ஆயில் பெயின்டிங்!
ஓவியக்கலையில், 'ஆயில் பெயின்டிங்' முறையும் ஒன்று. இதை, கி.பி., 15ம் நுாற்றாண்டில் உருவாக்கினார், ஜான் வான் ஐக். ஐரோப்பிய நாடான பெல்ஜியம், பிளாண்டர்ஸ் நகரத்தைச் சேர்ந்தவர். முட்டைக் கரு அல்லது தண்ணீரில் வண்ணங்களைக் கலக்கி ஓவியம் வரைவது அப்போது வழக்கமாக இருந்தது. இவை, தண்ணீரால் அழிந்தன. இவ்வாறு அழியாத வகையில், ஆயில் பெயின்டிங் முறையைக் கண்டுபிடித்தார் ஜான் வான் ஐக். ஆளி விதையில் எடுத்த எண்ணெயில், வண்ணங்களைக் குழைத்தார். அதை பயன்படுத்தி தீட்டிய ஓவியங்கள், நீரில் அழியாமலும், ஒளி மங்காமலும் துலங்கின. இந்த வகை ஓவியங்கள், இயற்கையாக, தத்ரூபமாகக் காட்சியளிக்கும். ஆசிய நாடான ஆப்கானிஸ்தான், பாமியன் மலைத்தொடரில், ஆயில் பெயின்டிங், முறையில் பழங்காலத்திலே ஓவியங்கள் வரைந்துள்ளதை கண்டறிந்துள்ளனர்.