உள்ளூர் செய்திகள்

மல்லன் மாறப்பன்

மıறப்பனின் குரல்கேட்டுச் சற்றே அதிர்ந்துதான் போனான். தப்பி ஓடும் வழியில் குறுக்கிடும் மாறப்பனை அவன் எதிர்பார்க்க வில்லை. துரத்தி வரும் மாறப்பனின் குதிரை யின் வேகத்தைக் கண்டவன், சட்டென்று சுதாரித்தவாறு, தன் கைத்துப்பாக்கியை, துரத்தி வரும் உருவத்தின் மீது குறி வைத்தபடி, குதிரையைக் கால்களால் உந்தி, முன்னால் விரட்டினான் கொள்ளையன் ருத்ரய்யா.கொள்ளைக்காரனின் குறிக்கோளைக் கண்ட மாறப்பன், இமைக்கும் நேரத்தில் குதிரையி லிருந்து கீழே குதித்தான். கொள்ளைக்காரன் குறி தவறியது. துப்பாக்கிக் குண்டு மரக்கிளை களினூடே பாய்ந்து சிதறியது. இதற்குள் கொள்ளையனின் குதிரை, கீழே விழுந்த மாறப்பனின் அருகே வந்து விட்டது.குறி தவறி, குண்டு பாழானதைக் கண்ட ருத்ரய்யா, ஆத்திரத் துடன் தரையில் விழுந்து கிடக்கும் மாறப்பனின் மீது, மீண்டும் தன் துப்பாக்கியைக் குறி வைத்தான்.''இந்த முறை என் குறி தப்பாது... என் காரியங்களில் குறுக்கிடும் யாரையும் இந்த ருத்ரய்யா உயிரோடு விட்டு வைப்பதில்லை!'' என்று கூறியபடியே, துப்பாக்கியின் விசையை அழுத்த முற்படும் போது-தரையில் சரிந்திருந்த மாறப்பன், கொள்ளையன் குதிரை தன் அருகே வந்ததும், மின்னல் வேகத்தில் குதிரை மீது அமர்ந்திருந்த ருத்ரய்யாவின் ஒரு காலைப் பற்றி இழுத்தான். தடுமாறிப் போன முகமூடிக் கொள்ளையன், ''ஏய்... ஏய்! காலை விடு!'' என்று கத்தினான்.அவன் குறி தவறியது. மாறப்பனின் பிடி உடும்புப் பிடியாயிற்றே. அவனுடைய வலுவான கரங்களிலிருந்து விடுபட முடியாமல் தடுமாறிய கொள்ளையனைக் குதிரையிலிருந்து இழுத்துக் கீழே தள்ளினான் மாறப்பன்.அந்த வேகத்தில் மாறப்பனின் பிடி தளர, அவனும் தரையில் உருண்டு அப்பால் போய் விழுந்தான். அதே சமயம் துப்பாக்கியின் வெடிச்சத்தம் கேட்டது. குதிரைகளின் குளம்படி களும், சிங்கராயர் தம் வீரர்களுக்கு ஆணை யிடும் குரலும் மிக அருகே கேட்டன. தான் இழுத்து வீழ்த்திய கொள்ளையன் அசைவற்றுத் தரையில் கிடப்பதைக் கண்ட மாறப்பன், தயங்கியபடியே அவன் அருகே சென்றான்.ருத்ரய்யாவிடம் சலனமில்லை. 'வெடித்த அந்தத் துப்பாக்கிக் குண்டு...?' என்று வினா எழுப்பியபடி கொள்ளையன் அருகே போய் உற்றுப் பார்த்தான் மாறப்பன்.'தான் தப்ப வழியில்லை என்பதை அறிந்து, தன்னைத்தானே சுட்டுக் கொண்டு விட்டானே' என்று வியப்போடு முணுமுணுத்தன அவன் உதடுகள்.இதற்குள் சிங்கராயரும், அவர் வீரர்களும் அவர்களைச் சூழ்ந்து நின்றனர். வீரர்களின் கையிலிருந்த தீவட்டி ஒளியில் அவர்க ளிடையே திம்ம ராயனும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி யடைந்தான் மாறப்பன்.தரையில் கிடக்கும் கொள்ளையனையும், சிங்கராயரின் அருகே நிற்கும் திம்மராயனையும் மாறிமாறிப் பார்த்த மாறப்பன், ''இந்த முகமூடிக் கொள்ளைக்காரன் உன்னைப் போலவே, உன் சாயலாகவே இருக்கிறானே!'' என்றான் திம்மனைப் பார்த்து.''அவன் இன்னொரு முகமூடி அணிந்திருக் கிறான் மாறப்பா. அதாவது கவசம்,'' என்றான் திம்மராயன்.பிறகு தரையில் கிடக்கும் கொள்ளையனின் அருகே மண்டியிட்டு அமர்ந்து, ''இதோ பார், இவனுடைய உண்மையான முகத்தை,'' என்று கூறி, ருத்ரய்யாவின் முகத்தோடு அப்பி இருந்த தோல் போன்ற கவசத்தை உரித்து அகற்றினான்.திம்மராயன் சாயலிலிருந்த கவசம் விடுபடவே அங்கு...!''இது... இது திருமலையல்லவா? அடப்பாவி!'' என்று வியந்து போன மாறப்பன் நண்பனிடம், ''இது என்ன வேஷம்... எதற்காக?'' என்று வினவினான்.''உன் நண்பனான என்னைக் கொள்ளைக் காரனாகக் காட்டி, உன்னோடு என்னையும் தீர்த்துக் கட்டுவதற்காக வகுத்த திட்டம்,'' என்று கூறியபடி எழுந்து நின்றான் திம்மராயன்.''என் பெயரையும், செல்வாக்கையும் கெடுத்து, என்னைக் கொல்ல அவன் கையாண்ட முறை. என்னைப் போலத் தன்னை உருமாற்றிக் கொண்டு, என்னைக் கொள்ளைக் காரனாக்கிக்காட்ட, அவன் வகுத்த சூழ்ச்சியில் அவனே மடியும்படியாயிற்று,'' என்றான் திம்மராயன்.''அப்படியானால்...'' என்று ஐயத்தோடு தன் நண்பனை பார்த்தான் மாறப்பன்.''என் சங்கிலி ராயர் எனக்களித்த அந்த வெகுமதி எப்படித் திரும்ப...''''உன் குழப்பம் புரிகிறது மாறப்பா!'' என்று குறும்பாகச் சிரித்தான் திம்மராயன்.''திருமலையின் திட்டத்தைப் புரிந்து கொண்ட நான் சில வேளையில் அவனை வளைத்துப் பிடிப்பதற்காக, நான் கொள்ளைக் காரன் ருத்ரய்யாவாகவும் செயல்பட வேண்டி இருந்தது. அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் தான் நான் உன்முன், முகமூடிக் கொள்ளைய னாக நிற்க நேரிட்டது. இப்போது புரிகிறதா? மன்னரின் வெகுமதியான தங்கச் சங்கிலியைத் திரும்பவும் உன் அறையில் கொண்டு வந்து வைத்ததும் நான்தான். அந்த ரகசியத்தைக் காக்க வேண்டிய அவசியத் தினால் உன்னிடம் ஏதும் அறியாதவனைப் போல நடித்தேன்,'' என்றான் திம்மராயன், முகத்தில் சிரிப்பு மாறாமலேயே.தன் நண்பன் கொள்ளைக்காரன் இல்லை என்றறிந்ததும் மாறப்பனின் மனது நிம்மதி யடைந்தது.திம்மராயன், தன் நண்பன் மாறப்பனையும், இளவரசி லஷ்மி தேவியையும் தலை நகருக்கு அழைத்துச் சென்றான்.மாறப்பனை மறுபடி சந்தித்த மகாராயர் மகிழ்ச்சியடைந்தார்.''நம் நாட்டு மற்போரிலும், பறங்கியரின் குத்துச் சண்டையிலும் வல்லவனாக விளங்கும் உன்னை, நம் ஆஸ்தான மல்லனாக்குகிறேன்,'' என்று அறிவித்தார்.பிறகு லஷ்மி தேவியைப் பார்த்து, ''என்னம்மா லஷ்மி! அரச வாழ்வே வேண்டாம் என்கிறாயாமே? என்று கேட்டார்.அவளைக் காப்பாற்றிய விவரங்களை அறிந்திருந்த ராயர், ''சூழ்ச்சிக்காரர்களிடமிருந்து நாட்டை மீட்டுக் கொடுத்திருக்கிறான் உன் மாறப்பன். திறமைசாலியான அவனை அரசனாக்கி...''ராயரைப் பேச விடாமல் குறுக்கிட்டாள் லஷ்மி.''மன்னிக்க வேண்டும் மகாராஜா. உங்களால் மல்லன் என்று பாராட்டப்பட்டவருக்கும் முடிசூடி அரசாள விருப்பமில்லையே...'' என்றாள் முகத்தில் நாணம் செவ்வரியிட.''ஆகவே, இந்த லஷ்மிக்கு, மாறப்பன் இருக்குமிடந்தான் அயோத்தி. அதாவது, சந்திரகிரி. நான் அவருடன் தமிழகம் போவதென்று முடிவு செய்து விட்டேன்,'' என்றாள்.''மகாராயர் அவர்களே! ஒரு வேண்டுகோள்,'' என்றான் மாறப்பன்.'சொல்' என்பதற்கு அறிகுறியாகத் தலை யசைத்தார் ராயர்.''சந்திரகிரியை ஆளும் பொறுப்பை, என் நண்பன் திம்மராயனுக்கு வழங்கி, என் ஆசையை நிறைவேற்ற வேண்டுகிறேன்,'' என்றான்.நாடாளும் ஆசையில்லாத அதிசய தம்பதிகளை ஆசீர்வதித்தார் கிருஷ்ண தேவராயர். அவன் விருப்பப்படியே திம்மராயனைச் சந்திரகிரியின் மன்னனாக்குவதாகவும் வாக்கு அளித்தார்.திம்மராயன் கண்களில் நீர் திரள, நண்பன் மாறப்பனைத் தழுவிக் கொண்டான்.''நண்பா மாறப்பா! என்ன காரியம் செய்து விட்டாய்? மன்னனாகும் மகத்தான வாய்ப்பு வந்தும் அதை உதறினாயே! அதை விட அதிசயம், என்னைச் சந்திரகிரிக்கு அரசனாக்க நீ ராயரிடம் வேண்டிக் கொண்டது!'' என்றான் நா தழுதழுக்க.''நாட்டையாள எல்லாரும் ஆசைப்பட முடியுமா திம்மா? நீ அரசியல் தெரிந்தவன். உரிமைப் போரையும், வாரிசுப் போரையும், அரசியல் சூழ்ச்சிகளையும் சமாளிக்க கூடியவன். அத்தகைய திறமை எனக்குக் கிடையாது. நான் தமிழகத்தின் சாதாரணக் குடிமகன். மகாராயரின் ஆசியுடனும், ஆதரவுடனும் உன்னால் சந்திரகிரியை சிறப்பாக நிர்வகிக்க முடியும்!''அப்போது மகாராயர் குறுக்கிட்டார்.''மாறப்பா! நீ இப்படி ஒதுங்கிக் கொள்ள முடியாது. தென்னகத்திலே என் பிரதிநிதிகள் மதுரையை ஆளுகின்றனர். உன் வீரம் வீணாகக் கூடாது. ஆகவே, அங்கு உனக்குப் படைத் தலைமை தருமாறு ஆணை பிறப்பிக் கிறேன். நீ மதுரைக்குப் போ. எங்கள் நாட்டுப் பெண் லஷ்மியை மகிழ்ச்சியோடு வாழ வை,'' என்றார்.மாறப்பனும் சிரம்தாழ்த்தி அவர் கட்டளையை ஏற்றான்.மாறப்பன் லஷ்மி தேவியுடன், தமிழகம் கிளம்பினான். தாயின் முன்னால் லஷ்மியை நிறுத்தி, அவள் ஆசியுடன் மனைவியாக்கி மதுரைக்குப் போய்த் தளபதி பதவி ஏற்க வேண்டுமென்று திட்டமிட்டபடி, சந்தோஷமாகப் பயணப்பட்டான்.- சுபம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !