உள்ளூர் செய்திகள்

கடல் கன்னி நகரம்! (5)

முன்கதை: கிராமத்து கிணற்றில் நீச்சல் கற்ற சிறுவன் மிகிரனை ஏளனம் செய்து போட்டிக்கு அழைத்தான் மற்றொருவன். அந்த சவாலை ஏற்று, வென்றவன் பாராட்டு மழையில் நனைந்தான். இனி -
பாட புத்தகங்களையும், நோட்டுக்களையும், பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தான் மிகிரன்.தபால்காரருக்குரிய சீருடையை அணிந்தபடி மனைவியிடம், ''மிகிரனை பத்தி கொஞ்சமாவது கவலைப்படுறீயா...'' என்றார் அவன் அப்பா.''நல்லா தானே படிச்சுக்கிட்டு இருக்கான்...''''இல்லம்மா... அவன் நீச்சல் கிறுக்கு புடுச்சு அலைஞ்சுக்கிட்டு இருக்கான்... இது எதிர்காலத்துக்கு நல்லதல்ல...''''கிராமத்துல நீச்சல் கத்து, கெட்டு போனவங்க யார் இருக்கா சொல்லுங்க...''''அந்த, 'வாலு டிவி' கணேசன் நீச்சல் சம்பந்தமா, எங்கே போனாலும், குரங்கு, அதன் குட்டியை துாக்கிட்டு போற மாதிரி, மிகிரனுடன் போறாரு...''''பாத்துக்கிட்டே இருங்க... ஒரு நாள், நம்ம பையன், படிப்பிலயும் சாதிச்சு, பெரிய நீச்சல் சாம்பியனா வருவான்...'' என்றார் அம்மா.வாசலில், புதிய குரல்கள் கேட்டன. எட்டி பார்த்தார் மிகிரனின் அப்பா.நான்கைந்து பேர் நிற்பதைக் கண்டு விசாரித்தார்.''தஞ்சை, நாகை நீச்சல் வீரர்கள் கூட்டமைப்பிலிருந்து வருகிறோம்...''''அப்படி ஒரு அமைப்பு இருக்கிறதா...''''இந்த கூட்டமைப்பில், இரண்டாயிரம் நீச்சல் வீரர்கள் இருக்கின்றனர்...''''மகிழ்ச்சி... என்ன விஷயம்...''''இங்கிருந்து, 30 கி.மீ., துாரத்தில், அற்புதபுரி என்ற கிராமம் இருக்கிறது. அங்கு, நான்கு சதுர கி.மீ., பரப்பளவுள்ள குளம் உள்ளது. கோடை காலத்திலும் வற்றாது. அதில், ஆயிரக்கணக்கான பறவைகள் இளைப்பாறும். தஞ்சை மாவட்டத்துக்கு மிக பெருமையான விஷயம்...''''இப்போ அந்த குளத்துக்கு என்ன...''''அதில், ஒவ்வொரு ஆண்டும், ஒரு நீச்சல் போட்டி நடத்துவோம். ஆறு மாவட்டங்களிலிருந்து, நுாற்றுக்கணக்கான வீரர்கள் பங்கேற்பர். போட்டி நடக்கும் அன்று, அற்புதபுரியை சுற்றியிருக்கும் ஊர்கள் திருவிழாக்கோலம் பூணும்...''''நன்கொடை கேட்டு வந்தீர்களா...''''போட்டியின் முதல் பரிசு என்ன தெரியுமா... 50 ஆயிரம் ரூபாய், தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ். இந்த போட்டியில், உங்க மகனும் பங்கேற்று, எங்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும்...''''என்ன பேசுறீங்க... பழம் தின்னு கொட்டை போட்ட பெரியவங்க எல்லாம் இருப்பாங்க. என் மகன், 12 வயது பாலகன். போட்டில பங்கேற்று அவமானப்பட சொல்றீங்களா...''''நீச்சலுக்கும், வயசுக்கும் நேரடி சம்பந்தம் ஏதும் இல்லை; உங்க மகன் ஒரு நீச்சல் மேதை. அவனை பற்றிய உங்க கணிப்பு தவறானது. இந்த போட்டில அவன் தான் வெற்றி பெறுவான்...''வந்தவர்களில் ஒருவர், ஒரு ரோஜாப்பூ மாலையை மிகிரன் கழுத்தில் அணிவித்தார். மற்றவர்கள் எலுமிச்சை பழம் கொடுத்து, 'தம்பி... போட்டில பங்கேற்று, எங்களை கவுரவப்படுத்துங்க...' என்றனர்.''நீச்சல் போட்டி நடத்தறீங்களே... பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் செய்திருக்கிறீர்களா...'''போட்டியின் போது, யாரும் மூழ்கி விடாமல் இருக்க, கண்காணிப்பு படகு, போட்டி தடத்தில் செயல்படும். கரையில் தீயணைப்பு படைவீரர்கள் வாகனத்துடன் காத்திருப்பர். ஒரு மருத்துவரும், இரு செவிலியர் நங்கைகளும், ஆம்புலன்சில் அமர்ந்திருப்பர்...' என்று விளக்கினர்.வந்திருந்தவர்களுக்கும், அப்பாவுக்கும் இடையில் வந்து நின்றான் மிகிரன்; கழுத்தில் அணிவித்திருந்த மாலையை கழற்றி, அம்மாவிடம் கொடுத்தபடி, ''அப்பா... என் வார்த்தைகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த போட்டியில நான் தான் வெற்றி பெறுவேன்...'' என, இரு கைகளையும் உயர்த்தினான்.'அப்படி சொல்லுப்பா எங்க தங்கக்குட்டி...'வந்தவர்கள் மிகிரனை துாக்கி கூத்தாடினர்.போட்டிக்கான ஏற்பாடுகள் நடந்தன.அற்புதபுரி குளத்தை சுற்றி, வண்ண வண்ண கொடிகள் நடப்பட்டிருந்தன; போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் புகைப்படங்களுடன் கூடிய டிஜிட்டல் பேனர்கள் மண்டி கிடந்தன.ஒரு டிஜிட்டல் பேனரில், கட்டை விரல் உயர்த்தி சிரித்திருந்தான் மிகிரன்.குளக்கரையில், கிராம மக்கள் கூடியிருந்தனர். நீச்சல் வீரர்கள் வருகையை பதிவு செய்தனர்.தாரை தப்பட்டம் முழங்க, மிகிரனை அழைத்து வந்தார், வாலு 'டிவி' கணேசன். உடன் சிற்பிகாகவும் வந்திருந்தாள்.பதிவேட்டில் கையெழுத்திட்டான் மிகிரன்; கூடியிருந்தோர் உற்சாக ஆரவாரம் செய்தனர்.போட்டி ஆரம்பிக்கும் புள்ளியில், 72 போட்டியாளர்கள் நின்றிருந்தனர்; சிலர் நின்றபடி உடற்பயிற்சி செய்தனர். வெகு சாதாரணமாக புன்னகை முகத்துடன் நின்றிருந்தான் மிகிரன்.நடுவர் விசிலடித்தார்; அனைவரும் நீந்த தயாராயினர்.கையிலிருந்த துப்பாக்கியை வானத்தில் வெடித்தார் நடுவர்.'ப்யூங்...'தண்ணீருக்குள் சீறினான் மிகிரன்!- தொடரும்...- ஆர்னிகா நாசர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !