உள்ளூர் செய்திகள்

புத்தாண்டு வினோதங்கள்

பெரிய நிகழ்வுகள் நடக்கும் போது பல வினோதங்கள் நடைமுறையில் வருவதும் வாடிக்கைதானே!*பண்டைக் காலத்தில் பாபிலோனிய மக்கள் கடன் வாங்கிய உழவுத்தொழில் சம்பந்தப்பட்ட கருவிகளை திருப்பி அளிக்க புத்தாண்டில் உறுதி பூண்டனர்.* செல்ட் இனமக்கள் இறந்தவர்கள் பேய், பிசாசு, பூதமாக வந்து தொல்லை கொடுக்கின்றனர். அவர்களை விரட்ட என புத்தாண்டு விழா எடுத்தனர். இந்த புத்தாண்டு விழா 'சாம்ஹைன்' எனப்பட்டு, அக்டோபர் மாதத்தில் கொண்டாடப்பட்டது.* பிரிட்டிஷ், கொலம்பியா, கனடா மக்கள் குளிர் காலத்தில் வாங்கூவரைச் சுற்றியுள்ள பனிக்கட்டி போன்ற குளிர்நீரில் நீராட்ட உடை அணிந்து நீராடி மகிழ்ந்து புத்தாண்டைக் கொண்டாடினர்.* ஐரோப்பியர்கள் புனித ஸில்வெஸ்டர் ஈவ் என்ற பெயரில் புத்தாண்டு விழாவைக் கொண்டாடினர். கி.பி.314 இல் 'புனித ஸில்வெஸ்டர்' என்பவர் போப் ஆண்டவராக இருந்தார். அவர் ஒரு பெரிய கொடிய கடற்பிராணியைப் பிடித்தார். கி.பி.1000 ஆண்டில் அப்பிராணி தப்பி வந்து உலகை அழிக்கும் என சுவிட்சர்லாந்து, ஆஸ்திரிய மக்கள் நம்பினர். அப்படி ஏற்படாதது கண்டு மகிழ்ந்த மக்கள் விழாக் கொண்டாடத் துவங்கினர்.*சீன மக்கள் கொடிய ஆவிகள் வீட்டில் நுழையாமல் காக்க கதவுகளை மூடி, வெளியில் பட்டாசுகள் கொளுத்தி, தீயவற்றை விரட்டுவதாக எண்ணி விழா கொண்டாடினர்.*கம்போடிய நாட்டில் வட இந்தியாவில் ஹோலி பண்டிகை கொண்டாடுவது போல் வண்ண நீர்களைத் தெளித்து விழாக் கொண்டாடுகின்றனர்.*புத்தாண்டின் போது நீண்ட நேரம் வாய்விட்டுச் சிரித்துப் புத்தாண்டு கொண்டாடுவதால் நல்ல அதிர்ஷ்டம் தமதில்லத்தில் வந்து சேரும் என்று ஜப்பானியர் எண்ணுகின்றனர்.* ஏப்ரலில் 20ம் தேதி இரானியர் புத்தாண்டு விழா கொண்டாடுகின்றனர். அவர்கள் புத்தாண்டுக்கு முன்வரும் புதன் அன்று நெருப்பின் மீது குதித்து தம்மைத் தூய்மை செய்து கொள்வார்களாம். இது நம் நாட்டு அம்மன் கோவில்களில் நடைபெறுகிற தீ மிதி விழாவை ஒத்திருக்கும். 15ம் நாள் இன்பச் செலவு செய்வதன் மூலம் நன்மை வரும் என்றும், அன்று வீட்டிலிருப்பது கெட்ட சகுனம் என்றும் நினைக்கின்றனர். எனவே, ஆடிப்பாடி மகிழ்வதுடன் முளையிட்ட கோதுமை போன்றவற்றை ஏரி (அ) கடலில் எறிகின்றனர். இது தென்னாட்டில் திருமணத்தின் போது முளைவிட்ட நவதானியங்களை நீரில் கரைப்பதை நினைவூட்டுகிறது. இதனை 'பாலிகை கரைத்தல்' என்பர். நீர் நிலைகள் இல்லாவிடின் திருமண மண்டபத்திலேயே பெரிய பாத்திரத்தில் நீர் நிரப்பியும் கரைக்கின்றனர்.* புத்தாண்டு விருந்து, மோதிரப் பரிசு போன்றவை நற்பேறு விளைவிக்கும் என்பது சிலர் நம்பிக்கை.* சீனமக்கள், இந்தியர் போகி நாளில் பழையன கழிப்பது போல் பழையவற்றை அகற்றுகின்றனர். புத்தாண்டு அன்று குப்பை பெருக்கி எடுத்தால் செல்வம் போய் விடும் என சீனர்கள் நினைக்கின்றனர்.*ஸ்காட்லாந்தில் வீட்டுக்கு வரும் விருந்தினரைக் கண்டவுடன் அவர் வருகை நன்மையைப் பயக்கும் (அ) தீயன விளைவிக்கும் எனக் கருதுகின்றனர்.*'குழந்தை வடிவம்' புத்தாண்டு மகிழ்ச்சியை உண்டாக்கும் என்று சிலர் நம்புகின்றனர். மற்றும் மேலை நாடுகளில் பந்தாட்டப் போட்டிகள் போன்றவை நடைபெறுகின்றன.* தமிழ்நாட்டில் பல வகையில் புத்தாண்டைக் கொண்டாடுவதும், புத்தம் புதிய சினிமாக்கள் வெளிவருவதும் நாம் அறிந்த செய்தியே அல்லவா?***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !