உள்ளூர் செய்திகள்

அழகிய கையெழுத்து!

நாகப்பட்டினம், புண்டரீககுளம், வடகரை எலிமென்டரி பள்ளியில், 1955ல், 5ம் வகுப்பு படித்தேன். வகுப்பாசிரியராக இருந்த சுப்பிரமணியன், மாணவர்களின் கையெழுத்து மணிமணியாக இருக்க வேண்டும் என்பதில் கண்டிப்புடன் செயல்பட்டார். வடிவுடன் தெளிவாக இல்லையென்றால், தரையில் முட்டி போட வைத்து, பிரம்பால் அடித்து தண்டிப்பார். அவரை கண்டால் அஞ்சி நடுங்குவோம். அந்த தண்டனை முறையால், கவனம் செலுத்தி, மணி மணியாக எழுதிப் பழகினோம். அந்த பயிற்சி, மேல் வகுப்புகளில் பாராட்டுகளை பெற்று தந்தது. தெளிவாக எழுதுவோருக்கு வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண்கள், எப்போதும் எனக்கு கிடைத்தது. படிப்பு முடிந்து வேலையில் சேர்ந்தபோது, என் கையெழுத்தை உயர் அதிகாரிகள் மெச்சியதால் உள்ளம் குளிர்ந்தது. என் வயது, 79. ராணுவ உற்பத்தி துறையில் அதிகாரியாக வேலை செய்து ஓய்வு பெற்றேன். முட்டி போட வைத்து பிரம்பால் அடித்து, மணி மணியாக எழுத பயிற்சி தந்த ஆசிரியர் சுப்பிரமணியனை நன்றியுடன் நினைவில் கொண்டுள்ளேன். - ஆர்.சந்திரசேகரன், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !