உள்ளூர் செய்திகள்

இளவரசன் ப்ருத்திவி (5)

சென்றவாரம்: விருந்தினர் சென்றவுடன், வசந்தி அக்காவுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு திரும்பினாள் சின்னி. இனி -கன்னத்தில் கை வைத்தப்படி வரப்பு ஓரத்தில், அமர்ந்திருந்தான் இம்புலி. ஆப்பமும், தேங்காய் பாலும் அப்படியே இருந்தன.அந்த சுருக்கு பையை, மிகவும் கவனமாக, பண கட்டுகள் கிழிந்து விடாமல் இருக்க, மெதுவாக அதை வெளியே எடுக்க, 'பொத்' தென்று விழுந்தது, ஒரு பெரிய மோதிரம்.'என்ன இது... எங்கிருந்து வந்தது!' காலடியில் விழுந்த மோதிரத்தை, கையில் எடுத்தவனுக்கு வியர்த்தது.சுற்றிலும் வைரம் பதிக்கப்பட்டிருந்த மோதிரத்தின் நடுவே, ஒரு பெரிய சிவப்புக்கல். அதன் மேல், வளைந்து வளைந்து சில கோடுகள். அதன் நடுவே சில எழுத்துக்கள் இருந்தன. இம்புலிக்கு ஒன்றுமே புரியவில்லை.'இந்த விலை மதிப்பற்ற மோதிரத்தை, அந்த களவாணிப்பயலுக தான் போட்டிருக்க வேண்டும்; நிச்சயமாக இது திருட்டு சொத்து தான்!' மனமெல்லாம் ஒரே பீதியுடன், பயத்தில் உறைந்து போய் உட்கார்ந்திருந்தான் இம்புலி.''என்ன மாமா... கப்பல் கவிழ்ந்த மாதிரி, கன்னத்துல கை வெச்சுட்டு இருக்க?'' என்றாள் சின்னி.''நிறுத்துடீ... அந்த களவாணி பயலுங்கள தப்பிக்க விட்டமேன்னு உடம்பெல்லாம் பத்தி எரியுது... அவங்கள எங்கே போய் தேடுறது; எப்படி போய் பிடிக்கிறதுன்னு தெரியல... திருடுனத ரொம்ப சாமர்த்தியமா உன் தலையில கட்டிட்டு, ஓடிப்போயிட்டாங்க...'' என்று சீறினான் இம்புலி.''என்ன மாமா... நீ பாட்டுக்கு ஏதேதோ சொல்லிட்டு இருக்க... பசி மயக்கத்துல உளறாத... அவங்கள பாத்தாலே கையெடுத்து கும்பிட தோணுது... திருட்டு நாய்கள்னு சொல்லாத; ரொம்ப பாவம் மாமா,'' என்றாள் சின்னி.''இத பாருடீ...'' என்றவன், சுருக்கு பையை கவிழ்த்து கொட்ட, அதிலிருந்த ரூபாய் கட்டுகளுடன், கண்களை கூச வைக்கும் ஜொலிப்புடன், கீழே விழுந்தது அந்த ஒப்பற்ற மோதிரம்.அதை பார்த்து, அதிர்ந்தாள் சின்னி.''என்ன மாமா இது... எங்கிருந்து வந்துச்சு?'' என்றாள்.''எங்க இருந்து வரும்... அந்த திருட்டு பயலுங்க, ரூபாயை மட்டும் திருடல. ஏதோ, ஒரு கோடீஸ்வரன் வீட்ல இருந்து, இந்த வைர மோதிரத்தையும் திருடியிருக்கானுங்க. ரொம்ப நேக்கா அத உன்கிட்ட ஒப்படைச்சிட்டு போயிட்டானுங்க. இப்ப புரியுதா அந்த களவாணிப் பயல்களின் சாமர்த்தியத்தை,'' என்றான் இம்புலி.ஆடிப்போனாள் சின்னி!''சரி மாமா! வா வீட்டுக்கு போய் விவரமா பேசிக்கலாம். வயித்த காயப்போட்டுட்டு, மனசை கொழப்பிட்டு இருந்தா உடம்பு என்னத்துக்காகும்... உன்னை விட்டா எனக்கு வேறு யார் இருக்காக... நீ நெனைக்கிற மாதிரி ஒண்ணும் நடக்காது... நாம யாருக்கும், எந்த விதத்திலும், கெடுதலும் பண்ணல... நம்ம குலதெய்வம் நம்மை காப்பாத்தும். கவலைப்படாதே மாமா...'' என்று சொல்லி, அவனை வீட்டிற்கு அழைத்து சென்றாள்.வீட்டிற்குள் நுழைந்ததும், ''மாமா! கை, காலை கழுவிட்டு வா... முதல்ல சாப்பிடு,'' என்று சொல்லி, சமையல் அறைக்குள் சென்று, சூடான ஆப்பங்களையும், தேங்காய் பாலையும் இம்புலி முன் வைத்தாள்.''மாமா! இதை சாப்பிடு... அப்புறமா எல்லா விவரமும் பேசிக்கலாம்,'' என்றாள் சின்னி.''சின்னி! கவனமாக கேட்டுக்க, பந்திப்பூர் நினைவு இருக்கா... அதான் உன் மாமியார் வீடு. அங்க தான், என் நண்பன் வஜ்ரவேல் இருக்கான். நல்ல வசதி படைச்சவன்; போன வருஷம் கூட இங்கே வந்திருந்தான். உனக்கு நினைவு இருக்கா இல்லயா...''அவனும், அந்த ஊர் பஞ்சாயத்து தலைவரும் ரொம்ப தோஸ்த்தாம். நம்ம துஷ்யந்த் மகாராஜாவ கூட, அடிக்கடி பாத்துட்டு வருவாராம். ஊர்ல அவருக்கு ஏகப்பட்ட மதிப்பாம். ''போன தடவை வந்த போது கூட, 'இம்புலி! உனக்கு என்னவேணும்னாலும், ஒரு வார்த்த சொல்லு. நான் தலைவர் கிட்ட அழச்சிட்டு போறேன். அவர் உனக்கு வேண்டியதை எல்லாம் பண்ணிக் குடுத்துடுவாரு. மகாராஜாகிட்ட உன்ன அறிமுகப்படுத்தி வைக்கணும்னாலும் வைப்பாரு' என்று திரும்ப திரும்ப சொன்னான்.''மதிய சாப்பாட்டை முடிச்சுட்டு, பந்திப்பூர் போய், நண்பன் துணையோடு, அந்த தலைவரை போய் பார்த்து, இந்த களவாணிப்பயலுக நம்ம தலையில கட்டிட்டு போயிருக்கும் எல்லாத்தையும் அவர் கையில ஒப்படைச்சுடறேன். அப்புறம் அவர் என்ன யோசனை சொல்லுராரோ அதன்படி செய்யலாம்,'' என்றான்.உள்ளூற சின்னிக்கு இந்த யோசனை பிடிக்கவில்லை என்றாலும், ''சரி மாமா! உன் யோசனை சரி தான். அப்படியே செஞ்சிடலாம். இப்ப நீ சற்று படுத்து தூங்கு. நான் சாப்பாடு, தயாரிக்கேன். வெயில் கொஞ்சம் இறங்கியதும், பந்திப்பூருக்கு புறப்படலாம்,'' என்றாள்.அவசர அவசரமாக சமையல் முடித்துவிட்டு, ''மாமா! உச்சிவெயில் இறங்கிருச்சு. குளித்து, சாப்பாட்டை முடிச்சிட்டு பொறப்படு, 20 மைல் தூரம் போவணுமே... இப்ப பொறப்பட்டா தான், இருட்டுக்கு முந்தி அங்கே போயி சேர முடியும்.''உன் நண்பர்கிட்ட எல்லா விபரத்தையும் கூறு; ஒண்ணையும் மறைக்காத. எனக்கென்னவோ, பஞ்சாயத்து தலைவரிடம் போகாமல், இவரே நல்லபடியா முடிச்சிடுவாருன்னு தோணுது...'' என்றாள் சின்னி.அவன் புறப்பட்டதும், ''சுருக்குப்பை ஜாக்கிரதை மாமா...'' என்று குரல் கொடுத்தாள்.''கவலைப்படாதே,'' என்று, தன் இடுப்பை தட்டி காண்பித்தான் இம்புலி.மனித சஞ்சாரமற்ற பாதையில், வேகமாக நடையை கட்டினான்.'நான் ஜெயிக்க வேண்டும்... என் மேல், ஒரு சிறு கரும்புள்ளி கூட விழாமல், தலை நிமிர்ந்து நிற்கவேண்டும்' என்று மனதில் நினைத்தபடி நடந்தான்.'யாரேனும் தன்னை தொடர்ந்து வந்து, தாக்கினால் என்ன செய்வது, எப்படி அவர்களை சமாளிப்பது... இருட்டுவதற்கு முன் இந்த காட்டுப் பாதையை கடந்து விட்டால் போதும்' என்ற ஒரே நினைவில் நடைபோட்டான்.''அண்ணே! அண்ணே! இம்புலி அண்ணே!'' என்ற குரல் அவனை ஜில்லிட வைத்தது.பயத்துடன் திரும்பி பார்த்தான் இம்புலி.- தொடரும்...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !