உள்ளூர் செய்திகள்

நேரம் காத்திருக்காது!

கோவை, ஆர்.கே.ஸ்ரீரங்கம்மாள் பள்ளியில், 1974ல், எஸ்.எஸ்.எல்.சி.,படித்த போது தலைமையாசிரியராக இருந்தார் துரைசாமி. என் தந்தைக்கும் அதே பெயர் தான் இருந்ததால், அவரை மிகவும் பிடிக்கும். அவரது முகம் எப்போதும் மலர்ச்சியாக இருக்கும். இதழ்களில் புன்னகை தவழும். கண்டிக்க தக்க செயல்பாடுகளை கண்டால் மட்டும் சிறிது கோபப்படுவார். மற்றபடி எதையும் மென்மையாக கற்றுக் கொடுப்பார்.பாடம் கற்பித்தோருக்கு அன்று பிரிவு உபசார விழா நடத்தினோம். அனைத்து ஆசிரியர்களையும் மாலை அணிவித்து கவுரவித்தோம். தலைமையாசிரியருக்கு கடிகாரம் பரிசாக அளித்தோம்.அதை பெற்றதும், 'மாணவ, மாணவியரே... நேரம் காட்டும் கடிகாரம் ஒன்றை பரிசாக தந்துள்ளீர். நேரம் யாருக்காகவும், எதற்காகவும் காத்திராது. ஒவ்வொரு நொடியும் மிக முக்கியமானது. அவற்றை வெற்றிக்கான ஓட்டமாக மாற்றிக் கொள்ளுங்கள். எங்கும், எதிலும் சோர்ந்து விடாமல் ஓடிக் கொண்டே இருங்கள். வெற்றிக்கனி கரங்களில் தவழும் நேரம் சீக்கிரமே வரும்...' என, அறிவுரைத்து வாழ்த்தினார்.எனக்கு, 67 வயதாகிறது. சொந்தமாக வியாபார நிறுவனம் நடத்தி வருகிறேன். நேரத்தை சரியாக பயன்படுத்தி வெற்றிப்படிகளில் ஏறியுள்ளேன். பள்ளியில் அதற்கு அறிவுரைத்து துாண்டிய தலைமையாசிரியரை வணங்கி மகிழ்வு கொள்கிறேன்.- துரை.பால்ராஜ், கோவை.தொடர்புக்கு: 86086 88676


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !