உள்ளூர் செய்திகள்

விஞ்ஞானி (13)

ஒரு விஞ்ஞானியை இரண்டு நாடுகள் சொந்தம் கொண்டாடின. அவர் எங்கள் நாட்டில்தான் இருக்க வேண்டும் என்று இரண்டு நாடுகளும் வற்புறுத்தின. அந்த இரண்டு நாடுகளில் ஒன்று அந்த விஞ்ஞானி பிறந்த நாடு. இன்னொன்று அவர் மேற்கல்வி கற்று ஆராய்ச்சி நிபுணராக வளர்ந்த நாடு.அந்த விஞ்ஞானியின் பெயர் பீட்டர் லியோனிடோ கபிட்சா. அவர் பிறந்த நாடு ரஷ்யா; வளர்ந்த நாடு இங்கிலாந்து.சோவியத் ரஷ்யா வில் ஜார் மன்னனின் படைத் தளபதியாக இருந்த ஒருவரின் மகனாகப் பிறந்த கபிட்சா, மேற்படிப்புக்காக இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்குச் சென்றார். அங்கே அவர் ஸர் எர்னஸ்ட் ரூதர் போர்டு என்ற பிரபல அணு விஞ்ஞானியோடு சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.பின்னர் ஹென்றி காவெண்டிஷ் ஆய்வுக் கூடத்தின் காந்தவியல் ஆய்வுக்கான துணை இயக்குனராக நியமிக்கப்பட்டார். அதற்கடுத்த ஆண்டில் அவர் டிரினிடி கல்லூரியில் ஆராய்ச்சி யாளராக நியமிக்கப்பட்டார்.பின்னர் இங்கிலாந்து ராயல் விஞ்ஞானக் கழகத்தின் உறுப்பினராகவும் கபிட்சா தேர்ந்தெடுக்கப்பட்டார். 200 ஆண்டுக் காலத்தில் ஓர் அயல் நாட்டு விஞ்ஞானி அந்தக் கழகத்தில் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ள பட்டது அதுதான் முதல் தடவை.நாளடைவில் ராயல் விஞ்ஞானக் கழகம் கபிட்சாவின் தனிப்பட்ட ஆராய்ச்சிக்கென்றே 'மாண்ட் ஆய்வகம்' என்ற ஆராய்ச்சிக் கூடத்தை அமைத்துக் கொடுத்தது. அதில் எல்லா வகையான நவீனக் கருவிகளையும் வாங்கிக் கொடுத்தது. இது கபிட்சாவின் தனித் திறமைக்கு வழங்கப்பட்ட மிகப் பெரிய கவுரவமாகும்.இங்கிலாந்தில் அணுவியல் ஆய்வுகளோடு, வலுவுள்ள காந்தப் புலங்களை உண்டாக்கும் முறைகள், வெப்ப மாற்றீடற்ற விரிவின் மூலம் ஹீலியத்தைத் திரவமாக்கும் உத்திகள் ஆகியவற்றிலும் பல சாதனைகளைச் செய்தார் கபிட்சா. உலகின் பல்வேறு பல்கலைக் கழகங்களும் அவருக்கு பல கவுரவப் பட்டங்களை வழங்கிக் கவுரவித்தன.இவ்வளவு பெருமைக்குரிய கபிட்சா, தாம் பிறந்த நாடான ரஷ்யாவையும் மறக்க வில்லை. அடிக்கடி ரஷ்யாவுக்குச் சென்று அறிவியல் ஆய்வு களில் ஈடுபட்டிருந்த அறிஞர்களைச் சந்தித்து, ஆக்கமும், ஊக்கமும் அளித்து வந்தார்.1934ம் ஆண்டில் ரஷ்யாவில் நடந்த விஞ்ஞானி கள் மாநாட்டில் கலந்து கொண்ட கபிட்சாவை, சோவியத் அரசாங்கம் மீண்டும் இங்கிலாந்துக்குத் திரும்பிச் செல்லக் கூடாது என்றும், ரஷ்யாவிலேயே தங்கி ஆராய்ச்சிப்பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் ஆணையிட்டு விட்டது. அதனால் கபிட்சா ரஷ்யாவிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.அதை இங்கிலாந்து ராயல் விஞ்ஞானக் கழகத்தின் தலைவராக இருந்த அணுவியல் விஞ்ஞானி ரூதர்போர்டு விரும்பவில்லை. விஞ்ஞானிகள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்றும், அரசியல் காரணங்களைக் காட்டி விஞ்ஞானி களின் ஆராய்ச்சிகளுக்குத் தடை செய்யக் கூடாது என்றும் ரூதர்போர்டு கருதினார்.அவரே நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். அவருக்கு உயர்கல்வி கற்க உதவித் தொகை வழங்கியதிலிருந்து பல்வேறு ஆய்வுகளை நடத்த பொருளுதவியும், மற்ற உதவிகளையும் செய்து அவர் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியாகத் திகழ வழி வகுத்தது இங்கிலாந்து நாடுதான்.கபிட்சாவின் தனிப்பட்ட ஆய்வுக்காகவே நிறுவப்பட்ட மாண்ட் ஆய்வுக் கூடத்தில் நிறுவப்பட்டிருந்த பல நவீனமான கருவிகளைப் பயன்படுத்தும் நுணுக்கம் கபிட்சாவுக்கு மட்டுமே தெரியும். இப்படிப் பட்ட நிலையில் கபிட்சா இங்கிலாந்துக்குத் திரும்பி வராவிட்டால் மாண்ட் ஆய்வுக் கூடத்திலுள்ள 30 ஆயிரம் பவுண்ட் மதிப்புள்ள கருவிகளெல்லாம் வீணாகி விடும்.அதனால் மிகவும் வருந்திய ரூதர்போர்டு, கபிட்சாவை எப்படியாவது திரும்பப் பெற விரும்பினார். ரஷ்ய அரசாங்கத்துக்குப் பல கடிதங்களை எழுதி கபிட்சாவைத் திருப்பி அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், அதற்குச் செவி சாய்க்க ரஷ்ய அரசு மறுத்து விட்டது.அதன் பின்னர் இரண்டு விஞ்ஞானி களை ரஷ்யாவுக்கு அனுப்பி கபிட்சாவைத் திரும்பப் பெற, பேச்சு வார்த்தை நடத்தவும் ஏற்பாடு செய்தார். அப்போதும் சோவியத் அரசு கபிட்சாவை அனுப்ப சம்மதிக்காவிட்டால், அவரது ஆராய்ச்சிக் காகவே வாங்கப்பட்ட நவீனக் கருவிகளை யாவது சோவியத் அரசாங்கம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தும் படி தாம் அனுப்பி வைத்த விஞ்ஞானி களிடம் சொல்லியனுப்பினார் ரூதர்போர்டு.அந்த இரண்டு விஞ்ஞானிகளும் சோவியத் யூனியனுக்குச் சென்று அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளோடு பேசினர். அப்போதும் கபிட்சாவை அனுப்ப சோவியத் அரசு மறுத்து விட்டது.ஆனால், ரூதர்போர்டின் இரண்டாவது யோசனைப்படி, கபிட்சாவுக்காக வாங்கப் பட்ட நவீன கருவிகளை விலை கொடுத்து வாங்கிக் கொள்ளச் சம்மதித்தது. அதன்படி அந்தக் கருவிகளெல்லாம் சோவியத் யூனியனுக்கு அனுப்பப்பட்டன. ரஷ்யா அதற்குரிய பணத்தை இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தது.ஒரு விஞ்ஞானிக்கு இரண்டு நாடு களும் சொந்தம் கொண்டாடிய சம்பவம் உலக வரலாற்றில் மிக,மிக அரிது. கபிட்சாவுக்காக நடந்த இத்தகைய போராட்டம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !