வேதனை தந்த விளைவு!
ஆசிய நாடான வியட்நாம் மீது, அமெரிக்கா போர் நடத்தி முடித்திருந்த நேரம்!யுத்தம், வியட்நாமை நார் நாராக கிழித்துப் போட்டிருந்தது. வீடுகளை இழந்த மக்கள்; பெற்றோரை இழந்த குழந்தைகள்; கணவனை இழந்த மனைவி என, ரத்தக் கண்ணீரால் நனைந்திருந்தது வியட்நாம். போர் விளைவுகளை ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க, ராணுவத் தளபதிகள் இருவரை அனுப்பியது அமெரிக்க அரசு.கை, கால்கள் சிதைந்து துடித்தவர்கள், பிணங்களுக்கு அருகே கதறிய பெண்கள் என, கொடுங்காட்சிகளைக் கண்டார் ஒரு தளபதி. அவரது மனம் தாங்க முடியாத துயரத்தில் தவித்தது. மன பாரத்தால், வாழ்வை முடித்துக் கொண்டார்.இதே காட்சிகளைக் கண்ட இன்னொரு தளபதியும் வெதும்பினார். வியட்நாமிய மக்கள் படும் துயரங்களை அமெரிக்கர்களிடம் எடுத்துக் கூறினார். போரின் கொடூர விளைவை, 'ஹார்ட் அண்டு மைன்ட்' என்ற தலைப்பில் ஆவணப்படமாக உருவாக்கினார் ஓர் அமெரிக்கர். அது, உலகையே உலுக்கியது. அட்டூழியத்தை தோல் உரித்துக் காட்டியது. போருக்கு தலைமை வகித்த அமெரிக்க ராணுவ தளபதி வில்லியம் வெஸ்ட்மோர் பேட்டியும் அதில் இடம் பெற்றது. இதனால் பலத்த சர்ச்சை ஏற்பட்டது.படத்தை திரையிடவிடாமல் தடுக்க முயன்றது அமெரிக்க அரசு. எல்லாவற்றையும் மீறி உலகின் மிகச்சிறந்த ஆவணப்பட அகாடமி விருதை, 1974ல் வென்றது அப்படம். உலகின் முக்கிய சினிமா பிரதிகளை பாதுகாக்க, 'நேஷனல் பிலிம் ரெஜிஸ்ட்ரி' என்ற சர்வதேச அமைப்பு அமெரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த காப்பாகத்தில், இந்த படத்தின் மூலப்பிரதி, 2018 முதல் வைக்கப்பட்டுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணமாக போற்றப்படுகிறது.இந்த படத்தை இயக்கியவர், பீட்டர் டேவிஸ். இவர் நான்கு புத்தகங்கள் எழுதியதுடன், ஒன்பது படங்களை இயக்கியுள்ளார்.