உள்ளூர் செய்திகள்

அம்மான்னா அம்மாதான்!

நான், எஸ்.எஸ்.எல்.சி., வரை பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளியில் படித்தேன். பெற்றோருக்கு ஒரே மகள் என்பதால், அதிக பாசம். பெற்றோரை விட்டு நான் பிரிந்தது இல்லை.ஆனால், கல்லூரி படிப்பிற்காக மட்டும் என்னை விடுதியில் சேர்த்தனர். முதலில், பெற்றோரைப் பிரிந்த ஏக்கத்தோடும், சோகத்தோடும், கல்லூரிக்கு செல்வேன். இரவில் விடுதியில் சாப்பிடாமல் அழுதபடியே தூங்கி விடுவேன். ஒருநாள், மூட்டை முடிச்சோடு வீட்டுக்கு வந்து விட்டேன். என் அப்பாவை கட்டிக் கொண்டு, 'இனிமேல் கல்லூரி செல்ல மாட்டேன்' என்று அழுதேன்.'உன்னை பிரிந்து என்னாலும் இருக்க முடியலே... படிப்பு இல்லாட்டா போகுது' என்றார் அப்பா.எனக்கு ஒரே சந்தோஷம். இதே போல், என் அம்மாவிடம் சொல்லி அழுதேன்.'அம்மாடி உன்னைப் பிரிந்து இருப்பது எனக்கும் கஷ்டம்தான். ஆனால், அதற்காக உன் எதிர்காலம் பாழாகக்கூடாது. மனதை தேற்றி படிக்கச் சென்றால், நாளை உன் வருங்காலம் பிரகாசமாக இருக்கும். பெற்றோரை பிரிய முடியாது என்று எண்ணினால், இந்த கிராமத்தில் சராசரி பெண்ணாக வயல்காட்டில் அவதிப்பட வேண்டியிருக்கும். அப்போது நீ என்னைப் பார்த்து, 'ஏம்மா அன்று எனக்கு ஆறுதல் சொல்லி படிக்க அனுப்பி இருந்தால் என் நிலை இப்படியாகுமா?' என்று கேட்கக் கூடாது. படிப்பா, பாசமா என்பதை நீயே முடிவு செய்' என்றார்.நானும் மனதை தேற்றி கல்லூரிக்கு புறப்பட்டேன். பாடத்தில் கவனத்தை செலுத்தினேன். பிரிவு, துயர் சற்றே மறந்தது. அந்த வருட அரசு தேர்வில், பொருளாதாரத்திலும், தமிழிலும் கல்லூரியின் முதல் மாணவியாக தேர்வாகி, அந்நாளைய கல்வி மந்திரி - நெடுஞ்செழியனிடம் பரிசு பெற்றேன். பாசத்தை நெஞ்சில் வைத்து படிக்க தூண்டிய என் தாய், எனக்கு தாயாக, தந்தையாக, ஆசானாக, இறைவனாக யாதுமாகி நின்றார்.இன்று நான் சிறு எழுத்தாளராகவும், இளம் கவிஞராகவும் சுடர் விட என் அன்னையின் வழிகாட்டுதலே காரணம்.-கு.கோப்பெருந்தேவி, மவுலிவாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !