உள்ளூர் செய்திகள்

மாஜிக் மந்த்ரா! (28)

மங்காத்தா எதிர்பார்த்தபடி மந்த்ரா எல்லாரையும் முந்திக் கொண்டு முன்னேறினாள். மங்காத்தாவுக்கு ஒரே எரிச்சல். தன் 'கமால்' வேலையைக் காட்ட, தம் பிடித்து மந்த்ராவை அணுகியவள், தன் முழங்கையினால் மந்த்ராவை ஒரு இடி இடித்தாள். அவ்வளவுதான். பாவம் மந்த்ரா. மங்காத்தாவின் அந்த இடியை சமாளிக்க முடியாமல், தடுமாறித் தரையில் விழுந்தாள். மங்காத்தா ரிப்பன் அறுத்துக் கொண்டு கூட்டத்தினரின் கைத்தட்டல்களுக்கு இடையே முதலாவதாக போய் நின்றாள்.மைதானத்தில் வெற்றிக் கோட்டுக்கு சற்று முன்னதாக தரையில் குப்புற விழுந்திருந்த மந்த்ரா, தலை நிமிர்ந்து மங்காத்தா வெற்றி வீராங்கனையாகப் போய் நிற்பதை கண்டாள். 'நான் நிலை தடுமாறி விழுந்தது தற்செயலா... அல்லது... மங்காவின் வேலைத்தனமா?' என்று யோசித்த மந்த்ராவின் விரல்கள், மைதானத் தரையில் தாளமிட்டன.மங்காத்தா தன் அப்பாவிடம் ஓடி வந்தாள்.''எப்படி வந்தேன் பாத்தியா?'' என்றாள் மூச்சு வாங்க.''பாத்தேனே!'' என்று கண் சிமிட்டினான் மாடசாமி.''மங்கா என் பொண்ணு இல்லியா! இந்த 'டிரிக்' கைக் கையாண்டு எல்லாப் போட்டியில் முதலாவதா நீ வரதை நான் பாக்கணும்...ஓடு... ஓடு...!'' என்று உற்சாகப் படுத்தி அனுப்பினான் மாடசாமி.மடிடசாமிக்கு விளையாட்டுப் பந்தயங் களைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந் திருப்பது போர் அடித்தது. எல்லாருடைய கவனமும் பந்தயத்தில் இருக்க, பள்ளிக் கூடம் வெறிச்சோடிக் கிடப்பதும், அவன் கைகளில் ஓர் அரிப்பை ஏற்படுத்தியது.''பள்ளியை ஒரு ரவுண்டு அடிக்கலாம்... தோதா ஏதாவது சிக்கும்!'' என்ற முடிவோடு கிளம்பி விட்டான் ஒரு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு.அவன் முதலில் நுழைந்தது தலைமை ஆசிரியை தனபாக்கியத்தின் அறை. அங்கு பல பொருட்கள் மாடசாமியின் கவனத்தைக் கவர்ந்தன. கண்ணாடிக் கூண்டுக்குள் காட்சி தரும் கடிகாரம், பேனா, டேப் ரிகார்டர்... இப்படிப் பல. கலைப் பொருட்களும் சில. நாட்டியமாடும் பெண்ணைப் பெண்டுலமாகக் கொண்ட கடிகாரத்தை சுருட்டிக் கொண்டு போக தீர்மானித்த மாடசாமி, 'நம்ம தேட்டையை இங்கே ஆரம்பிக்கலாம்... அம்சமான கடிகாரம்!' என்று கையிலிருந்த பீடியை வீசிவிட்டு, கை களைத் தேய்த்துக் கொண்டு கலை யம்சம் கொண்ட கடிகாரத்தை ஆவலோடு அணுகினான். அவன் அலட்சியமாக வீசிய பீடி அங்கிருந்த குப்பைக் கூடைக்குள் விழுந்தது.பந்தய மைதானத் தில் தூரம் தாண்டுதல் (லாங் ஜம்ப்) போட்டி யில் மாணவிகள் ஈடுபட்டிருந்தனர். மந்த்ரா தாண்டிக் குதிக்க இலக்கிலிருந்து ஓடி வந்து கொண்டிருந்தாள். மந்த்ராவை ஒவ்வொரு பந்தயத்திலும் ஏதாவது கோல்மால் செய்து மண்ணை கவ்வச் செய்யத் திட்ட மிட்டிருந்த மங்காத்தா, மந்த்ரா அவளை தாண்டிப் போகும் போது செயற்கையாக 'அஷ்ஷ்ஷுவ்' என்று பலமாகத் தும்மினாள்.கால் ஊன்றித் தாவும் இடத்தையே குறி வைத்து ஓடிவந்து கொண்டிருந்த மந்த்ராவை, மங்காவின் திடீர் அதிர்வேட்டுத் தும்மல் நிலை தடுமாறச் செய்து விட்டது. அவள் கவனம் தடைபட்டு, வேகம் குறைந்து, தாண்ட முடியாமல் தளர்ந்து போய் தரையில் உட்கார்ந்து விட்டாள்.''சாரி... மந்த்ரா... ஒரே ஜலதோஷம்... எனக்கு தும்மலை அடக்க முடியல்லே!'' என்றாள் மங்காத்தா விஷமச் சிரிப்புடன்.'ஜலதோஷமா உனக்கு? நான் தாண்டிக் குதிக்க கால் பதிக்கும்போது, என்னைத் தடுமாற வைத்து நீ ஜெயிப்பதற்காக போட்ட விஷமத்தனமில்லையா. என் அப்பா, அம்மா இருக்கும் போது மாஜிக் ஏதும் செய்ய வேண்டாம்னு நினைத்தேன். ஆனா, பந்தயங் களிலே முதலாவதாக வர சூழ்ச்சி செய்த உன்னை சும்மா விடமாட்டேன்!' என்று ஆத்திர மடைந்தாள் மந்த்ரா.தாண்டும் இலக்கின் அருகில் போய் தளர்ந்து உட்கார்ந்து விட்ட மந்த்ராவை அடுத்து, மங்காத்தா 'லாங் ஜம்ப் போட்டிக்காக எட்டக் கால் வைத்து ஓடி வந்து கொண்டிருந் தாள். அதே வேளையில் மந்த்ரா குட்டிச் சாத்தானை கூப்பிட்டு, தன் உத்தரவை முடித்திருந்தாள்.மங்காத்தா குறியிட்ட தரையில் கால் பதித்துத் தாண்டுவதற்கு எவ்வினாள். எம்பியவள் அந்தரத்தில் அப்படியே நின்றாள்! அவளால் கீழே குதிக்க முடியவில்லை. கால்களை உதைத்துக் கொண்டு, கீழே வராமல் ஆதாரமில்லாமல், அந்தரத்தில் நின்றபடி தவிக்கும் மங்காத்தாவைக் கண்டு மைதானமே ஸ்தம்பித்தது.''ய்ய்யீ... நான்... நான் நட்ட நடுவிலே சிக்கிக்கிட்டேன்... என்னால நகர முடியலே!'' என்று பீதியோடு கத்தினாள் மங்கா.''கீழே குதிக்காமல் அந்தரத்திலே எப்படி, எதனால நிக்கிறா அந்தப் பொண்ணு? என்ன ஆச்சு...?'' கலவரப்பட்டது கூட்டம்.மங்காவின் தோழிகள் ஓடிப்போய், அந்தரத் தில் தவிக்கும் அவள் கால்களைப் பற்றி இழுத்தனர். அவளை தரைக்குக் கொண்டு வர...அதே சமயத்தில்...ஹெட்மிஸ்சின் அறையிலிருந்து நெருப்பு எரிந்துக் கொண்டே இருந்தது.அணைக்கப்படாத பீடித்துண்டு அக்கூடையிலிருந்த காகிதங்களோடு உறவு கொள்ளத் தீப்பிடித்துக் கொண்டது. அறையிலுள்ள பொருள்களைச் சுருட்டிக் கொண்டு போவதில் கவனமாக இருந்த மாடசாமி, வெகுநேரம் அந்தத் தீயை கவனிக்கவில்லை. அது கொழுந்து விட்டு எரியவே திடுக்கிட்டுப் போனவன், தன் பீடியினால் நிலைமை விபரீதமாகி விட்டதை அறிந்து பதறிப் போனான். ஜ்வாலை விட்டு எரியும் குப்பைக் கூடையை ஜன்னல் வழியே வெளியே வீசினான். ஆனால், பதட்டத் தில் அவன் குறி தவறவே, திரைச் சீலையில் தீக் கூடை மோதி அதிலும் தீப்பற்றிக் கொண்டது. மாடசாமி புகை யிலும், தீயிலும் திக்கு முக்காடிப் போய் <<உள்ளே மாட்டிக் கொண்டான். தீயும், புகையும் பந்தய மைதானத்திலிருந்த மாணவிகளின் கவனத்தை கவர்ந்தது.''ஏய்... ஹெட்மிஸ்சோட ரூமிலிருந்து புகை, தீ...'' என்றாள் ஒரு மாணவி பரபரப்போடு.''ஐயையோ! வாங்கடி போய் அணைக்க லாம்!'' என்று கோரசாக முழங்கியபடி மாணவி கள் ஹெட்மிஸ்சின் அறையை நோக்கிப் படை யெடுக்க, அந்தரத்தில் குதிக்கும் போசில் தவிக்கும் மங்காத்தா, ''ஏய்... ஏய்! என்னை இப்படியே விட்டுட்டு எங்கடீ போறீங்க!'' என்று கதற, மாணவிகளோடு ஓடிக்கொண்டி ருந்த மந்த்ரா போகிற போக்கில் தன் மந்திரத்தை விடுவித்து மாஜிக் செய்ய, மங்காத்தா 'தொபீர்' என்று முகம் தரையில் மோத விழுந்தாள்.ஏகமாகப் புகையும், ஜ்வாலையும் வரும் ஹெட்மிஸ்சின் அறையை சூழ்ந்து கொண்டிருந்த மாணவிகள், ''ஏய், உள்ளே யாரோ இருக்காங்க போலிருக்கு! அதோ பார்,'' என்றனர்.வெளியே வரமுடியாமல், தவிக்கும் மாடசாமியின் நிழலுருவைப் பார்த்து. ஆனால், மந்த்ரா அதற்குள் தீயை அணைக்க மந்திரம் போட்டுக் கொண்டிருந்தாள்.குபீரென்று அணை திறந்தாற்போல தண்ணீர் வெள்ளமாக வந்து கொட்ட, மாடசாமி அந்த தண்ணீர் வெள்ளத்தில் ஜன்னல் வழியே வெளியே வந்து விழுந்தான். இதற்குள் பந்தய மைதானக் கூட்டம் அங்கு வந்து கூடிவிட்டது. ஹெட்மிஸ் தனபாக்கியம் தன் அறை அலங்கோலமாகிப் போனதைக் கண்டு அப்செட்டாகிப் போனார்.''நல்லவேளை, பொருள்கள் பாழானாலும் மாணவிகள் யாரும் பாதிக்கப்படலே! என்று திருப்திப்பட்டவர், மாடசாமியைப் பார்த்து, ''இந்தா மேன் நீ என் அறைக்குள்ளே என்ன செய்துக்கிட்டிருந்தே?'' என்று கடுகடுத்தார்.''என்னை மன்னச்சிடுங்க ஹெட்சிஸ்சம்மா! நான் இனிமேல் இந்தப் பக்கம் தலைகாட்ட மாட்டேன். இங்கே மட்டுமில்லே, இனி எங்கேயும் திருட மாட்டேன். இந்தப் பழக் கத்தை இன்னியோட விட்டுடறேன்!'' என்று கூறினான்.குப்புற விழுந்த மங்காத்தாவும் அங்கு வந்தாள். தன் அப்பாவின் திருட்டுப் புத்தி யினால் ஏற்பட்ட அவமானத்தைப் புரிந்து கொண்டவள், ''ஆமாம் மிஸ், இனி நானும் திருந்திட்டேன். என் அப்பாவோட திருட்டு புத்தி என்னையும் கெடுத்துட்டுது. இனி நான் யாரையும் ஏமாத்த மாட்டேன்... வம்பு இழுத்து விஷமம் செய்ய மாட்டேன்!'' என்றாள்.ஒரு மரத்தடியில், பத்மினி பாட்டிக்கு அவள் படித்த மகாராஜா பெண்கள் பள்ளி இப்போது பெண் குற்றவாளிகளின் சீர்த்திருத்தப் பள்ளியாக மாறி விட்டதை விளக்கிக் கொண்டிருந்தார் கேசவன் குட்டி.''அதானே பார்த்தேன். இங்குள்ள மாணவி கள் ஒரு மாதிரியா இருக்காங்களேன்னு! நம்ம மந்த்ராக்குட்டியை இங்கே சேர்க்காதிருந்திருக்க லாமே நீங்க... எனக்கு இந்தப் பள்ளிக்கூடம் மாறின விஷயம் தெரியாது,'' என்றாள் பத்மினி பாட்டி.''அதனாலென்ன மந்த்ராகுட்டிக்கு படிப்பிலே ஒரு ஆர்வம் ஏற்பட்டிருக்கு. இந்தப் பள்ளியின் சூழ்நிலை எதையும் சமாளிக்கும் துணிவையும், பொறுமையையும் கத்துக் கொடுத்திருக்கு. இப்போ நம்ம மந்த்ராக்குட்டி மாஜிக்கிலும் தேர்ந்துட்டா...'' என்று கண் சிமிட்டினார் தாத்தா.''என்னை டெல்லிக்கு மாத்திட்டாங்க அப்பா. அதனால மந்த்ராவை நான் அடுத்த வருடம் டெல்லியிலே நல்ல கான்வென்ட் பள்ளியிலே சேர்த்துடறேன். கவலைப் படாதீங்க!'' என்றார் மந்த்ராவின் அப்பா சங்கரன் குட்டி.அப்போது அங்கு வந்த மந்த்ரா, ''டெல்லிக்கா அப்பா? ஹை, குஷிதான். நான் தொடர்ந்து பெரிய படிப்பெல்லாம் படிக்கப் போறேன். படிப்பது எவ்வளவு சுவாரஸ்யமா இருக்கு? சரித்திரம், புவியியல், விஞ்ஞானம் எத்தனை விஷயங்கள் இருக்கு கற்றுக்கொள்ள. இனி நான் நேரத்தைக் கொஞ்சமும் வீணாக்க மாட்டேன். படிப்பதுதான் எனக்கு முக்கியம்!'' என்றாள்.மந்த்ராவை அணைத்துக் கொண்டு முத்த மிட்டாள் அவள் அம்மா.''அதுக்காக மாஜிக்கை கை விட்டுடாதே... குட்டிச்சாத்தான் இப்போ உனக்கு அடங்கி உன் கட்டுப்பாட்டுக்குள்ளே வந்துட்டான். இனி குளறுபடி செய்து குறும்பு செய்ய மாட்டான்,'' என்று பேத்தியின் காதோடு ரகசியக் குரலில் பேசினார் தாத்தா.''கவலைப்படாதீங்க தாத்தா. மாஜிக் என்னோட சுவராசியமான பொழுதுபோக்கு. அதை மறக்க மாட்டேன்,'' என்று தன் பார்வை யினாலேயே பதிலளித்தாள் மந்த்ரா.சிறு குழப்பம் ஏற்பட்டு விளையாட்டுப் பந்தயங்கள் தடைபட்டு விட்டதால், ஆரம்பத்தி லிருந்து தொடங்குவதாக மைக்கில் அறிவித்தனர் . போட்டிகள் ஆரம்பத்திலிருந்து தொடங்கின. மங்காத்தா விஷமம் எதுவும் செய்யவில்லை. ஓட்டப் பந்தயம், தூரம் தாண்டுதல், வட்டு எறிதல் எல்லாவற்றிலும் மந்த்ரா முதலாவதாக வந்து, பரிசுகளைக் குவித்தாள். மந்த்ராவின் தாத்தாவும், பாட்டி யும், அப்பாவும், அம்மாவும் பெருமையால் பூரித்துப் போயினர். மங்காவும், வடிவும் கூட மந்த்ராவின் கையைக் குலுக்கித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர்.முற்றும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !