உள்ளூர் செய்திகள்

பெயர் காப்பி!

திருப்பூர் மாவட்டம், செயின்ட் ஜோசப் பள்ளியில், 2002-ல், 6ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...அறிவியல் ஆசிரியை கற்பகம், தேர்வுக்கு முறையாக படித்து வர வலியுறுத்துவார். உடன் படித்த தோழி, வீட்டில் பாடங்களை படித்து வரமாட்டாள். வகுப்புக்கு வந்த பின், அவசரமாக படிப்பாள். தேர்வின் போது, நான் கீழே அமர்ந்திருந்தேன்; என் அருகே பெஞ்சில் அமர்ந்து எழுதினாள் தோழி. மறுநாள், திருத்திய விடைத்தாளுடன், 'இங்க யாரு மாலதி...' என்றார் ஆசிரியை. எழுந்து நின்றேன். இரண்டு விடைதாள்களை காட்டி, 'உன்னுடையது எது...' என்றார். சுட்டிக் காட்டினேன். மற்றொரு விடைத்தாளிலும் என் பெயர் இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது. எல்லா தாள்களையும் கொடுத்த பின், 'யாருக்கு விடைத்தாள் கிடைக்கவில்லை...' என்றார்.பரிதாபமாக எழுந்தாள் தோழி. நான் எழுதியிருந்ததை பார்த்து, பெயரையும் சேர்த்து, காப்பி அடித்திருந்தாள். இதைக் கண்டு வகுப்பறை சிரிப்பால் அதிர்ந்தது. வெட்கி நின்றவளை அறிவுரையால் தேற்றினார் ஆசிரியை. அன்றே, அந்த பழக்கத்தை விட்டாள். இப்போது, என் வயது, 28; தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் அந்த தோழியை, சில மாதங்களுக்கு முன் சந்தித்தேன். மனம் நோகாமல் அறிவுரைத்து திருத்திய ஆசிரியையை நினைவு கூர்ந்தாள். என் மனம் நெகிழ்ந்தது.- வி.மாலதி, திருப்பூர்.தொடர்புக்கு: 81248 16676


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !