உள்ளூர் செய்திகள்

ஜிம்பலக்கா ஜீம் (3)

சுங் தலைகநரத்தை அடைந்தபோது நண்பகல் ஆகிவிட்டது. அவனுக்குப் பசியெடுத்தது. அவனும் தன் சகோதர்கள் போன சாப்பாட்டுக் கடையையே முதலில் பார்த்து அங்கே சென்றான். அவனிடம் பணம் இல்லாதால் என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருந்தான். கடைக்காரன் அவனைப் பார்த்துவிட்டான். முந்திய இரண்டு நாள் வந்தவர்களின் தம்பிதான் இவன் தோற்றத்தைக் கண்ட கடைக்காரன் ஊகித்துவிட்டான்.கடைக்காரன் பாய்ந்துவந்து சுங்கின் சட்டையைப் பிடித்துக்கொண்டான். ''டேய், நேத்திற்கு உன்னோட அண்ணன் செஞ்சமாதிரி இலவசமா சாப்பிட்டிட்டு தப்பிச்சிடாலம்னு பார்க்கிறா? நீ மீசை உள்ள ஆம்பிளைதானே. முதல்ல காசை வை. அப்புறம் ஆசை தீர சாப்பிடு. இல்லாட்டா பூசை தான் விழும்,'' என்று கூச்சல் போட்டான்.சுங் பயந்து போனான். அதேசமயம் முந்திய நாள் தன் அண்ணன் சிங் அங்கு வந்திருந்தான் என்று அறிந்து அவனுக்குக் கொஞ்சம் நிம்மதியும் ஏற்பட்டது.''நேத்திக்கு என்னோட அண்ணன் இங்க வந்திருந்தான்னு தெரிஞ்ச கொஞ்சம் ஆறுதலா இருக்குங்க. இதிலேயே பாதிப் பசி அடங்கிப் போச்சுங்க. அவன் இப்போ எங்க இருக்கான்னு உங்களுக்குத் தெரியுமா?'' என்று சுங் விசாரித்தான்.கடைக்காரன் அலுத்துக்கொண்டான். ''அவன் எங்கே போய்த் தொலைஞ்சானோ யாருக்குத் தெரியும்? நேத்திக்கு இங்கதான் சாப்பிட்டான். ஆனா காசு தரலை. அவனை நான் திட்டினேன். அவன் தன்கிட்ட இருந்த கிழிஞ்ச குல்லாவை கட்டுனு மாட்டிக்கிட்டான். ஓடப் பார்க்கிறான்னு பிடிக்கக் போனேன். திடீர்னு அவன் ஆளே காணாம போயிட்டான்! அவன் போட்டுக்கிட்டது ஏதாவது மாயக் குல்லாயான்னு தெரியலை. முந்தா நாளு இன்னொருத்தன் வந்தான். பார்க்கிறதுக்கு உன்னை மாதிரியேதான் இருந்தான். அவன் பழைய பர்சு ஒண்ணு வச்சிருந்தான். அது மாய பர்சுன்னு நினைக்கிறேன். அதிலிலேயிருந்து அவன் எடுக்க, எடுக்க தங்கக்காசா வந்திச்சு. இந்த விஷயம் ராணியம்மாவுக்கு தெரிஞ்சுபோயி, அரண்மனை சிப்பாய்கள் வந்து, அவனை பிடிச்சுக்கிட்டு போயிட்டாங்க,'' என்று கடைக்காரன் விளக்கினான்.சுங்கிற்கு நிலைமை தெளிவாயிற்று. தன் சகோதர்கள் இருவரும் இதே இடத்திற்கு வந்திருக்கின்றனர். நடு அண்ணன் சிங்கைக் காவலர்கள் பிடித்துக்கொண்டு போனது பெரிய அண்ணன் சங்கிற்குத் தெரிந்திருக்கும். சிங்கைத் தேடிப்போன சங்கையும் காவலர்கள் பிடித்துக் சென்றுவிட்டார்கள் போலிருக்கிறது என்று சுங் கருதினான். அதெல்லாம் சரி, ஆனால், இந்த சாப்பாட்டுக் கடைக்காரன் மாய பர்ஸ், மாயக் குல்லா என்று என்னமோ சொல்கிறானே என்று சுங் குழம்பினான்.''நீங்க சொன்னதிலேர்ந்து என்னோட அண்ணன்ங்க ரெண்டு பேரும் இங்க சாப்பிட்டப்புறம் ஏதோ அரண்மனை விவகாரத்தில மாட்டிக்கிட்டாங்கபோல இருக்கு. அப்படின்னா அநேகமா சிறையில அடைச்சிருப்பாங்க. நான் போய் விசாரிச்சு பார்க்கிறேன்,'' என்றான் சுங்.வாயில் காவலர்கள் சுங்கை உள்ளே விட மறுத்தனர். அவனது ஏழ்மைத் தோற்றத்தையும், பழைய ஆடைகளையும் பார்த்துக் காவலர்கள் அவனைப் பிச்சைக்காரன் என்று நினைத்தனர். சகோதரப் பாசம் காரணமாக அவன், ''ராணியம்மாவை பார்த்தாகணும்,'' என்று கூக்குரலிட்டான்.சத்தம் கேட்டு ராணி மாடியிலிருந்து எட்டிப் பார்த்தாள். கடந்த இரண்டு நாட்களில் அவள் சிறைக்கு அனுப்பியர்களின் சாயல் இவனிடமும் தெரிந்ததைக் கவனித்தாள். இவன் அவர்களுடைய தம்பியாக இருப்பான் என்று ஊகித்தாள். ஆகவே இவனிடமும் ஏதாவது அதிசயப் பொருள் இருக்கும் என்று அவளுக்குத் தோன்றியது. அதைப் பிடுங்கிக் கொண்டு இவனையும் சிறையில் தள்ளிவிட வேண்டும் என்று ராணி முடிவு செய்தாள். காவலர்களைக் கைதட்டி அழைத்து, ''அந்த இளைஞனை என்னிடம் அழைத்து வாருங்கள்,'' என்று சொல்லி விட்டுக் கீழே இறங்கி வந்தாள்.சுங் ராணியைப் பார்த்ததும் பணிவுடன் வளைந்து வணங்கினான்.''நீ யார்? உனக்கு என்ன வேண்டும்? எதற்காகக் காட்டு கூச்சல் போட்டாய்?'' என்று ராணி அதட்டிக் கேட்டாள்.''மகாராணியம்மா! எனக்கு ரெண்டு அண்ணன்ங்க, முந்தாநாள் என்னோட நடு அண்ணனை அரண்மனை காவலாளிங்க பிடிச்சுகிட்டு போயிட்டாங்கன்னு தெரு கடைசியில இருக்கிற சாப்பாட்டுக் கடைக்காரரு சொன்னாரு. அவனைத் தேடிக்கிட்டு என்னோட மூத்த அண்ணன் இந்தப் பக்கமா வரச்சே சாப்பாட்டுக் கடையில போய் விசாரிச்சிருக்காரு. பேசிக்கிட்டிருக்கச்சே திடீர்னு காணாமா போயிட்டாராம். நடு தம்பியை தேடிக்கிட்டு இங்கு வந்து காவலாளிகளோட தகராறு செஞ்சிருப்பாரு. அதனால அவங்க சிறையில அடைச்சிட்டாங்கன்னு நினைக்கிறேன். விஷயத்தை சரியா தெரிஞ்சுக்கிறதுக்காக நான் வருந்திருக்கேன்.''ஓஹோ, அப்படியா விஷயம். அந்த தடிப்பசங்க உன்னோட அண்ணன்களா? ஒருத்தன் தங்கமா கொட்டற மாய பர்சு வச்சிருந்தான். இன்னொருத்தன், உடம்பை மறைஞ்சுபோக செய்யற மாயத் தொப்பி வச்சிருந்தான். இப்படி அபூர்வமான வஸ்துக்கள் யாருக்காவது கிடைச்சா அதை அரசாங்க கஜானாவில ஒப்படைக்கணுமே தவிர, தானே வச்சுக்க கூடாதுன்னு சட்டம் இருக்கு, தெரியுமா? அதை மீறினதாலதான் அவங்களுக்கு சிறை தண்டனை கிடைச்சிருக்கு.'' ராணி அந்தப் பொருட்களுக்காக தான் பேராசைப் பட்டத்தை சாமர்த்தியமாக மறைத்துவிட்டாள்.''அப்படியிருக்க முடியாதே, மகாராணியம்மா! அவங்கிட்ட பர்சும், தொப்பியும் இருந்தது உண்மைதான். ரெண்டு ரொம்ப பழசாச்சே. கிழிஞ்சும் அழுக்கேறியும் இருந்துச்சே. அதில போய் மாயமாவது மந்திரமாவது. சும்மா எங்கப்பா ஞாபகத்திற்காக வச்சிருந்தாங்க... அவ்வளவுதான்,'' என்று சுங் ஆட்சேபித்தான்.''டேய்! நீ விஷயத்தை மழுப்பறே. மத்தவங்களுக்கு ரகசியம் தெரிஞ்சுவிடக் கூடாது, சந்தேகம் வரக்கூடாதுன்னுதான் உன் அண்ணன்கள் வேண்டும்னே அந்த அபூர்வ வஸ்துக்களை அழுக்காக்கி அலங்கோலப்படுத்தி வச்சிருக்காங்க. நீயும் அப்படித்தான் ஏதாவது அதிசயப் பொருள் கொண்டு வந்திருப்பே, மத்தவங்க கண்ணுக்கு அது குப்பையில எறியதுக்குத்தான் லாயக்குன்னுதோணும். உன்னிடம் என்ன உள்ளது. எடுத்துக் காண்பி பார்க்கலாம்,'' என்று ராணி அதட்டினாள்.''நான் வச்சிருக்கிறது நிஜம்மாவே குப்பைத் தொட்டியில எறியறதுக்குத்தாங்க லாயக்கு. அப்பா நினைவாத்தான் இதை எறியாம வச்சிருக்கேன்,'' என்றபடி சுங் தன்னிடமிருந்த மாட்டுக்கொம்பை எடுத்துக் காட்டினான்.''இதில என்ன அதிசய சக்தி அடங்கியிருக்கு?'' என்று ராணி கேட்டாள்.''இதில போயி என்ன மண்ணாங்கட்டி சக்தி இருக்கப் போகுது,'' என்றாள் சுங் சலிப்புடன்.''இதை நீ பயன்படுத்தி பார்த்தாயா? அதிசயமாக ஏதாவது நடந்ததா?'' என்றாள் ராணி.''இதை எந்த விதத்தில் பயன்படுத்தறது? தலைல வச்சு கட்டிக்கிறதா? அப்படி செஞ்சா ஒத்தைக் கொம்பு மாடு மாதிரியில்ல தெரிவேன்,'' என்றான் சிங்.''ஏன், கொம்பை ஊதிப்பாரேன்,'' என்று தூண்டினாள்.சுங் மாட்டுக் கொம்பில் வாய் வைத்து ஊதினான். 'பூம்...ம்! என்ற சத்தம் கேட்டது. சிறு புகை மண்டலம் எழும்பியது. அதிலிருந்து ஒரு பூதம் கிளம்பியது. ''நான் நல்லா தூங்கிக்கிட்டிருந்தப்போ யாருடா கொம்பை ஊதி எனக்குத் தொந்தரவு கொடுத்தவன்?'' என்று அது கர்ஜித்தது.சுங் நடுங்கிவிட்டான். ''என்னை மன்னிச்சிடுங்க, தெரியாத்தனமா நான்தாங்க கொம்பை ஊதினேன். நீங்க மறுபடியும் தூங்கப்போங்க, இனிமே கொம்பை ஊதி உங்களை தொந்தரவு பண்ண மாட்டேங்க,'' என்று சுங் பணிவுடன் கூறினான்.பூதமோ அவன் காலைத் தொட்டு வணங்கியது! அடக்கமான குரலில், ''இது மாயக் கொம்புங்க. இதை யார் எடுத்து ஊதறாங்களோ அவங்கதான் என்னோட எஜமான். நான் அவரோட அடிமை. நான் இப்போ என்ன செய்யணும்? கட்டளை இடுங்க, எஜமான்.''சுங் நிலைமையைப் புரிந்துக்கொண்டான். அவன் மூளை மின்னல் வேகத்தில் இயங்கியது. ''இந்தாங்க பூதநாதரே! இந்த ராணியம்மா கிட்டேயிருந்து என் அண்ணன்களோட பர்சையும், தொப்பியையும் பிடுங்குங்க, கொடுங்கோல் ஆட்சி செஞ்சதுக்காக இவளை சிறையில போடுங்க. சிறையில் கிடக்கிற என் அண்ணன்களை விடுவிச்சு அழைச்சுகிட்டு வாங்க. ராணியை ஆதரிச்சு உங்களை யாராவது தடுத்தா, எதிர்த்தா, அவங்களையெல்லாம் அப்பளமா நொறுக்கிடுங்க.''''ஜீ பூம்மா! ஜிம்பலக்கா! பல்லேலக்கா!'' என்றெல்லாம் முழங்கியபடி பூதம் கிளம்பி, சுங் இட்ட கட்டளையெல்லாம் கச்சிதமாகச் செய்தது. ராணி கொடுங்கோல் ஆட்சி நடத்தியவளாதலால் அவளைக் கைசெய்தபோதும் யாரும் அவளைக் காப்பாற்ற முன்வரவில்லை.சிறையிலிருந்த சகோதரர்கள் விடுதலையானதும் தங்கள் தம்பி சுங் அரண்மனையில் இருப்பதைக் கண்டு வியப்படைந்தனர். எல்லா விவரமும் அறிந்து அவர்கள் தம்பியைத் தழுவிக் கொண்டனர், பிறகென்ன?மூத்தவனான சங் அரசனாகப் பதவி ஏற்றான். மக்களுடைய பிரச்னைகளை அவர்கள் கூறாமலேயே, அவர்கள் அறியாமலே தெரிந்துக்கொண்டு தீர்த்துவைக்க மாயத் தொப்பியை அணிந்து கொண்டு நகரத்தில் அவ்வப்போது சென்று பார்த்தான்.நடு சகோதரன் சிங் அந்த நாட்டின் அமைச்சரானான். மாய பர்சின் உதவியுடன் கஜானாவைத் தங்கக் காசுகளால் நிரப்பி நிதி நிலைமையை வலுப்படுத்தினான். இதனால் எந்தப் பொருளுக்கும் பற்றாக்குறை ஏற்படாடமலிருக்க வழிசெய்தான்.கடைக்குட்டியான சுங் படைத்தலைவராகப் பதவி ஏற்றான். தேவைப்பட்ட பொழுது கொம்பை முழங்கி பூதநாதரை வரவழைத்து உள்நாட்டிலும், வெளியிலும் எதிரிகளே இல்லாதபடி செய்து அமைதிப் பூங்காவாக ஆக்கினான்.மூன்று சகோதர்களும் மாய சக்தி நிறைந்த பர்ஸ், தொப்பி, மாட்டுக்கொம்பு மூன்றையும் தேவைப்பட்டபோது பயன்படுத்திக் கொண்டார் கள். மற்ற நேரங்களில் அவற்றைத் தந்தையின் நினைவுச் சின்னங்களாக வணங்கி வந்தனர். முற்றும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !