தாய்மையே அன்பு!
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 2017ல், 10ம் வகுப்பு படித்தேன். அந்த பள்ளி வளாகம், புத்தக கல்வியைத் தாண்டி, வாழ்க்கையையும் கற்றுத் தந்தது.ஆண்டு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருந்த போது, என் பேனாக்கள் அனைத்தும் திருடு போயின. விடுதியில் தங்கியிருந்த எனக்கு, புதிய பேனா வாங்க, போதிய அவகாசம் இல்லாததால், கலங்கி நின்றேன். இந்த விவரம் என் வகுப்பு ஆசிரியை ஆட்லின் கவனத்துக்கு சென்றது.என்னை அழைத்தவர், 'பெண் பிள்ளைகள் எப்போதும் கண் கலங்க கூடாது; தன்னம்பிக்கையுடன் வாழ்வில் வரும் பிரச்னைகளை எதிர் கொள்ள பழக வேண்டும்...' என்று அறிவுரைத்து, ஒரு பேனாவை கொடுத்தார். என்னை தேற்றியதுடன், 'தைரியமாக தேர்வை எதிர்கொள்...' என்று, நம்பிக்கை ஊட்டினார்.அவரது செயல் தாயின் அன்புக்கு இணையாக இருந்ததால் நெகிழ்ந்தேன். அவர் கூறியது எப்போதும் உதவும் அமுத மொழி. அது, என் வாழ்க்கையை வழி நடத்தும் என, நம்பிக்கை பிறந்தது. அவரது பண்புக்கும், அன்புக்கும் தலைவணங்குகிறேன்.- ஜா.ஜெனிசா, சிவகங்கை.