பதனீர் விற்பவன்!
என் பெயர் சுந்தரமூர்த்தி. நான் நான்காம் வகுப்பு படிக்கும் போது, கோடை விடுமுறை காலங்களில் கூட்டுறவு சொசைட்டியில் பதனீர் பாக்கெட்டுகளை (பிளாட்பாரத்தில்) டிரை சைக்கிளில் விற்பனை செய்வேன். கமிஷன் பணம் ஒரு நாளைக்கு 100 ரூபாய்க்கு குறைவில்லாமல் கிடைக்கும். இப்பணத்தில் பள்ளி கட்டணம், புத்தகம் வாங்கிக் கொள்வேன்.ஒருநாள், வகுப்பு ஆசிரியர் மாணவர்களை பார்த்து, 'ஒவ்வொருவரும் என்னவாக ஆக விரும்புகிறீர்கள்?' என கேட்டார்.ஒவ்வொருவரும், டாக்டர், பொறியாளர், விஞ்ஞானி, டைரக்டர் என பலவாறாக கூறினர்.என்னைப் பார்த்து ஆசிரியர் கேட்டதும் நான் எழுந்து நின்று பதில் சொல்ல ஆரம்பிக்கும் போது, பாண்டி என்ற மாணவன் என்னைப் பார்த்து, 'சார் இவன் பதனீர் விற்பவன் சார். பிளாட்பாரத்தில் வியாபாரம் பார்க்கிறான்,' என்றதும் அனைத்து மாணவ, மாணவியரும் சிரித்து விட்டனர்.உடனே ஆசிரியர் கோபத்துடன், 'நான்சென்ஸ், அவன் இந்த வயசிலேயே சம்பாதிக்கிறான். அவனை நாம் பாராட்ட வேண்டும். அவன் செலவுக்கு அம்மா, அப்பாவை எதிர்பார்க்காமல் சுயமாக முன்னேறுகிறான். இதை உணராமல் கழுதை மாதிரி சிரிக்கிறீங்க' என சொன்னதும் வகுப்பறை அமைதியானது. என் மனதிற்கு சந்தோஷமாக இருந்தது.அந்த வருடத்தில், பொது தொண்டு நிறுவனம் ஒன்று 'சுய முன்னேற்றம்' என்ற தலைப்பில் எனது பணியை பாராட்டி, மதுரை காலேஜ் ஹவுஸில் விழா நடத்தி, மாவட்ட அளவில் முதல் ரேங்க் வாங்கிய மாணவிக்கும் கல்வி பிரிவிலும், உடல் ஊனமுற்ற மாணவருக்கும், சுயமுன்னேற்றம் என்ற பிரிவில் எனக்கும் பரிசளித்து, கேடயம் கொடுத்து கவுரவித்தனர்.மறுநாள், எனது புகைப்படம் செய்தித் தாளில் வந்ததை பார்த்து பலரும் பாராட்டினர். என்னை கிண்டல் செய்த பாண்டியனும் தன்னை மன்னிக்குமாறு வேண்டினான். உழைப்பு என்றும் வீணாகாது என்பதை அன்று உணர்ந்தேன்.இந்த நிகழ்ச்சி எனது பள்ளிக் கால வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவமாகும்.- ஜெ.சுந்தரமூர்த்தி, அனுப்பானடி.