மாயமான உணவு!
கோவை மாவட்டம், கிழக்காலுார், அரசு நடுநிலைப் பள்ளியில், 1962ல், 7ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது நடந்த சம்பவம்! வகுப்பு ஆசிரியர் வேலப்பன், 'பிறர் பொருளை திருடினால் அவமானமும், துன்பங்களும் ஏற்படும்...' என அடிக்கடி அறிவுரைப்பார்.துார கிராமங்களில் இருந்து வரும் மாணவர்கள், மதிய உணவை எடுத்து வந்து, வகுப்பறையில் வைத்திருப்பர். அவை, அடிக்கடி காணாமல் போகும்; எடுப்பது யார் என தெரியாமல் இருந்தது. ஒரு நாள், காலை வகுப்பு இடைவேளையில், வெளியில் அமர்ந்திருந்தோம்; வகுப்பு துவங்க மணி ஒலித்ததும் உள்ளே வந்தோம். சக மாணவன் மணியன், அவசரமாக சாப்பிட்டு கொண்டிருந்தான்.எங்களை கண்டதும் வாயில் இருந்த உணவை, 'மடக்' என விழுங்க முயன்றான்; விழுங்கிய உணவு, தொண்டையில் நின்று, மூச்சு விட முடியாமல் திணறினான்; செய்வதறியாது திகைத்து நின்றோம்.நிலைமையறிந்த வகுப்பாசிரியர், அவன் கை விரல்களை உள்ளங்கைக்கு மடக்கி, பின் கழுத்தில், இரண்டு முறை வேகமாக அழுத்தினார். தொண்டையில் அடைத்திருந்த உணவு, வாய் வழியாக வந்தது. திணறலில் இருந்து விடுபட்டான். சமயோசித முதலுதவியால் உயிர் பிழைத்தான். பின், யாருடைய சாப்பாடும் காணாமல் போகவில்லை.தற்போது, என் வயது 71; அந்த ஆசிரியர் கூறிய அறிவுரையை, இன்றும் கடைபிடித்து வருகிறேன்; திருடி சாப்பிட்டதால் மாணவன் பட்ட துன்பமும் நினைவில் நிற்கிறது.- பி.லட்சுமி, திருப்பூர்.