உள்ளூர் செய்திகள்

மாய மோதிரம் (19) - இருகூர் இளவரசன்

இதுவரை: மாய மோதிரம் இருந்த தகரடப்பாவை பழைய சாமான் வாங்கும் சிங்காரத்திடம் போட்டு புதிய பக்கெட் வாங்கினாள் வள்ளியம்மாள். அந்த டப்பாவை தேடிச் சென்றான் முகுந்தன். இனி-மாலைவரைத் தேடிப் பார்த்தும் அந்த சைக்கிள் காரன் சிங்காரத்தை முகுந்தனால் கண்டுபிடிக்க முடியவில்லை; மிகவும் சோர்வாக வீட்டுக்கு வந்தான்.வள்ளியம்மாளிடம், ''அவசியம் அந்த பிளாஸ்டிக் விற்கும் நபரைச் சந்தித்தே ஆக வேண்டும். டப்பாவில் நான் ஒரு முக்கியமான பொருளை வைத்திருக்கிறேன்,'' என்றான்.''ஏதாவது முக்கியமான பொருள்ன்னா என்கிட்ட குடுத்திருக்க கூடாதா... இப்படி துருவேறிப்போன டப்பாவுல முக்கியமான பொருளை யாராச்சும் வைப்பாங்களா? அப்படியென்ன முக்கியமான பொருள்?'' எனக் கேட்டாள் வள்ளியம்மாள்.மாயமோதிரத்தின் ரகசியத்தை எப்படிச் சொல்வது? எப்படி புரிய வைப்பது? என யோசித்தான். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவனாய் சொன்னான்.'' ஸ்கூல் பிரண்டோட தங்க மோதிரம் அது. பத்திரமாக வெச்சுக்கறதுக்காக என்கிட்டக் குடுத்தான். திங்கட்கிழமை ஸ்கூலுக்குப் போகும் போது, அவன்கிட்டக் கொண்டு போய்க் குடுக்கணும்,'' என்றான்.தங்க மோதிரம் என்றதும் வள்ளியம்மாளுக்கு அடிவயிற்றைக் கலக்கியது.''தங்கம் விக்கற விலைக்கு இப்படி தொலைச்சுட்டு நிக்கறியே, அந்த வியாபாரி கண்ணுல பட்டாலும் எடுத்துக்குவானே... எடுத்துட்டு இல்லைன்னு தானே சொல்லுவான். இப்ப என்ன செய்யப் போறே?'' பதட்டப்பட்டாள் வள்ளியம்மாள்.''சரி... அவனை மாதிரி வேற வியாபாரிங்க யாராச்சும் பார்த்து விசாரிக்கலாம், இப்படி காலைல இருந்து சாப்பிடாம சுத்திட்டு இருக்கியே! வந்து சாப்பிடு!'' என்றாள்.''எனக்கு பசிக்கலை; மோதிரம் கிடைக்காம நான் சாப்பிட மாட்டேன்!'' என்றான்.''இப்படி அடம்பிடிக்காதே முகுந்தன், உனக்குக் கிடைக்கணும்னு இருந்தா அது கிடைச்சிடும் வந்து சாப்பிடு,'' என்று கட்டாயமாக அழைத்துச் சென்று சாப்பிட கொடுத்தாள். மனம் இல்லாமல் சாப்பிட்டான்.சைக்கிள்காரன் சிங்காரத்திடமிருந்து வாங்கிய டப்பாக்களை கடைக்காரன் பிரித்து வைத்துக் கொண்டிருந்தார். நல்ல டப்பாக்களையெல்லாம் ஒரு இடத்திலும், ரொம்பவும் மோசமான டப்பாக்களை இன்னொரு இடத்திலும், எதற்குமே உதவாது என்று எண்ணிய சிறிய டப்பாக்களை ரோட்டு ஓரமாக இருந்த குப்பைத் தொட்டியிலும் போட்டுக் கொண்டிருந்தார் பாய்.அதில் முகுந்தன் மாயமோதிரம் வைத்திருந்த டப்பாவும் ஒன்று. குப்பைத் தொட்டிக்குள் போய்ச் சேர்ந்தது. பார்க்கவே ரொம்பவும் மோசமாக இருந்தால் பாய் திறந்து பார்க்கவும் இல்லை. மற்ற டப்பாக்களையெல்லாம் ஒரு கோணிப்பையில் போட்டுக் கட்டினார். மூன்று சக்கர மீன்பாடி சைக்கிள் ஒன்று அங்கு நின்றிருந்தது. அந்த சைக்கிளில் மூட்டையை போட்டுக் கொண்டு அதை உருக்கும் இடத்தில் விற்பனைக்காகக் கொண்டு சென்றார்.மறுநாள் ஞாயிற்றுக்கிழமை, அதிகாலையே வள்ளியம்மாள் எழுந்து பிளாஸ்டிக் வியாபரிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டபோது அவர்கள் எதிர்பாராத விதமாக அந்த சைக்கிள்காரன் சிங்காரமே கண்ணில் பட்டான்.''உன்ன ரொம்ப நேரமா தேடறேனப்பா.''''எதுக்கு?''''உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும், முதல்ல என் வீட்டுக்கு வா!'''' எதா இருந்தாலும் இங்கேயே சொல்லு!'' நான் வியாபாரத்துக்குப் போகணும்,'' என்றான்.''என் பையன் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்ங்கறான் வந்துட்டுப் போயேன். பத்து ரூபாய் வேணும்னாலும் தர்றேன்''''பத்து ரூபாயா...? சல்லிக்காசு கூட கண்ணுல காட்டமாட்ட நீ... பத்து ரூபாய் தர்றேங்கறே? எதுக்கு?''''யோவ்... வாயா சொல்றேன்!''''இதோ வந்துட்டேன்,'' எனக்கூறி வள்ளியம்மாளை பின் தொடர்ந்து சென்றான்.வள்ளியம்மா முகுந்தனை அழைத்து விஷயத்தைச் சொல்லச் சொன்னாள்.டப்பாவில் மோதிரம் வைத்திருந்த விஷயத்தை சொன்னான் முகுந்தன்.''நெசமாவா சொல்றே?''''ஆமாண்ணே, எங்கம்மா விஷயம் தெரியாமத் தூக்கி உங்ககிட்டக் கொடுத்திடிச்சு,'' என்றான்.''அடப்பாவி... அதை நேத்துச் சாயங்காலமே பாய் கடையில எடைக்குப் போட்டுட்டேனே!''''என்னைக் கூட்டிட்டுப் போயி காட்டுங்கண்ணே... நான் தேடி எடுத்துக்குவேன்!''''சரிதான், இன்னிக்கு பொழப்பு முடிஞ்சு போச்சு, இங்க பாரு... உம் பையனைக் கொண்டு போயிக் கடையைக் காட்டுறேன். மோதிரம் கெடைச்சா நூறு ரூபா எனக்குக் கொடுத்துடணும் என்ன சொல்றே?''''கெடைச்சா நூறு ரூபா தர்றேன், கெடைக்கலைன்னா அந்த மாதிரி மோதிரத்தை வாங்கிக் கொடுத்திடு,'' பதிலுக்குச் சொன்னாள் வள்ளியம்மாள்.''சரிதான், நாம ஒரு ஆப்பு வெச்சா, திருப்ப டபுள் ஆப்பு அடிக்கறாளே... பையனை என் கூட அனுப்புமா...'' என்றான்.''முகுந்தா... இவர்கூடப் போயி கடையில தேடி எடுத்துக்குவியா?'' என்றாள் வள்ளியம்மாள்.''சரிம்மா!'' என்றான் முகுந்தன்.சிங்காரத்துடன் வேகமாக நடந்தான் முகுந்தன். கடைத்தெரு பக்கம் வந்ததும், பாய் கடையைப் பார்த்தான். கடை பூட்டியிருந்தது. சரிதான் இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை கடை லீவு.''ஏம்பா... கடை நாளைக்குத்தான் திறக்கும். காலையில வந்து பாத்துக்கலாமா?''''கடையைத் திறக்க வைக்க முடியாதா?''''பாய் வீடு எங்க இருக்குன்னு எனக்குத் தெரியாதேப்பா... சிந்தாதிரிப் பேட்டைன்னு ஒரு தடவை சொன்னாரு, நாம இருக்கற இடத்துக்கும் அந்த இடத்துக்கும் கொறைஞ்சது இருபது கிலோ மீட்டர் தூரம் இருக்கும். அது மட்டுமில்லாம இந்த சிட்டியில அட்ரஸ் இல்லாம ஆளைக்கண்டுபிடிக்க முடியுமா? நாளைக்கு ஒன்பது மணிக்கு பாய் கடை திறப்பாரு... நீ இங்க வந்திடு, நானும் இங்க வந்துடறேன்,'' என்றார்.குப்பைத் தொட்டிக்கு அருகில் நின்றபடியே தான் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால், அந்த டப்பா குப்பைத் தொட்டிக்குள்தான் இருக்கிறது என்பது இருவருக்கும் தெரியவில்லை. வேறு வழியின்றி அங்கிருந்து சென்றனர்.மறுநாள் காலை பாய் கடைதிறக்க வரும்போது கார்ப்பரேஷன் குப்பை லாரி ஒன்று அந்தக் குப்பைத் தொட்டிக்குள் உள்ள குப்பைகளை அள்ளிக்கொண்டு போனது. அதே நேரம் முகுந்தனும், சிங்காரமும் வந்தனர்.பாயிடம் சிங்காரம் விஷயத்தைச் சொன்னான். கடையைத் திறந்து காட்டினார் பாய். கடையில் ஒரு டப்பாகூட இல்லாமல் சுத்தமாக இருந்தது.''சனிக்கிழமை சாயந்தரமே எல்லாத்தையும் கொண்டு போய் டமாலிங் பண்ணக் குடுத்துட்டேன்,'' என்றார் பாய்.முகுந்தன் அழுதான்.''எதுக்கும் ஆகாத சில டப்பாக்களை அதோ அந்தக் குப்பைத் தொட்டியில் போட்டேன்,'' என்றார் பாய்.முகுந்தன் டப்பாவின் அடையாளத்தையும் அதன் சிறிய சையும் சொன்னான்.''அந்த மாதிரி சின்ன சைஸ் டப்பாக்களை குப்பையிலதான் போட்டேன்... தேடிப் பாருங்க,'' முகிலனும், சிங்காரமும் பார்த்தனர். குப்பை தொட்டியில் ஒரு சிறிய காகிதத் துண்டுகள் கூட இல்லை.''தொட்டி காலியா இருக்குதே!'' என்றான் சிங்காரம்.''இப்பதான் கார்பரேஷன் குப்பை லாரி வந்து குப்பைகளை அள்ளிக்கொண்டு போனாங்க,'' என்றான்.''கடவுளே... அந்த லாரியை நாங்களும் பார்த்தமே!''''லாரியை துரத்திப் பிடிச்சா தேடி எடுக்கலாம்!''சிங்காரம் முகுந்தனை தன் சைக்கிளில் வைத்து லாரிபோன திசையில் மிதித்தான். லாரி எந்த திசையில் போனதோ... இதே மாய மோதிரம் மட்டும் முகுந்தனின் கையில் இருந்திருந்தால் இந்தநேரம் லாரியைப் பின் தொடர்ந்து சென்றிருக்க முடியும். லாரியைப் பிடிக்க முடியாமல் தவித்தனர்.கார்பரேஷன் பணியாளர் ஒருவரைச் சந்தித்தனர்.''இந்த குப்பை அள்ளிட்டுப் போற லாரி குப்பைகளை எங்க கொண்டு போய்க் கொட்டுவாங்க?''''அதுவா... பூந்தமல்லியில ஒரு ஏரி இருக்கு! அந்த ஏரி ஓரத்துல கொட்டுவாங்க,'' என்றார் கார்ப்பரேஷன் தொழிலாளி.பூந்தமல்லி வெகுதூரத்தில் இருந்தது.சைக்கிளை மிதித்து அங்கு போய்ச் சேர மதியமே ஆகிவிட்டது. பலரிடம் விசாரித்தபோது ஏரியைக் காட்டினர். குப்பைகள் மலைபோல் குவிந்திருப்பது கண்டு அதிர்ந்து போனான் முகுந்தன். உடன் வந்த சிங்காரமும் அதிர்ச்சி அடைந்தான்.மலைபோல் குவிந்திருக்கும் குப்பைகளில் அந்த லாரி குப்பையைக் கொண்டு வந்து எங்கு கொட்டியதோ... இதுல உன் டப்பாவைத் தேடிக் கண்டுபிடிக்கிறது என்பது முடியாத கதை! எனக்கு 10 ரூபாயும் வேண்டாம், நூறு ரூபாயும் வேண்டாம் ஆளை விடுங்கப்பா,'' என்றான் சிங்காரம்.''பொருள் என்னோடது... நான் தேடிப் பாத்துட்டுதான் வருவேன்....உங்க வியாபாரத்தை இந்தப் பகுதியில பாத்துட்டு வாங்க, கெடைச்சாலும் கெடைக்கலைன்னாலும் நான் இங்க வெயிட் பண்றேன்.''இது நல்லபுள்ளைக்கு அடையாளம். உன்னோட இந்த நல்ல எண்ணத்துக்கு ஆண்டவன் கெடைக்கிற மாதிரி செய்வான். அப்ப நான் வியாபாரத்தைப் பாத்துட்டு வரட்டுமா?''''சரிங்கண்ணே,'' என்றான்.சிங்காரம் சைக்கிளை உருட்டிக் கொண்டு நடந்தான்.முகுந்தன் சுற்றும் முற்றும் பார்த்தான். ஒரு குப்பை லாரி ஒன்று வந்து ஒரு இடத்தில் குப்பையைக் கொட்டிக் கொண்டிருந்தது. அந்த இடத்தை நோக்கி, நடந்தான். அந்த லாரி அங்கிருந்து சென்றதும், அந்தப் பகுதியில் தேட ஆரம்பித்தான்.குப்பையில் என்னெல்லாம் கழிவுகள் இருந்தன. கெட்ட வாடை மூக்கைப் பிய்த்தது. என்றாலும் அதைப் பொருட்படுத்தாமல் கிளறிக் கிளறிப் பார்த்தான். எந்த டப்பாவும் தென்படவில்லை. சாயங்காலம் வரையும் தேடினான். பயன் இல்லை. மனம் சோர்ந்து கண்களில் நீர் நிறைந்தது.இறுதியாக இருகரங்களையும் கூப்பி வணங்கி நின்றான்.''இறைவா... என் மாயமோதிரம் இங்கு இருந்தால் என் கண்களுக்குக் காட்டு,'' என, கண்களை மூடிக் கொண்டு வேண்டிக் கொண்டே இருந்தான். அவன் நிற்கும் காலுக்கு அடியில் ஒரு அசைவு தோன்றியது. சற்று தள்ளி நின்று பார்த்தான். தங்க நிற ஒளி அவன் கண்களில் மின்னியது. கையைவிட்டுக் கிளறி எடுத்தான் அந்த டப்பாவை. டப்பாவின் ஓட்டைக்குள் தெரிந்தது அந்த மாயமோதிரம். இறைவனை வேண்டிக் கொண்டு அதை எடுத்துக் கையில் மாட்டினான். பிறகு குப்பை மேட்டை விட்டு சாதாரணப் பகுதிக்கு வந்த போது, லாரி ராஜமாணிக்கமும், சுவாமாஜியும் முகுந்தனைப் பார்த்து சிரித்தபடி நின்றிருந்தார்கள்.-தொடரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !