உள்ளூர் செய்திகள்

மிருக மித்ர ரத்ன !

''அண்ணே! அண்ணாச்சி! குன்றப்பன் அண்ணாச்சி! என்னைக் காப்பாத்துங்கண்ணே!''குரல் எங்கிருந்து வருகிறது என்று அண்ணார்ந்து பார்த்தது குரங்கு குன்றப்பன். சுற்றும் முற்றும் பார்த்தது. ஒன்றும் தென்படவில்லை.''அண்ணாந்து பார்த்தா சூரியன்தான் தெரியும். குனிஞ்சு கீழே இருக்கிற வற்றிப் போயிருக்கிற அரைக் கிணறைப் பாருங்கண்ணே!''கீழ் நோக்கிப் பார்த்தது குன்றப்பன். ஒரு அழகான வெள்ளை நிற முயல் குட்டி, எம்பி எம்பிக் குதித்துக் கொண்டிருந்தது.''நீயா! நீ புளியமரப் பொந்துக்காரன்தானே!'' என்று கீழே இலை கிளைகளைப் பிடித்துத் தொங்கி வந்தது.''எப்படியாவது காப்பாத்துங்கண்ணே! எங்க மம்மி எனக்காக புல்பாயசம் செய்து காத்திருப்பாங்க!''''எப்படிடா இதுக்குள்ளே குதிச்சே! இது ஒரு பழைய கிணறு. கிணறு வத்திப் போச்சு. இப்போது இது குப்பைத் தொட்டியா மாறிடுச்சு. தூர் வாரிட்டிருந்தா மழை தண்ணி சேர்ந்து இருக்கும். உன் நல்ல வேளை குப்பை கொட்டும் இடமாச்சு!''''அண்ணே! கிணற்றைப் பற்றி உங்க ஆராய்ச்சியை மேலே வந்து கேக்கறேன்!''''திடீரின்னு ஐடியா வராதுடா! ஒரு சமயம் உன்னைப் போல ஒரு முயல்காரன் தண்ணி தாகமெடுத்து ஒரு கிணத்தாண்டை வந்தான். அது ராட்டின கிணறு. தாம்புக்கயிறு ஒரு முனையின் கிணற்றுப் பக்கத்தில் உள்ள சுவற்றில் கட்டப்பட்டிருக்கும். இனனொரு முனையில் பக்கெட்டைக் கட்டியிருப்பர்.''ராட்டின சக்கரத்தில் கயிற்றை விட்டு சுலபமாக கிணற்று நீரை பக்கெட்டில் சேர்ந்து இழுத்துக் கொண்டே இருந்தால் தண்ணீரை நிரப்பிக் கொண்டு பக்கெட் மேலே வரும். இந்த மாதிரி நேரத்தில் யாரோ ஒரு அம்மா காலி பக்கெட்டை சுவற்றின் மேலே வைச்சுட்டுப் போயிருக்காங்க.''முயல் பையன் அவசரக் குடுக்கை. பக்கெட்டில் தண்ணி இருக்கான்னு ஏறி எட்டிப்பார்த்திருக்கான். அவ்வளவுதான்; பக்கெட் சர சரவென்று கிணற்றுக்குள் வேகமாக இறங்கியது. முயல் பையனும் கிணற்றின் ஆழத்தில் பக்கெட்டில் உட்கார்ந்துக்கிட்டு இருந்தான்.''இந்தப் பையனோட அம்மா என்னை கெஞ்சி தன் பையனைக் காப்பாத்துன்னு அழுதது. நான் ஒரு ஐடியா பண்ணினேன். முயல் பயல் பக்கெட்டில் இருக்கிறான். பக்கெட் மேலே வரணும். அதுக்கு மறுமுனை கயிறு கீழே போகணும். நான் கிணத்து மேடையிலிருந்த கயிறைப் பிடித்துக் கொண்டு கிணத்துக்குள் இறங்கினேன்.''நான் இறங்கவும், பக்கெட் மேலே போகவும் சரியாய் இருந்தது. யாரோ ஒருத்தர் பக்கெட்டைப் பிடிக்க முயல் பயல் தாவி வெளியே ஓடிவிட்டான். அதே தாம்புக்கயிற்றைப் பிடித்து சர் சர் என்று மேலே ஏறி நான் வெளியே வந்துவிட்டேன்!''''அண்ணே! நீங்க நல்ல இருக்கணும். என்னைக் காப்பாத்துங்க!'' என்றது முயல்.''ஐடியா கிடச்சிடுச்சு!'' என்று சொல்லி பின்புறமாகத் திரும்பித் தன் வாலை கிணற்றுக்குள் விட்டது.''ஏலேய்! முயல்பையா! என் வாலைக் கடிச்சிட்டுத் தொங்கணும் கடியை மட்டும் விட்டுறாதே!'' என்று சொன்னது.முயல், குரங்கின் வாலை தன் பற்களில் பற்றிக் கொண்டது. பார வண்டியை இழுத்துச் செல்லும் காளை மாட்டைப் போல குரங்கு இழுத்தது. சரிவது போல் இருந்த நேரத்தில் வேரை கெட்டியாகப் பிடித்து முன்னேறியது. முயலும் கடியை விடாமல், தரைக்கு வந்தது.''டேய்! உன் பல் ரொம்பக் கூராக இருக்கு. ஓடு! உன் அம்மா புல் பாயசம் வச்சிக்கிட்டுக் காத்திருப்பாங்க!'' என்று குன்றப்பன் சொன்னது.''நன்றி, நன்றி...'' என்று சொல்லிவிட்டு வேகமாக ஓடியது முயல். இன்னும் கொஞ்ச நேரம் முயல் கடித்துக் கொண்டிருந்தால் வால் துண்டாயிருக்கும். முயல் கிணற்றுக்குள்ளேயே தடுமாறிக் கிட்டிருக்கும் என்று நினைத்தது.நன்றியுள்ள முயல் சமுதாயம், குன்றப்பனின் தீரச் செயலைப்பாராட்ட, செய்தி காட்டுத் தீயாகப் பரவியது. மூத்த அதிகாரி மிருகங்கள் குரங்குக்கு பரிசும், பாராட்டும் கிடைக்க சிபாரிசு செய்தன.'விலங்கரசு தினம்' கொண்டாட்ட தினத்தில் மயில்கள் அணிவகுத்து நடனம் ஆடின. குயில்களும், கிளிகளும், மைனாக்களும் தனித்தனி இசைக்குழுக்களுடன் பாடின.யானைகள், குதிரைகள் ராணுவ நடை போட்டன. உயர்ந்த குகைக் குன்று வாயிலில் விலங்கரசர், சிம்மேந்திர ராஜ பூபதி கர்ஜித்து அணிவகுப்பை ஏற்றுக் கொண்டது.குன்றப்பனை விலங்கரசர் பாராட்டினார். பரிசாக ஒரு தென்னந் தோப்பையும், மாந்தோப்பையும் அளித்தார். 'மிருக மித்ர ரத்ன' என்ற பட்டத்தையும் அளித்தார். எல்லா மிருகங்களும் குரங்கைப் பாராட்டின.'வாழ்க மிருக நேயம்!' என்ற வாழ்த்தொலி காடு முழுவதும் எதிரொலித்தது.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !