நடுஇரவு பதிமூன்று மணி!
17-வது நூற்றாண்டில் மூன்றாவது வில்லியம் என்ற அரசர் இங்கிலாந்து நாட்டை ஆண்டு வந்தார். அவர் வின்ஸர் அரண்மனையில் வாழ்ந்து வந்தார். அரண்மனைக் காவலர் ஜான் ஹாட்பீல்ட் என்பவர் காவல் காத்துக் கொண்டிருக்கும் போது தூங்கிவிட்டார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.ஜான் ஹாட்பீல்ட் குற்றச்சாட்டை மறுத்தார். அவர் 'நள்ளிரவில் புனித பால் தேவாலயத்திலிருந்து, பதிமூன்று மணிகள் அடிக்கப்பட்டதைக் கேட்டேன்' என்றும், ஆகவே தான் நள்ளிரவில் தூங்கவில்லை என்றும் வாதாடினார்.எனினும், நீதிமன்றம், புனிதபால் தேவாலயம் 30 கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பதால், மணியோசை கேட்டிருக்க முடியாது என்றும், நள்ளிரவில் பன்னிரண்டு மணி தானே அடித்திருக்க முடியும் என ஹாட்பீல்டின் கூற்றை ஒத்துக் கொள்ளாமல் அவருக்கு மரண தண்டனை விதித்தது.ஹாட்பீல்ட் தனது மரண அறையில், தனது தண்டனைக்காக காத்திருந்தார். ஆயினும் இதற்கிடையில் அநேக சாட்சிகள் வந்து அந்த நள்ளிரவில் புனித பால் தேவாலயத்திலிருந்து உண்மையிலேயே பதிமூன்று மணியடித்தது என்று கூறவே, அவர் மன்னிக்கப்பட்டு விடுதலையானார்.