மதிப்பெண் யாசகம்!
தேனி, நாடார் சரஸ்வதி உயர்நிலை பள்ளியில், 1968ல், 10ம் வகுப்பு படித்தபோது, நிகழ்ந்த சுவாரசியமான சம்பவம்!உடன் படித்த முருகனுக்கு கணித பாடம், பாகற்காய். அன்று நடந்த கணித தேர்வு விடைத்தாளில், 'பின் குறிப்பு' என, 'சார்... நான் பாஸ் மார்க் வாங்குவது சந்தேகம் தான்... பெயில் மார்க் எடுத்தால், வீட்டில் என்னை அடித்தே கொன்று விடுவர். என் வாழ்வும், சாவும் உங்கள் கையில்' என எழுதியிருந்தான்.கணித ஆசிரியர் தாளமுத்து, 'விடைத்தாளை, விண்ணப்பமாக பயன்படுத்தும் சாதுர்யம், உங்க மாணவனுக்கு மட்டும் தான் உண்டு...' என, கிண்டல் செய்தபடி வகுப்பு ஆசிரியர் சொக்கலிங்கத்திடம் அதைக் கொடுத்தார்.தலைமையாசிரியர் சங்கரசுப்பையர் பார்வைக்கு, அது சென்றது. எழுதியவனை அழைத்து, பிரம்பால் வெகுமதி கொடுத்தபடி, 'மதிப்பெண் யாசகம் கேட்பதை தவிர்த்து, படித்து வாழ்க்கையில் முன்னேறும் வழிகளில் கவனம் செலுத்து...' என அறிவுரைத்து அனுப்பினார்.தொடர்ந்து முயன்று, முதல் தர மாணவர் வரிசையில் இடம் பெற்றான். கட்டட கான்டிராக்ட் தொழில் செய்து வசதியாக வாழ்ந்து வருகிறான்.எனக்கு, 72 வயதாகிறது. தனியார் பேருந்தில் நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். அந்த ஆசிரியரின் அறிவுரையை மனதில் ஏந்தி, முன்னேறியவனை எண்ணி மகிழ்கிறேன். - வி.வரதராஜன், திண்டுக்கல்.தொடர்புக்கு: 90944 37922