நீதான்டி பேசணும்!
கடந்த, 50 ஆண்டுகளுக்கு முன், எஸ்.எஸ்.எல்.சி., படித்து கொண்டிருந்தேன். அப்போது, சிவாஜிகணேசன் நடித்த, புகழ்பெற்ற, வீரபாண்டிய கட்டபொம்மன் படம், மாணவ - மாணவியரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.பள்ளி ஆண்டு விழாவில், வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை நடத்த திட்டமிட்டு, தீவிர ஒத்திகை மேற்கொண்டோம்.அதன்படி, ஆண்டுவிழாவில், நாடகத்தின் உச்சக்கட்ட, கட்டபொம்மனும், ஜாக்ஸன் துரையும் வசனத்தால் மோதும் அந்த பிரபலமான காட்சி வந்தது.'நீ தான் கட்டபொம்மன் என்பவனோ...' என்று நக்கலுடன் ஜாக்ஸன் கேட்க, 'நீ தான் ஜாக்ஸன் என்பவனோ...' என்று கட்டபொம்மன் கர்ஜிக்க, அடுத்து பேசவேண்டிய ஜாக்ஸன், வசனத்தை மறந்து, தடுமாறி நிற்க, நிலைமையை உணர்ந்த கட்டபொம்மனாக நடித்த பெண், 'ஏய் கீதா, நீதான்டி பேசணும், பேசுடி!' என்று மெல்லிய குரலில் பேச, அது ஒலிபெருக்கி மூலம், எல்லாருக்கும் சத்தமாக கேட்க, பார்வையாளர்கள், 'கல கல' வென்று சிரிக்க ஒரே கலாட்டா தான்!ஆவேச வசனங்களால் அதிர வேண்டிய அரங்கம், அலையென எழுந்த சிரிப்பில் மூழ்கியது. ஆண்டு பல கடந்தும், நினைவில் தங்கிய இந்த நாடக அனுபவம் என்றும் இனிமையே!- என்.ரங்கநாயகி, வேலாண்டிபாளையம்.