உள்ளூர் செய்திகள்

மரகதப்பச்சை நத்தை!

கடல் நத்தை, தரை நத்தை, நன்னீர் நத்தையை குறிப்பிடப் பொதுவாக பயன்படும் சொல் நத்தை. ஓடு இல்லாத வகைகளும் இதில் காணப்படுகின்றன.நத்தை, முதுகெலும்பு இல்லாத உயிரினம். உடல், தலை, கழுத்து, உள்ளுறுப்பு, கூம்பு, வால் மற்றும் கால் என்ற பாகங்களை கொண்டுள்ளது.சில வகை, நுரையீரலாலும் மற்றவை, செவுள்களாலும் சுவாசிக்கின்றன.இரவில் உணவு தேடும். அழுகும் பொருட்களை உண்ணும். பூஞ்சைகள், பச்சை இலைகள், புழுக்கள், பூரான்கள், பூச்சிகள், விலங்கு கழிவு, அழுகும் இறைச்சி போன்றவற்றையும் உண்ணும். சில, பிற நத்தையையே உண்ணும்.நத்தைக்கு, 'ரேடுலா' எனப்படும், ரிப்பன் போன்ற நாக்கு உள்ளது. அதில், ஆயிரக்கணக்கான சிறிய பற்கள் உள்ளன. நத்தை முதுகில் சுழல் ஓடு உள்ளது. அது உள்ளுறுப்புகளை பாதுகாக்கும் அமைப்பாகும்.வலுவான தசையுள்ள கால்களை கொண்டுள்ளது. கரடுமுரடான பரப்புகளில் ஊர்ந்து செல்லவும், மென்மையான உடல் வறண்டு போகாமல் இருக்கவும் இவை உதவும். மரப்பட்டை, ஈரமான கழிவு குவியல் மற்றும் பாசி போன்ற ஈரமான சூழல்களை பெரிதும் விரும்பும்.ஆஸ்திரேலியா அருகே மானுஸ் தீவில் மரகதப்பச்சை நத்தை என்ற வகை வாழ்கிறது. இதன் ஓடு பச்சை நிறத்தில் இருக்கும். இது அணிகலன்கள் செய்ய பயன்படுகிறது; ஓடுகளை சேகரிப்பவர்களால் விரும்பி வாங்கப்படுகிறது.இது மரத்தில் வாழும். கடல் மட்டத்தில் இருந்து, 112 மீட்டர் உயரத்தில் மழைக்காடுகளில் காணப்படுகிறது. இதன் பச்சை நிறம், ஓட்டின் கால்சியம் கார்பனேட்டால் ஆன உட்பகுதியில் இருப்பதில்லை. ஓட்டின் மேலே உள்ள புரத அடுக்கிலே இருக்கும். காடுகள் அழிப்பு, இந்த உயிரினம் அழிவுக்கு முக்கிய காரணம். உலகில் மிகப் பெரியது, 35 செ.மீ., நீள பாதம் உடைய ஆப்பிரிக்க நத்தை. வேகமாக நகருவது, ஹெலிக்ஸ் ஆஸ்பெர்சா என்ற இனம். உணவுக்காக நத்தை வளர்ப்பது, 'ஹெலிகல்ச்சர்' என அழைக்கப்படுகிறது.- வி.திருமுகில்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !