மொழிப்பற்று!
சென்னை, திருநின்றவூர், ஜெயா உயர்நிலைப் பள்ளியில் 2005ல், 8ம் வகுப்பு படித்தபோது, தமிழ் ஆசிரியையாக இருந்தார், புனிதவள்ளி. பாடங்களை இயல்பாக கற்பித்து பசுமரத்து ஆணி போல மனதில் பதிய வைப்பார். இலக்கணக் குறிப்புகளையும், செய்யுள்களையும் மிக இனிமையாக கற்றுத் தந்தார். தமிழ் மொழி மீது, தீராத ஆர்வத்தை ஏற்படுத்தினார்.அந்த மோகத்தில், மன்னர் கால துாய மொழி நடையில் வசனம் பேசி திரிந்தேன். சக மாணவர்கள் கிண்டல், கேலி செய்தனர். எதையும் பொருட்படுத்த வில்லை. மனம் தளராமல் விளையாட்டு போக்கில் பாடங்களை தெளிவாக கற்றேன். அடுத்த ஆண்டு, வேறு பள்ளியில் சேர வேண்டிய சூழல் ஏற்பட்டது. பாடங்களை மிக இயல்பாக சுவைத்து படித்துக் கொண்டிருந்த நான், அங்கு மதிப்பெண்ணுக்காக மனப்பாடம் செய்யும் மாணவர்களை கண்டேன். மிகவும் வியப்பு ஏற்பட்டது. நன்றாக படித்து முறையாக தேர்ச்சி பெற்று பொறியியல் கல்லுாரியில் சேர்ந்தேன். அங்கு தமிழ் மொழிப் பாடம் இல்லாதது ஏமாற்றம் தந்தது. தமிழில் ஈடுபாடு கொண்டவர்களுடன் நட்பு கொண்டு சிறப்பாக படித்து முடித்தேன். தற்போது என் வயது, 29; தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணி செய்து வருகிறேன். மொழியின் மீது பெரும் ஈடுபாட்டை ஏற்படுத்திய அந்த ஆசிரியையை மனம் மறக்கவில்லை.- பரத் துவாரகாநாத், சென்னை.தொடர்புக்கு: 74183 85629