உள்ளூர் செய்திகள்

மோட்சம்!

ஒரு சமயம் நாரதர் காட்டுப் பகுதி ஒன்றில் சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் ஒரு துறவி தியானத்தில் ஆழ்ந்திருந்தார். மேலும் அந்தக் காட்டில் விறகுவெட்டி ஒருவன் மரத்தை வெட்டிக் கொண்டிருந்தான்.நாரதர், வழக்கம் போல, 'நாராயண நாராயண!' என்று சொல்லிக் கொண்டே சென்றார். நாரதரின் குரலைக் கேட்ட துறவி, கண்விழித்து நாரதரை வணங்கினார்.நாரதர், துறவியிடம் தான் வைகுந்தம் சென்று கொண்டிருக்கிறேன் என்று சொல்ல, அதற்கு அத்துறவி, ''நாராயணனிடம் எனக்கு எப்போது முக்தி கிடைக்கும் என்று கேட்டுக் கொண்டு வாருங்கள்!'' என்றார்.இவர்கள் இருவரின் பேச்சுக்களையும் கேட்டுக்கொண்டிருந்த அந்த விறகு வெட்டி, ''தனக்கும் எப்போது மோட்சம் கிடைக்கும்! என்று கேட்டு வாருங்கள்,'' என்று நாரதரிடம் சொன்னான்.வைகுந்தம் சென்று விஷ்ணுவைத் தரிசித்துத் திரும்பிக் கொண்டிருந்தார் நாரதர்.துறவியும், விறகு வெட்டியும் ஆர்வத்தோடு நாரதரை நாடி வந்தனர். இருவரும் நாரதரை வணங்கி, 'தங்களுக்கு எப்போது முக்தி கிடைக்கும்?' என்று ஆவலோடு கேட்டனர்.நாரதரோ, ''ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் போது இருவருக்கும் முக்தி கிடைக்கும்! என்று விஷ்ணு தெரிவித்ததாய்,'' சொன்னார்.''ஊசியின் காதில் ஒட்டகம் எப்படி நுழையும்? நான் இவ்வளவு காலமும் கஷ்டப்பட்டு செய்த தவம் அனைத்தும் வீணாகப் போய்விட்டதே,'' என்று துறவி சொன்னார்.ஆனால் விறகு வெட்டியோ, ''நாரதரே, அந்த நாராயணன் நினைத்தால், ஊசியின் காதில் ஒட்டகமென்ன யானை கூட நுழையும். அவர் நினைத்தால் எதுவும் நடக்கலாம்,'' என்றான்.விறகு வெட்டி சொன்னதைக் கேட்ட துறவி, அவனை கேலி செய்து பேசினார்.''முட்டாள் விறகு வெட்டியே, பல வருடங்கள் தவம் செய்த எனக்கே முக்தி கிடைப்பது சந்தேகமெனில், தவம் என்றாலே என்னவென்று தெரியாத உனக்கு முக்தி கிடைப்பதாவது. ஊசியின் காதில் ஒட்டகம் எப்படி நுழையும்?'' என்றார் துறவி.துறவி இவ்வாறு சொன்னதும் ஒரு அசரீரி ஒலித்தது.''துறவியே, பரம்பொருளின் மீது நம்பிக்கையற்ற நீ பல வருட காலம் தவம் செய்தும் என்ன பயன்? ஆனால், எதுவுமே தெரியாத அந்த விறகுவெட்டியோ பரம்பொருளையும், அதன் சக்தியினையும் முழுவதுமாக நம்புகிறான். அதனால் அவனுக்கு நிச்சயம் மோட்சம் கிடைக்கும்!''துறவி தான் செய்த தவறை இப்போதுதான் உணர்ந்தார். ஆணவம் அவருடைய முக்திக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது. உண்மையான பக்தியினால், விறகு வெட்டி மோட்சத்தைப் பெற்றான்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !