மனக்கண்!
மதுரை, சின்னக்கடைத்தெரு, டி.எம்.டி.ஆர். உயர் ஆரம்ப பாடசாலையில், 1968ல், 8ம் வகுப்பு படித்தேன். ஒவ்வொரு வாரமும் வெள்ளியன்று நடத்தப்படும் கணக்கு தேர்வு நடுக்கம் தரும். நல்ல மதிப்பெண் எடுத்தாலும் பயம் போகவில்லை. பின், மதுரை நிர்மலா மகளிர் உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு சேர்ந்தேன். அங்கு கணித ஆசிரியையாக இருந்த கஜலட்சுமி அருமையாக போதிப்பார். புதிய கணக்குகளை கற்றுத் தரும்போது, 'புரியுதா... புரியுதா...' என்று கேட்டு தெளிவு ஏற்படுத்துவார். கற்பித்த கணக்கு மாதிரியை கரும்பலகையில் எழுதி விடை காண கூறுவார். விடையை முதலில் எழுதி வரும் மூன்று பேருக்கு, 'குட்' என நோட்டில் எழுதி கையெழுத்து போடுவார். அதற்காக பெரும் போட்டியே நடக்கும். ஆசிரியையின் கற்பித்தல் உத்தியால் பயம் நீங்கியது. பள்ளி இறுதி தேர்வில் கணித பாடத்தில், 92 மதிப்பெண்கள் பெற்றேன். தொடர்ந்து லேடிடோக் கல்லுாரியில் பட்டம் பெற்று, அரசு தேர்வாணைய தேர்வு எழுதி வருவாய்த்துறை பணியில் சேர்ந்தேன். தற்போது என் வயது, 70; தமிழக அரசு பணியில் துணை ஆட்சியர் நிலையில் உயர்ந்து ஓய்வு பெற்றேன். பள்ளியில் படித்த காலத்தில் எத்தனையோ ஆசிரியர்களிடம் கற்றிருந்தாலும், கணித ஆசிரியை கஜலட்சுமியின் முகம் மனக்கண்ணில் உள்ளது. அவரை நன்றியுடன் நினைவில் கொண்டுள்ளேன். - எஸ்.சாந்தகுமாரி, கோவை. தொடர்புக்கு: 99438 35394