உள்ளூர் செய்திகள்

அம்மா என்றால் அன்பு!

குழந்தைகளை அதிகம் கவர்ந்த திருநாள் தீபாவளி. இதை ஒளித்திருவிழாவாக கொண்டாடுகிறோம். இதில் பெரிய தத்துவமே அடங்கியுள்ளது. பிள்ளை நல்லவனாயிருந்தாலும், கெட்டவனாயிருந்தாலும் சரிசமமாகவே அன்பு செலுத்துவாள் தாய். இப்படித்தான், ஒரு கெட்ட பிள்ளையைத் திருத்தும் பொறுப்பு, பூமாதேவிக்கு வந்தது. யார் இவள்...பெருமாள் கோவில்களுக்கு சென்றிருப்பீர் இல்லையா! அங்கே பெருமாளின் இருபுறம் இரண்டு தேவியர் இருப்பதைப் பார்த்திருப்பீர். அதில், சுவாமியின் வலப்புறம் இருப்பவள் ஸ்ரீதேவி; இடப்புறம் இருப்பவள் பூமாதேவி. அவளை பூதேவி என்றும் சொல்வர். இந்த பூமாதேவி தான், தீபாவளி பண்டிகை கொண்டாட காரணமாக இருப்பவள். இவளுக்கும், பெருமாளுக்கும் ஒரு மகன் பிறந்தான். அவனை, பவுமன் என்று அழைத்தனர். மனிதர்களுக்கும், தேவர்களுக்கும், உலகில் சகல உயிரினங்களுக்கும் கெடுதல் செய்தான். எனவே, நரகாசுரன் என்று பெயர் பெற்றான். மனிதர்களிலேயே மிக மிக கெட்டவன் என்று இதற்குப் பொருள். ஆரம்பத்தில், இவன் பெரிய தவசீலனாகத்தான் இருந்தான். நினைத்தது போல் வரமும் கிடைத்தது. தாயைத் தவிர வேறு யாராலும் அழிவு வரக்கூடாது என்பதே அந்த வரம். இதைப் பயன்படுத்தி எல்லாருக்கும் கொடுமை செய்தான்.கடவுளின் பிள்ளையல்லவா! அதிலும் வரம் பெற்றவன் ஆயிற்றே...யாராலும் அவனைத் தட்டி கேட்க முடியவில்லை. பாதிக்கப்பட்டவர்கள், அவனைப் பெற்ற தந்தையிடமே புகார் செய்தனர். அவர்கள் அனுபவித்த கொடுமையைக் கேட்டு, பெருமாளும், பூமாதேவியும் கலங்கி விட்டனர். மகனைத் தட்டிக் கேட்டனர். அவன் திருந்தும் வழியைக் காணவில்லை. அடுத்த யுகம் பிறந்தது. அதில் சத்தியபாமா என்ற பெயரில் பூமாதேவி பூலோகத்தில் பிறந்தாள். பெருமாள், கிருஷ்ணராகப் பிறந்து துவாரகை நகரை ஆட்சி புரிந்து கொண்டிருந்தார். அழியா வரம் பெற்றிருந்த நரகாசுரன், இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அசாம் கவுகாத்தியை ஆட்சி செய்து கொண்டிருந்தான்.அந்த நகருக்கு அந்த காலத்தில் பிராக்ஜோதிஷபுரம் என்று பெயர். யுகம் கடந்தும் திருந்தாமல், மக்களைக் கொடுமைப்படுத்தியதால், கோபமடைந்தார் கிருஷ்ணர். மனைவி சத்தியபாமாவுடன் மகனைத் தட்டிக் கேட்க சென்றார். அப்போதும் திருந்தாத நரகாசுரன், பெற்றவர் மீதே அம்பு எய்ய முயன்றான். கணவரின் உயிரைக் காக்க நரகாசுரன் மீது அம்பு எய்தாள் சத்தியபாமா. அடிபட்டு விழுந்தான் நரகாசுரன்.பெற்றவளே இப்படி செய்வாள் என்று எந்த மகனாவது எதிர்பார்ப்பானா!அடிபட்டவன் அன்னையின் மடியில் தலைசாய்த்து, 'நான் செய்தது தவறு தான். சற்று உற்றுப் பாருங்கள். உயிரை விடப் போகிறேன் எனத் தெரிந்ததும், மக்கள் தீபமேற்றி மகிழ்கின்றனர். என்னை மன்னித்து விடுங்கள்...' என்றவாறே உயிர் விட்டான்.வருத்தமடைந்திருந்தாலும், 'பகவானே... இந்த மகிழ்ச்சி என்றும் நிலைக்க வேண்டும். இன்று ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி. இந்த நாளை மக்கள் என் மகன் பெயரால் நரக சதுர்த்தசி என்ற பெயரில் கொண்டாட வேண்டும். உலகெங்கும் உள்ள மக்கள் ஒளித்திருவிழாவாகக் கொண்டாட வேண்டும். காலையில், அவர்கள் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராட வேண்டும். இனிப்பு, பலகார வகைகள் சாப்பிட வேண்டும், புத்தாடை அணிய வேண்டும்...' என்றாள், பூமாதேவி சத்தியபாமா. பெருமாளும் அதற்கு சம்மதித்தார்.தீபாவளி கடும் மழைக்காலத்தில் கொண்டாடப்படுகிறது. அப்போது, குளிர்ந்த நீரில் குளிக்க முடியாது இல்லையா! எனவே, வெந்நீரில் குளிக்க பெருமாளிடம் அனுமதி பெற்றுத் தந்திருக்கிறாள் பூமாதேவி. அவளுக்கு எவ்வளவு அன்பான மனம் பாருங்கள். பிள்ளையை இழந்த நிலையிலும், உலகில் எல்லா பிள்ளைகளும் எந்தக் கஷ்டமும் படக்கூடாது என்பதில் எவ்வளவு அக்கறையாக இருந்திருக்கிறாள். அம்மா என்றாலே அன்பு தான். அதை விடுத்து அவளுக்கு எதுவும் தெரியாது. பெற்றோர் பேச்சைக் கேளுங்கள். அவர்களைப் போன்ற தெய்வம் உலகில் இல்லை என்பதை எடுத்துக்காட்டவே, பெருமாளும், பூமாதேவியும் இப்படி ஒரு சம்பவத்தை உலகுக்கு நடத்தி காட்டியுள்ளனர். செல்லங்களே... இந்த அருமையான சிந்தனையுடன், பாதுகாப்பாக பட்டாசு வெடித்து, இன்பமாக தீபாவளியைக் கொண்டாடுங்கள். இனிய வாழ்த்துக்கள்.- தி.செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !