உள்ளூர் செய்திகள்

மடையர்கள்!

இரண்டு நண்பர்கள் ஒரு சமயம் ஓர் ஊருக்குச் செல்ல நேர்ந்தது. அவர்கள் இருவரும் மடையர்கள் என்று கூடச் சொல்லலாம் அல்லது எதைப் பற்றியும் சிரத்தையோ, அக்கறையோ இல்லாத உதவாக் கரைகள். அவர்கள் செல்லும் வழியில் ஆறு ஒன்று குறுக்கிட்டது. 'ஆற்றில் இறங்கி அதைக் கடந்து செல்ல வேண்டுமே' என்று எண்ணி திகில் அடைந்தனர்.ஒருவன் சொன்னான், ''ஆற்றில் இறங்குவது பெரிதல்ல... ஆனால், சமயம் பார்த்து இறங்க வேண்டும்!'' என்றான்.''சமயம் பார்த்து என்றால்?'' கேள்வி கேட்டான் இரண்டாம் நண்பன். ''ஆறு தூங்கும் போது தான் கடந்து செல்ல வேண்டும். இல்லாவிட்டால் ஆறு நம்மைப் பிடித்துத் தின்று விடும்!'' என்றான்.''சரி!'' என்றான் மற்றவன்.அவர்கள் அங்கேயே உட்கார்ந்து சமையல் செய்து சாப்பிட்டனர்.''இப்போது அநேகமாக ஆறு தூங்கி இருக்கும்!'' என்று கூறினான் முதல் நண்பன்.''சரி, சோதித்து விடலாம்,'' என்று இருவரும் முடிவு செய்தனர். இருவரும் கையில் கிடைத்த இரண்டு கட்டைகளுடன் ஆற்றருகே சென்றனர்.முதலாவது நண்பன் கொண்டு வந்திருந்த கட்டை, அடுப்புக்காக வெட்டிப் போடப் பட்டிருந்த பச்சை விறகு. அதை நீரில் அழுத்தினான். சத்தம் இல்லை.''ஆஹா... ஆறு தூங்கிவிட்டது!'' என்று அவன் துள்ளிக் குதித்தான். இரண்டாவது நண்பன் சொன்னான், ''எனக்கு நம்பிக்கை யில்லை. ஒருவேளை அது செய்வது பாசாங்காக இருந்தால்?''''அதுவும் சரிதான்!'' என்றான் முதல் நண்பன்.இரண்டாமவன் கொண்டு வந்திருந்தது அடுப்பில் எரிந்த கொள்ளிக்கட்டை. அவன் அதைத் தண்ணீரில் முக்கவே, சுரீர் என்ற சத்தம் கேட்டது.''ஓஹோ, ஆறு விழித்துக் கொண்டே தூங்குவது போலப் பாசாங்கு செய்திருக் கிறதே... அதன் முதுகில் ஒரு சூடு போட்ட வுடன் வேஷத்தைக் கலைத்து, வேதனையால் கத்துகிறது,'' என்றான் இரண்டாவது நண்பன்.அவர்கள் மீண்டும் வந்து கரையில் காத்திருக்க ஆரம்பித்தனர்.இப்படிப்பட்ட அடி முட்டாள்களும் உலகில் இருக்கத்தான் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !