உள்ளூர் செய்திகள்

குறும்பு குமரேசன்!

பெற்றோருக்கு ஒரே பிள்ளை குமரேசன். செல்லமாக வளர்ந்தான். பள்ளியில், கலகலப்பாக திரிந்தான்; படிப்பில் கெட்டிக்காரனாக திகழ்ந்தான். குறும்பு செய்வதிலும் முன் மாதிரியாக இருந்தான். சக மாணவர்களின் புத்தகம், பென்சிலை ஒளித்து வைப்பான். அதனால், பெயருக்கு முன், குறும்பு என்ற அடைமொழி சேர்ந்தது.அன்று வகுப்பறையில் அழுது கொண்டிருந்த மாணவன் முருகனை விசாரித்தார் ஆசிரியர்.'நேத்து தான் புதுசா பேனா வாங்கியிருந்தேன். எப்படியோ தொலைஞ்சு போச்சு... வீட்டுக்குப் போனா அடி கிடைக்கும்...' என்று புலம்பினான்.குமரேசனிடம், 'இது... உன் திருவிளையாடலா...' என விசாரித்தார் ஆசிரியர். 'நான் எதையும் எடுக்கல...' என்று முறையிட்டவன், 'பெஞ்சுக்கு கீழே ஒரு பேனா இருக்கு; அதுவான்னு பார்க்கச் சொல்லுங்க...' என்றான்.குனிந்த முருகன், 'என் பேனா தான் அது...' என்று எடுத்தான்.ஆசிரியர், 'இத்துடன் நிறுத்திக்கொள்; பின் நீயே வருத்தப்படுவாய்...' என்று குமரேசனை எச்சரித்தார். மவுனம் காத்தவன், 'எது வந்தாலும் சமாளிப்பேன்...' என்று, சக மாணவர்களிடம் சவால் விட்டான்.ஆண்டு இறுதித்தேர்வு வந்தது; தேர்வு கூடத்துக்குள் நுழைந்தான் குமரேசன்.முதல் மதிப்பெண் பெறும் ஆர்வம் இருந்தது. தேர்வுக்கூட நுழைவு சீட்டை தேடினான்; பையில் இல்லை. அவசர அவசரமாக வெளியே வந்தான். அங்கும் இங்கும் தேடியும் கிடைக்கவில்லை.'விளையாட்டை என்னிடமே காட்டாதீங்க... யாராவது எடுத்திருந்தா கொடுத்துடுங்க...' என்று மன்றாடினான் குமரேசன்.'சத்தியமா நாங்க பார்க்கல...' என்று கூறி, தேர்வு கூடத்துக்குள் நுழைந்தனர் மாணவர்கள்.அறைக் கண்காணிப்பாளர், 'இதோ பார்... இன்னும், 10 நிமிடங்கள் தான் இருக்கு! அதற்குள், நுழைவு சீட்டுடன் வந்தால் தான் தேர்வு எழுதலாம்...' என்று கண்டிப்புடன் கூறினார்.புலம்பி நின்ற குமரேசனை நோக்கி ஓடி வந்த சிறுவன், 'அண்ணா... இது உங்களுடையதா பாருங்க... வழியில் கிடந்ததை எடுத்து வந்தேன்...' என்றான்.உறுதி செய்து கொண்ட குமரேசன், நன்றி கூறி தேர்வு அறையை அடைந்தான்.அன்று முதல், குறும்பு விளையாட்டை நிறுத்தினான்; நண்பர்களுடன் கலகலப்பாக பழக ஆரம்பித்தான்.தளிர்களே... சின்ன குறும்புகள் விபரீதத்தில் முடியும்; எப்போதும் நல்வழியிலேயே நடவுங்கள்!ஆர்.தனபால்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !