உள்ளூர் செய்திகள்

சிறுகதை - விமான விவகாரம்!

வைரபுரி மன்னன் வசந்தன், ஒருநாள் தன் பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென ஆகாயத்தைப் பார்த்து, ''ஓ! புஷ்பக விமானம் போகிறது போலத் தெரிகிறதே!'' என்றான். உடனே அவனது மந்திரிமார்களும், பிரபுக்களும், ''ஆம் அரசே! புஷ்பக விமானம்தான். தங்களது பார்வைதான் எவ்வளவு கூரானது!'' என்றனர்.மற்றொரு பிரமுகன், ''ஆம் அவர்கள் கூறியது சரியே. தங்களைப் போன்ற புண்ணியவான்கள் இருப்பதால் தான் தங்களோடு சேர்ந்து நாங்களும் இது போன்ற அற்புதங்களைக் காணமுடிகிறது'' என்றான். இதுபோல மேலும் சில  பிரமுகர்கள் ஒத்து ஊதினர்; ஜால்ரா அடித்தனர். ஆனால், தட்சசீலத்தில் கல்வி பயின்று திரும்பி வந்திருந்த, ஞானசாகரன் மட்டும் எதுவும் கூறாமல் இருந்தான். அவன் அரசாங்க அதிகாரியின் மகன். ''ஞானசாகரா! நீ மட்டும் ஏன் எதுவும் சொல்லாமல் இருக்கிறாய்?'' என்று கேட்டான் மன்னன்.''அரசே! நானும் ஏதோ சொல்லத்தான் நினைக்கிறேன். ஆனால், அதைச் சொன்னால் தாங்கள் கோபித்துக் கொள்வீர்களோ என்று தான் பயப்படுகிறேன்!'' என்றான்.''பயப்படாதே! நான் ஒன்றும் செய்யமாட்டேன். நீ சொல்ல விரும்பியதை தாராளமாகச் சொல்!'' என்றான். ஞானசாகரனும், ''அரசே! ஆகாயத்தில் புஷ்பக விமானம் பறக்கவில்லை. அது பறந்ததாகக் கூறுவது மனதில் ஏற்பட்ட பிரமைதான்!'' என்றான்.மன்னனும், ''இவ்வளவு பேர் பார்த்ததாகக் கூறுகின்றனர். ஆனால், நீ மட்டும் அதைப் பாரக்கவில்லை எனக் கூறி, மனதில் ஏற்பட்ட பிரமைதான் என்கிறாய். இதை விளக்கிக்கூறு'' என்றான்.ஞானசாகரன், ''நாம் புஷ்பக விமானம் பற்றி காவியங்களில் படித்திருக்கிறோம். அது காவியங்களின் கற்பனை என்பது தங்களைப் போன்ற கற்றுணர்ந்தவர்கள் நன்கு அறிந்ததே. எனவே, ஒரு வேளை தாங்கள் மன மயக்கத்தில் அத்தகைய விமானத்தைக் கண்டதாகக் கூறி இருக்கலாம். ஆனால், ஒரேசமயத்தில் இவ்வளவு பேர்களுக்கும் அத்தகைய மனப்பிரமை ஏற்பட்டுவிட்டதாக நீங்கள் நம்பமாட்டீர்கள். இப்படி அவர்கள் தாங்கள் கூறியதை ஆமோதிப்பதற்கு என்ன காரணம் என்பது தங்களுக்கும் நன்கு தெரியும். அவர்களுக்கும் தெரியும்!'' என்றான்.அதைக்கேட்ட மன்னன், ''சபாஷ் ஞானசாகரா! நீ கூறியது சரியே! நான் புஷ்பக விமானத்தையோ, அதில் கந்தர்வனையோ பார்க்கவில்லை. நாட்டில் தற்போது என்ன நடக்கிறது என்பதை அவ்வப்போது கண்டும், கேட்டும் அவற்றை அப்படியே எனக்குச் சொல்லி ஆலோசனை கூறும் ஒருவரைத் தேர்ந்தெடுக்கவே இப்படி விமானத்தைக் கண்டதாகச் சொன்னேன்.''இந்த பொய்யை இவர்கள் பொய் என்று எடுத்துக் கூறாமல் என் ஆதரவையும், பரிசுகளையும் எதிர்பார்த்து நான் சொன்னது உண்மை என்று கூறி, என்னைப் புண்ணியவான் என்று புகழ்ந்தனர். நீயோ சற்றும் பயப்படாமல் உண்மையைக் கூறினாய். அதனால் உன்னைத்தான் என் அந்தரங்க ஆலோசகனாக நியமிக்கிறேன்!'' என்றான் புன்னகை புரிந்தவாறே. தலை கவிழ்ந்தனர் மற்றவர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !