பல் குணத்தால் வாழை மரத்தை இழந்தேன். அது கருகிப் போய்விட்டது. நீ தினமும் தண்ணீர் ஊற்றி வளர்த்ததால், அது குலை ஈனும் அளவிற்கு நன்றாக வளர்ந்துள்ளது!'' என்று கூறி தன் தவறுக்காக வருந்தியது குரங்கு.உடனே மானும், ''உன் பிடிவாதக் குணமும், சுயநலமும் தான் உனக்கு வருத்தத்தை உருவாக்கியது. நீ வாழை மரத்தின் மேல் பகுதியை நட்டு வைத்தாய். வேர் இல்லாத மரம் எப்படி வளரும்? அதை நீ நினைத்துப் பார்க்கவே இல்லை. நீ உன் வாழை மரத்திற்கு நீர் ஊற்றி வந்தாலும் வேர் இல்லாத மரம் கருகித்தானே போகும். நீ கவலைப்படாதே! இனியாவது உன் பிடிவாதக் குணத்தையும், சுயநலக் குணத்தையும் மாற்றிக் கொள். இந்த வாழைமரத்தின் கனிகளை நாம் பகிர்ந்து உண்போம். அதுபோல் இதில்தோன்றும் கன்றுகளை நாம் ஒன்றாகச் சேர்ந்து பராமரிப்போம். அதன் பலன்களை ஒன்றாக இணைந்து அனுபவிப்போம்!'' என்று கூறியது.மானின் அறிவுரையை ஏற்றுக் கொண்ட குரங்கு தனது பிடிவாதம், சுய நலம், சோம்பல் போன்ற அனைத்துத் தீய குணங்களையும் விட்டொழித்தது.***