விஞ்ஞானி (16)
அந்நிய ஆங்கிலேயரின் ஆட்சி இந்தியாவில் நிலைத்திருந்த காலம் அது. சர்.சி.வி.ராமன் தன் பதவியை உதறிவிட்டு ஆய்வுப்பணிக்குத் திரும்பியபோது அதே கொல்கத்தா பல்கலைக் கழகத்தின் அறிவியல் கூடத்தில் இடுப்பில் ஒரு சிறு துண்டைக் கட்டிக் கொண்டு இரவும், பகலும் ஆராய்ச்சிப் பணியே கதி என்று இருந்த இன்னொருவர் சர்.பி.ஸி.ரே என்ற முதிய விஞ்ஞானி ஆவார். அவரது முழுப்பெயர் பிரபுல்ல சந்திரரே. ரசாயனத்துறையில் பல அற்புதங்களை நிகழ்த்திய அந்த விஞ்ஞானிதான் இந்தியாவில் வேதியியல் துறை ஆய்வுக்கே வித்திட்டவர். அதற்கென ஓர் ஆராய்ச்சிக் கழகத்தையும் நிறுவினார். இன்று உலகப் புகழ் பெற்றுள்ள பெங்கால் கெமிக்கல்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கியவரும் அவர்தான்.அரசியலிலும் அவருக்கு ஓரளவு ஆர்வம் உண்டு என்றாலும், அரசியல் பணிகள் தம் ஆய்வுப் பணிகளில் குறுக்கிடவோ, அவற்றைத் தடை செய்யவோ அவர் ஒரு போதும் அனுமதிக்கவில்லை.1919ம் ஆண்டில் அவருடைய அரசியல் நண்பர்கள் அவரைச் சந்தித்து, ''நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக ஆகவேண்டும்,'' என்று வற்புறுத்தினர். சட்டமன்ற உறுப்பினராவதென்பது அக்காலத்தில் மிகுந்த கவுரவம் உள்ள ஒன்றாகக் கருதப்பட்டது.ஆனால், பி.ஸி.ரே., அதில் சிறிதும் ஆர்வம் காட்டவில்லை. மேலும், நண்பர்கள் வற்புறுத்திய போது அவர் சொன்னார்.''நாட்டின் நிர்வாக விஷயங்களில் எனக்கு ஆர்வம் உண்டு. என்றாலும், அரசியலில் ஈடுபடத்தான் நம் நாட்டில் நிறையப்பேர் இருக்கின்றனர். அறிவியல் துறையில் ஈடுபடக் கூடியவர்கள் தான் மிகவும் குறைவு. அப்படிக் குறைவானவர் களுள் ஒருவனான நானும் இதை விட்டு விலகி விடுவது சரியல்ல... இறுதிவரை இந்த அறிவியல் துறையிலேயே தொண்டாற்ற நான் விரும்புகிறேன்,'' என்றார் பி.ஸி.ரே.இப்படி பதவியைக் கூட விரும்பாதவரான அவர் மறைந்த போது, அவரிடம் எஞ்சியிருந்தவை ஒரு மேஜையும், சில நாற்காலிகளும், ஒரு புத்தக அலமாரி யும், சில நூறு நூல் களும்தாம்.***