இளஸ் மனஸ்! (278)
அன்புள்ள அம்மா...என் வயது, 35; தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். என் மகனுக்கு, 8 வயதாகிறது; பள்ளியில், 3ம் வகுப்பு படிக்கிறான். பார்க்க, தமிழில் பிரபல சிரிப்பு நடிகரின் குழந்தை பருவ தோற்றத்தில் இருப்பான். பள்ளியில், தெருவில், வீட்டில் என எங்கும் உரண்டை இழுப்பான். யாரையும் மதிக்காமல் திமிராக நடந்து கொள்வான். அவனை விட வயதில் பெரியோர் யார், எது சொன்னாலும் கேட்க மாட்டான். எவ்விதமாய் கண்டித்தாலும் அடங்க மாட்டான். அவனை, 'முனி கினி' பிடித்து ஆட்டுகிறதோ என சந்தேகப்படுகிறேன். என்ன செய்தால் அவன் நடத்தையை சாதுவாக்கலாம். மனம் புண்பட்டு செய்வதறியாது தவிக்கிறேன். சரியான வழியை காட்டுங்கள்.இப்படிக்கு,சங்கீதா முத்துக்குமார்.அன்பு சகோதரி...உன் மகனுக்கு, 'அப்போசிசனஸ் டீபியன்ட் டிசாடர்' என்ற மனப் பிரச்னை இருக்கும் என சந்தேகிக்கிறேன். இது ஒரு வகை நோய். இந்த பிரச்னையை தமிழில், 'எதிர்வு பணியாமைக் குறைபாடு' என்பர். இந்தியாவில், ஒரு ஆண்டில், 10 லட்சம்சிறுவர்களுக்கு இதுபோல் பாதிப்பு இருப்பதாக மருத்துவர்களின் பதிவு கூறுகிறது. இந்த வகை மனநோய், சிறுமியரை விட, சிறுவர்களையே அதிகம் பாதிக்கிறது. இந்த வகையில் மனநோய் பீடித்த சிறுவர்கள், அதிகாரம் படைத்த மூத்தவருக்கு எதிராக, பகைமை, எதிர்ப்பு, கோபம் மற்றும் கீழ்ப்படியாமையை அரங்கேற்றுவர்.இவ்வகையான மனநோய், மரபியல் ரீதியாகவோ, சுற்றுசூழல் காரணியாலோ உருவாகும் என்கிறது மருத்துவ ஆய்வு.இந்த நோய் ஏற்படுத்தும் அறிகுறிகளை பட்டியலிட்டுள்ளேன்.இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்...* எப்போதும் எரிச்சலான மனநிலையில் இருப்பார்* தேவையற்ற வாக்குவாதம் செய்வார்* வலிந்து வந்து தீங்கு செய்ய முயற்சிப்பார்* கலகக் குரல் எழுப்புவார்* பழி வாங்கும் குணத்துடன் காணப்படுவார்* தன்னைத்தானே காயப்படுத்தி கொள்வார்* சமூக விரோத செயல்பாடுகளில் ஈடுபாடுகாட்டுவார்* எப்போதுமே விசாரமும், மன பதற்றமுமாய் இருப்பார்.இந்த மன நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், பெற்றோர், ஆசிரியர், மூத்த சகோதர சகோதரிகள், தெரு மக்கள் என யாரிடமும் இணைந்து போக மாட்டர். சில சிறுவர்களுக்கு இப்பிரச்னை சில ஆண்டுகள் நீடிக்கும். சிலருக்கு ஆயுட்காலம் வரை தொடரும். ரத்த பரிசோதனையோ, எக்ஸ்ரேயோ, ஸ்கேனிங்கோ இந்த நோயை உறுதி செய்ய தேவைப்படாது.குடும்ப அங்கத்தினர் சிகிச்சை, சக குழு சிகிச்சை, அறிவாற்றல் நடத்தை சிகிச்சை மற்றும் சில மருந்துகள் மூலம் உங்கள் மகனை குணப்படுத்தலாம். யோகா, தியான வகுப்புகளுக்கு அனுப்புவதன் வழியாக ஒழுங்கு படுத்தலாம்.குடும்பத்தில், மகனுக்கு அனுசரனையான சூழலை ஏற்படுத்தி அவன் செயல்களை சாந்தப்படுத்துங்கள். அவ்வப்போது, மகனுக்கு நல்ல அறிவுரைகளை வழங்கும் நீதிக்கதைகள் கூறலாம். இந்த பாதிப்பில் இருந்து அவன் வெளிவர மன உறுதியுடன் செயல்படுவது அவசியம்.- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.