உள்ளூர் செய்திகள்

மந்திரக்கல்!

கொள்ளக்குடி என்ற கிராமத்தில் சாரதி என்ற விறகு வெட்டி இருந்தான். அவன் தினந்தோறும் காட்டிற்குச் சென்று விறகு வெட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.ஒருநாள் வழக்கம்போல் தன் தோளில் கோடாரியை சுமந்து கொண்டு காட்டை நோக்கி விறகு வெட்டச் சென்றான்.காட்டில் அன்று கடுமையாக மழை பெய்யத் தொடங்கியது. சாரதியால் விறகு வெட்ட முடியவில்லை. மழையில் நனையாதபடி ஒரு குகையின் உள்ளே ஒதுங்கி நின்றான்.அப்போது அந்த குகையின் உள்ளே யாரோ இருமிக் கொண்டிருக்கும் சப்தம் கேட்டது.இந்த குகையின் உள்ளே யாரோ மனிதர்கள் இருக்க வேண்டும். அதனால்தான் இருமல் சப்தம் கேட்கிறது. 'நான் உடனே இந்தக் குகையின் உள்ளே சென்று யார் இருக்கின்றனர் என்று பார்க்கிறேன்' என்று முடிவு செய்தான்.அது மழை நேரமானதால் குகையின் உள்ளே நன்கு இருட்டாக இருந்தது. மெல்லத் தடுமாறியபடியே குகையின் உள்ளே நடந்து சென்றான்.குகையின் உள்பக்கம் மிகவும் அகமாகக் காட்சியளித்தது. நடுப்பக்கத்தில் கல்லினால் செய்யப்பட்ட பெரியமேடை ஒன்றிருந்தது. அந்த மேடையின்மேல் விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது.அந்த விளக்கின் வெளிச்சத்தில் வயதான முனிவர் ஒருவர் இருந்தார். அவர் அருகே சென்றான் சாரதி. சாரதியை நிமிர்ந்து பார்த்தார் முனிவர் .''அப்பனே, நெடு நாள்களுக்குப் பின்னர் இந்தக் காட்டில் நான் ஒரு மனிதனைப் பார்க்கிறேன். எனது மந்திரக் கல்லை பெறுகிற அதிர்ஷ்டசாலி நீதான்,'' என்றார்.அதனைக் கேட்ட சாரதி குழப்பத்துடன் அவரைப் பார்த்தான்.''ஐயா, தங்களை வணங்கிக் கொள்கிறேன். ஆனால், மந்திரக்கல் என்று தாங்கள் ஏதோ கூறுகிறீர்களே, அது என்ன?'' என்று ஆவலோடு கேட்டான் சாரதி.''அப்பனே, என்னிடம் சக்தி வாய்ந்த ஒரு மந்திரக்கல் இருக்கிறது. அது நீ என்ன கேட்கிறாயோ அதனை உடனே கொடுத்து விடும். ஆனால், நீ அந்தக் கல்லை உன் விரலால் தேய்த்துக்கொண்டு ஒருமுறைதான் கேட்க வேண்டும்.மறுமுறை கேட்டால் அந்தக் கல்லால் எந்தப் பயனும் இல்லை. ஆனால், நீ கேட்கிறபோது கவனமாக கேட்க வேண்டும். தப்பித் தவறி தவறாக கேட்டுவிட்டாலோ அதுவும் பலித்து விடும். எனவே, இந்தக் கல்லை மிகவும் ஜாக்கிரதையாக கையாள வேண்டும்,'' என்று கூறினார்.அதனைக் கேட்ட சாரதி அளவிலா மகிழ்ச்சியடைந்தான். எத்தனையோ நாட்கள் நாம் இந்தக் காட்டில் விறகு வெட்டி அதனைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்து அரை வயிறு கஞ்சி குடித்து வாழ்ந்து வருகிறோம். இப்போது நமது கஷ்டம் எல்லாம் தீர நல்ல வழி கிடைத்துவிட்டது. இந்த மந்திரக் கல்லின் உதவியைக் கொண்டு நாம் பெரும் பணக்காரன் ஆகலாம் என்று முடிவு செய்தான்.அந்த முனிவர் மந்திரக்கல்லைக் கொடுக்கவே, அவரிடமிருந்து பயபக்தியுடன் அந்த மந்திரக்கல்லை வாங்கிக் கொண்டான்.முனிவரிடம் விடைபெற்று குகையை விட்டு வெளியே வந்தான். அந்த நேரம் காட்டிலும் மழை விட்டிருந்தது.மழைதான் நின்றுவிட்டதே. இனிமேல் நாம் மகிழ்ச்சியோடு வீட்டிற்குச் சொல்வோம். வீட்டில் நம் மனைவியிடம் இந்தக்கல்லைப் பற்றி தெரியப்படுத்துவோம். இதனைக்கண்டு அவள் மிகவும் மகிழ்ச்சியடைவாள் என்ற எண்ணத்தோடு தன் மனைவியைத் தேடி குடிசைக்கு வந்தான்.காட்டில் விறகு வெட்டச் சென்ற கணவன் மழையின் காரணமாகத்தான் விறகு வெட்டாமல் திரும்பி வந்துவிட்டார் என்பதை புரிந்துகொண்ட அவன் மனைவியும், கவலையோடு சாரதியின் முகத்தைப் பார்த்தாள்.''என்ன செய்வது, மழையின் காரணமாக விறகு வெட்டாமல் திரும்பி வந்து விட்டீர்களா? இன்றைய பொழுதினை எப்படி ஓட்டுவது என்று தெரியவில்லையே,'' என்று மிகவும் கவலையடைந்தாள்.தன் மனைவியின் கவலையை உணர்ந்து கொண்ட சாரதி, ''அடியே, இனிமேல் நாம் அதிர்ஷ்டசாலிகள்தான். யாருக்குமே கிடைக்காத மந்திரக்கல் ஒன்று நமக்குக் கிடைத்துள்ளது. அதனை வைத்துக் கொண்டு நாம் கோடீஸ்வரராக மாறி விடலாம்,'' என்று அந்த மந்திரக்கல்லைக் காட்டினான் சாரதி.''என்ன மந்திரக்கல்லா! எனக்கு ஒன்றுமே புரியவில்லையே. கொஞ்சம் புரியும் படியாகச் சொல்லுங்களேன்,'' என்று கேட்டாள் சாரதியின் மனைவி.''அடியே, காட்டில் நான் விறகு வெட்டச் சென்றபோது மழை வந்துவிட்டது. அந்த மழையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக ஒரு குகையின் பக்கத்தில் ஒதுங்கி நின்றேன். குகையின் உள்ளே இருமல் சப்தம் கேட்கவே, உள்ளே சென்று பார்த்தேன். குகையின் உள்ளே ஒரு முனிவர் இருந்தார். அவர்தான் இந்த மந்திரக் கல்லைக் கொடுத்தார். இந்த மந்திரக் கல்லை ஒருமுறை தேய்த்து நாம் என்ன கேட்டாலும் கொடுக்கும்,<'' என்று கல்லைக் காட்டினான்.அந்தக் கல்லை சாரதியின் மனைவி ஆசையோடு வாங்கிக் கொண்டாள்.''இந்தக் கல்லிடம் நாம் என்ன கேட்கலாம்,'' என்றாள் அவள்.''எதுவாக இருந்தாலும் ஒரே ஒரு முறைதான் கேட்க வேண்டும். மறுமுறை கேட்டால் இந்தக் கல் கொடுக்காது,'' என்றான் சாரதி.''நீங்கள் வாயை மூடிக் கொண்டு இருங்கள். நானே இந்தக் கல்லிடம் என்ன கேட்க வேண்டுமோ அதைக் கேட்டுப் பெற்றுக் கொள்கிறேன்,'' என்றாள் அவள்.''நாம் கோடீஸ்வரராக வேண்டும் என்று கேள்,'' என்றான் சாரதி.உடனே அவன் மனைவியோ நாம் கோடீஸ்வரராக மாறிவிட்டால் நம்மிடம் ஏராளமாக பணம் இருக்கும். அதன்பின் திருடர்கள் வந்து நமது பணத்தை எல்லாம் களவாடிச் சென்று விடுவர். அதனால் ஏராளமாக தங்க நகைகள் வேண்டும் என்று கேட்கிறேன்,'' என்றாள்.உடனே சாரதி ''தங்க நகைகளை, திருடர்கள் விட்டு வைப்பார்களா? அதையும் திருடிச் சென்று விடுவார்கள்,'' என்றான்.''அப்படியானால் பெரிய முத்து மாலையும், வைர நகைகளும் வேண்டும் என்று கேட்கிறேன்,'' என்றாள் மனைவி.''அதையும் கள்வர்கள் வந்து திருடிச் சென்று விடுவர்,'' என்றான்.உடனே அவன் மனைவியோ, ''அப்படியானால் அந்தக் கள்வர்களை விரட்ட இரண்டு பூதங்களையும் கேட்போம். அந்த பூதங்கள் அவர்களை விழுங்கிச் செல்லட்டும். முதலில் காவலுக்கு இரண்டு பூதங்களை வரவழைப் போம்,'' என்றபடி ஆவேசமாகக் கூறினாள்.அந்தநேரத்தில் அவள் கை விரல் அவளையும் அறியாதவாறு அந்த மந்திரக் கல்லை உராய்ந்து விட்டது. உடனே திடீரென அந்த இடத்தில் இரண்டு பூதங்கள் தோன்றின.மின்னல் வேகத்தில், சாரதியையும், அவன் மனைவியையும் விழுங்கி ஏப்பம் விட்டன.பேராசையால் ஏற்பட்ட விபரீதத்தை பார்த்தீர்களா குட்டீஸ்... மந்திரக்கல்லை முறையாக பயன்படுத்தாமல் பேராசை கொண்டதால், சாரதியும், அவன் மனைவியும் பூதத்திற்கு பலியாகி போயினர்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !