பிரபுல்ல சந்திர ராய்!
தொழில் துறையில், இந்தியா பின்தங்கியிருந்த காலம். எதற்கெடுத்தாலும், வெளிநாட்டையே நம்பியிருக்க வேண்டிய நிலை. இறக்குமதி பொருட்கள், இந்திய சந்தையில் அதிக விலையில் விற்கப்பட்டன. இது கண்டு மனம் வருந்தினார் பிரபுல்ல சந்திர ராய் என்ற இளைஞர். ஆங்கிலேய இந்தியாவில், வங்காளப்பகுதியில், ராருளி சுதிப்பாரா கிராமத்தில், 1861ல் பிறந்தார். இவரை, பி.சி.ராய் என்பர்.சிறு வயதில், இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு இருந்தது; எனவே, சமஸ்கிருதம், பிரெஞ்சு, ஆங்கிலம், லத்தீன் மொழிகளைக் கற்றார். அரசியல், பொருளாதாரம் என பல்துறையில் வல்லுனராக இருந்தார்.படிப்பகத்தில், விஞ்ஞானி பெஞ்சமின் ப்ராங்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை படித்தார். அறிவியல் மீது ஈடுபாடு வந்தது. ஐரோப்பிய நாடான இங்கிலாந்து எடின்பரோ பல்கலையில் சேர்ந்தார். வேதியியலில் பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதி, 'டி.எஸ்சி.,' என்ற, 'டாக்ட்ரேட் ஆப் சயின்ஸ்' உயர்தர பட்டம் பெற்றார். இதை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் சேர்ந்தது.புகழ் பெற்ற விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திர போஸ் நடத்திய ஆய்வகத்தில் உதவியாளராக சேர்ந்து பயிற்சி பெற்று உயர்ந்தார். தனியாக வேதியல் சேர்மங்களை தயாரிக்கும் தொழில் துவங்க முனைந்தார்.முதன் முதலில், சிட்ரிக் அமிலம் தயாரிக்க துவங்கினார். எலுமிச்சம் பழத்தின் விலை அதிகமாக இருந்ததால் கட்டுப்படியாகவில்லை. அந்த முயற்சியை கை விட்டார். கல்லுாரியில் ஆசிரியராக பணியாற்றி கிடைத்த சொற்ப பணத்தை, ரசாயன பொருள் தயாரிக்கும் ஆராய்ச்சிக்கே செலவிட்டார்.பின், சல்பூரிக் அமிலம் தயாரிக்க முயன்றார். அதிலும் தோல்வியே கிடைத்தது.கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டும் கூடத்துக்கு சென்று, வீணாக எறியப்படும் எலும்புத் துண்டுகளை சேகரித்து வந்தார். வீட்டின் மாடியில் போட்டு வைத்தார்.அவற்றில் ஒட்டியிருந்த மாமிசத்தைச் சாப்பிட பறவைகள் வந்தன. மாமிசம் அழுகி துர்நாற்றம் வீசியது. அக்கம் பக்கத்து வீட்டில் வசித்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தவித்த ராய், நண்பர் உதவியுடன், அருகே இருந்த காலி மைதானத்தை பயன்படுத்த அனுமதி பெற்றார்.எலும்புகளை எல்லாம் அங்கு குவித்து கொளுத்தினார்; அதில் எழுந்த புகை மற்றும் துர்நாற்றம் இம்சித்தது. அக்கம் பக்கத்தில் வசித்தோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பை கண்டு கலங்காத ராய், தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.எலும்பு எரித்த சாம்பலை எடுத்து வந்து, சல்பூரிக் அமிலத்துடன் கலந்து சோதனை நடத்தினார். அதிலிருந்து, சூப்பர் பாஸ்பேட், லாயினி போன்ற பொருட்கள் கிடைத்தன. லாயினியை, ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்தார்; அதிலிருந்து, சோடா பாஸ்பேட் என்ற ரசாயனம் கிடைத்தது!அதை, சத்து மிக்க டானிக்காக மாற்றி உற்பத்தி செய்தார். மருந்து கடைக்காரர்கள் விற்க மறுத்தனர்; வெளிநாட்டு தயாரிப்பில் வந்த, டானிக்கை மட்டுமே விற்றனர்.நாளடைவில், ராய் தயாரித்த டானிக் பிரபலமானது. டாக்டர்களும் அதை நோயாளிகளுக்கு பரிந்துரை செய்தனர். இதை கண்டுபிடித்த ராய் புகழ் பரவியது.பெங்கால் கெமிக்கல்ஸ் அண்டு பார்மாசூட்டிகல் என்ற மருந்து தயாரிக்கும் தொழிற்கூடத்தை நிறுவினார். அது, 1901ல் துவங்கப்பட்டது. இந்தியாவின் முதல் மருந்து தயாரிப்பு நிறுவனமாக புகழ் பெற்றது.ஆராய்ச்சியின் விளைவாக மேலும் பல தொழிற்கூடங்களை ஆரம்பித்தார்; ரசாயன ஆராய்ச்சியில் ஈடுபாடு கொண்ட இளைஞர்களை பணியில் அமர்த்தினார். தொழில் கூடங்களால் வருமானம் பெருக ஆரம்பித்தது. அதை பொருட்டாக கருதாமல், துறவி போல எளிமையாகவே வாழ்ந்தார்.இந்திய மருத்துவத் தொழிலின் தந்தை என்று போற்றப்படுகிறார் ராய். இவர் எழுதிய, இந்திய ரசாயன வரலாறு பற்றிய நுால் பெரும் புகழ் பெற்றது. அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. 'மெர்க்குரஸ் நைட்ரேட்' என்ற ரசாயன சேர்மத்தைக் கண்டுபிடித்தவரும் ராய் தான்.சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக இருந்தார். ஆய்வுத்துறையில் நினைத்த காரியங்களை எல்லாம் சாதித்தார்.விரும்பிய ஒன்றே ஒன்று தான் வாழ்ந்த காலத்தில் நிறைவேறவில்லை; அது இந்தியாவின் விடுதலை. அதை மட்டும் காண முடியாமல், ஜூன் 16, 1944ல் இறந்தார் ராய்.பஞ்சத்தில் உதவி!வங்காளம் பஞ்சத்தின் பிடியில் சிக்கிய போது, பல நடவடிக்கையில் மனமுவந்து ஈடுபட்டார் ராய். மக்களின் பசி, பிணி போக்க உதவிகள் செய்தார். தாய்த்திருநாட்டைப் பெரிதும் நேசித்தார். தேச விடுதலைப் போராட்டங்களில் பங்கு கொண்டார். வாழ்க்கை வரலாற்றையும் நுாலாக எழுதியுள்ளார். சாகித்ய பரிசத் என்ற கழக தலைவராகப் பணியாற்றினார். இவரைப் பாராட்டி, 1919ல் ஒரு விருது வழங்கியது ஆங்கிலேய அரசு. பின், 'சர்' என்ற பட்டத்தையும் கொடுத்துச் சிறப்பித்தது. இந்தியாவில் வேதியியல் துறை வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்த பிரபுல்ல சந்திர ராயின் சேவையை மதித்து, அவர் பெயரில், 'பி.சி.ராய் விருது' என்ற கவுரவம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய அறிவியல் கழகம், இந்தியாவில் சிறந்த விஞ்ஞானிகளுக்கு, 1989 முதல் இந்த விருதை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. ராய் பெயரில் வங்க தேசத்தில் ஒரு சாலையும் உள்ளது.