உள்ளூர் செய்திகள்

சிகப்பழகி! (8)

முன்கதை: செவ்வாய் கிரகத்தில் அதிகார போட்டியால் பூமிக்கு வந்தாள் சிகப்பழகி. கல்வி சுற்றுலாவாக தஞ்சை பெரிய கோவிலுக்கு போன பள்ளி மாணவி கீதாவை மயக்கி, சுரங்கப்பாதைக்கு அழைத்து வந்து, ஆயிரம் ஆண்டுக்கு முன் நடந்த நிகழ்வுகளை காட்டினாள்; வியந்தபடி பார்த்தாள் கீதா. இனி - 'மாமன்னர் வருகிறார்...' அறிவிப்பு செய்பவன் உரத்த குரலிட்டான்.'ராஜாதி ராஜ... ராஜகுல திலக கம்பீர ராஜ மார்த்தாண்ட சோழர் குல சக்கரவர்த்தி மாமன்னர் வருகிறார். பராக்... பராக்... பராக்...' அப்போது, பெரும் துந்துபி ஊதப்பட்டது. மேளதாள முழக்கங்களுடன், தடாகம் வந்தார் மன்னர்.அதைக் கண்டதும், ''மாமன்னர் பெரு உடையார் கொடுத்த பெரும் வள்ளல் பொன்னியின் செல்வர் ராஜராஜன் வாழ்க...'' என தன்னையும் அறியாமல், பெரும் குரலிட்டாள் கீதா.இது கேட்டு திரும்பினார் மன்னர்.'ஏன் உணர்ச்சி வசப்பட்டாய். குரல் வந்த திசையை நோக்குகிறார் மன்னர். உடனே, என் பின்னால் மறைந்து கொள்...' என்றாள் சிகப்பழகி. ஒளிந்தாள் கீதா. தலை திருப்பிய மன்னர் அழகான குயில் கூவுவதை கவனித்து, 'ஓ... இது தான் குரலிட்டதா...' என்றபடி ஒரு அறையில் பிரவேசித்தார்.அந்த அறையில் பெரும் புகை மூட்டம் எழுந்தது.''ஐயோ... என்ன இது... ஏன் இந்த அளவுக்கு புகை வருகிறது...'' என்றாள் கீதா.'மகாராணியும், குந்தவை நாச்சியாரும் குளித்து, பட்டாடை அணிந்ததும் வாசனை புகை மூட்டம் போடப்பட்டுள்ளது... மன்னர் குளித்து, தமக்கையை நமஸ்கரித்ததும் சென்று விடுவர். பின், மன்னர் அரண்மனையில் பூஜை செய்ய போய் விடுவார்...'''ஓ... என்ன வாசம்... இது மாதிரி என் வாழ்நாளில் அனுபவித்ததே இல்லை... எல்லாவற்றிற்கும் காரணம், நீ தான்...'' என புகழ்ந்தாள் கீதா.'சரி... உன் ஆர்வம் பூர்த்தியானதா...' கேட்டாள் சிகப்பழகி.''ஆம்... ஆனால், இன்னும் ஒன்று பாக்கி உள்ளது. தடாகத்தை பார்க்க வேண்டும்...'' 'சரி வா... யார் கண்ணிலும் படாதவாறு அழைத்துச் செல்கிறேன்...'தடாகத்துக்கு அழைத்து சென்றாள் சிகப்பழகி.''என்ன வாசம்... உடலும், உள்ளமும் புத்துணர்வு பெற்று விட்டதே... தடாகத்தில், தங்கத்தில், தாமரை மலர்கள் பூத்திருக்கின்றன. ராஜராஜன் என்றால் சும்மாவா... எல்லாமே தங்கமயம் தான்...'' முகம் நனைத்துக் கொண்டாள் கீதா. சிரித்தபடி, 'தடாகம் ஏன் இவ்வளவு வாசம்மிக்கதாக இருக்கிறது என்று தெரியுமா...' என கேட்டாள் சிகப்பழகி. ''தெரியாது...'' 'முழுதும் வெறும் நீர் அல்ல; மாறாக, முழுக்க முழுக்க ரோஜா மலர்களை வைத்து உருவாக்கப்பட்ட பன்னீர். அத்துடன், சந்தனம், ஜவ்வாது போன்ற வாசமிகு பொருட்களும் கலக்கப்பட்டு இருக்கின்றன. இதில், அரச குடும்பத்தை தவிர, யார் குளித்தாலும் மரண தண்டனை தான் கிடைக்கும்...'இதைக் கேட்டதும் அதிர்ந்து விட்டாள் கீதா.''ஐயோ... நான் கால் வைத்து, முகம் கழுவி விட்டேனே...'' 'கவலை வேண்டாம்; என் சக்தியால், உன் உருவை மறைத்து விட்டேன். யாரும் பார்க்க முடியாது...' சிகப்பழகியை அன்புடன் கட்டிக் கொண்டாள் கீதா.'உன் ஆசைகள் பூர்த்தியானதா...' ''நன்றி... நன்றி...'' 'நீ கேட்ட இன்னும் ஒரு விஷயத்தை நான் மறக்கவில்லை...' என்றபடி, தீ பாய்ச்சுவது போல் பார்த்தாள் சிகப்பழகி.''ஏன் அப்படி பார்க்கிறாய்; பயமாக இருக்கிறது...'' 'பயம் வேண்டாம்... நீ தானே, செவ்வாய் கிரகத்துக்கு வர விரும்புவதாக கூறினாய்... அதை தான் ஞாபகப்படுத்தினேன்...' ''ஆம்... ஞாபகம் வந்து விட்டது. ஆனால், என் பெற்றோர் தேடுவரே. அவர்களை பிரிந்து என்னால் இருக்க முடியாது. என் பெற்றோரை விட, இந்த பூமியை விட, எனக்கு எதுவும் உயர்ந்தது இல்லை. செவ்வாய் கிரகத்துக்கு வரும் என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். அரியவற்றை காட்டிய உனக்கு கோடான கோடி நன்றி. இங்கிருந்து சீக்கிரம் போகலாமா... சுரங்கபாதை வழியாகவே சென்றால், எங்கள் குழு இருக்கும் இடத்தை அடைந்து விடுவேன். அதற்கு ஏற்பாடு செய்...'' என்றாள் கீதா.பயங்கரமாக சிரித்தாள் சிகப்பழகி.''ஏன் சிரிக்கிறாய்...''உடல் நடுங்க கேட்டாள் கீதா.'உன் ஆசைகள் எல்லாம் பூர்த்தி செய்த எனக்கும், ஒரு ஆசை உண்டு அல்லவா. அது நிறைவேற வேண்டாமா...' ''அது என்ன ஆசை...'''என்னுடன் செவ்வாய் கிரகம் வர வேண்டும்... இது என் கட்டளை...' புன்சிரிப்புடன், கீதாவின் கைகளை இறுக்க பற்றினாள் சிகப்பழகி.''விடு... நான் வர முடியாது... என் பெற்றோர் தான் முக்கியம்; செவ்வாய் கிரகம் தேவையில்லை...'' கண் இமைகளை, அடித்துக் கொண்டாள் சிகப்பழகி.''ஐயோ என்ன இது... ஒரே கும்மிருட்டு; அச்சமாக இருக்கிறதே...'' அழ ஆரம்பித்தாள் கீதா.- தொடரும்...ஜி.சுப்பிரமணியன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !