ஓடி ஒளியாதே பூஞ்சிட்டே! (25)
முன்கதை: காவல்துறை புலனாய்வு பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற மோப்பநாய் செங்கிஸ்கானை, தத்தெடுத்தான் சிறுவன் மகிழ். அதன் பயிற்சியாளராக இருந்த காண்டீபன், பிரிய மனமின்றி அதைக் கடத்தினான். அவனுடன் ஒத்துழைக்க மறுத்து, மகிழுடன் சேர்ந்த செங்கிஸ்கானை முன் விரோதத்தால் தீர்த்துக்கட்ட முயன்ற கடத்தல்காரன் ஹிட்மேனை மடக்கி, காவல்துறையில் ஒப்படைத்தான் காண்டீபன். இது கண்டு, மனம் புழுங்கிய கும்பல் தலைவன், செங்கிஸ்கான் வசித்த அடுக்குமாடி குடியிருப்பில் குண்டு வைத்தான். இனி -அடுக்குமாடி கட்டடத்தின் வளைவில் ஒளிந்து, 'பாலிமர் பாம்' விதைத்து செல்லும் உருவத்தை கண்டது செங்கிஸ்கான்.கடந்து செல்லும் வரை காத்திருந்தது. பின், துரிதமாக செயல்பட்டு கழிவுநீர் தொட்டிக்குள் குதித்தது.கழிவுநீருக்குள் நீந்திச் சென்று தேடியது; ஒன்றும் கிடைக்கவில்லை.விடாமல் பலமுறை தேடி, 'லித்தியம் பாலிமர் பாம்' என்ற வெடிபொருளைக் கண்டுபிடித்தது. வாயில் கவ்வியபடி, கழிவுநீரின் மேல் மட்டம் வந்தது.தொட்டியில் இருந்து வெளியே குதிக்க மூன்றடி உயரத்தை தாண்ட வேண்டும். பாமை கவ்வியபடி மேலே எம்பியது. முயற்சி பலிக்கவில்லை. தொட்டிக்கு வெளியே வரமுடியாமல் உள்ளேயே மீண்டும் விழுந்தது. பின், இருமுன்னங்கால்களால் பாமை பிடித்தபடி அபயக்குரல் எழுப்பியது.செங்கிஸ்கானை தேடி வந்த மகிழின் காதுகளில் குரைப்பு சத்தம் கேட்டது. எங்கிருந்து சத்தம் கேட்கிறது என தெரியாமல் திணறினான். மேலும், சில நிமிடங்கள் கரைந்தன.கழிவுநீர் தொட்டிக்குள் செங்கிஸ்கானை பார்த்து விட்டான் மகிழ். குனிந்தபடி முழங்காலிட்டு அதை வெளியே இழுத்தான். சாக்கடை சொத சொதப்புடன் வந்து விழுந்தது செங்கிஸ்கான்.''வாயில் என்ன பார்சல் செங்கிஸ்கான்...'''மேல் கவரை பிரித்து பார்...'கவரை பிரித்தெடுத்தான் மகிழ். லித்தியம் பாலிமர் பாம் சிரித்தது; டைமரில், 22 நிமிடங்களும், 45 நொடிகளும் இருந்தன.கவர் அகற்றப்பட்ட பாமை வாயால் கவ்வி துாக்கியது செங்கிஸ்கான். வாயில் பற்கள் உடைந்து விடும் அழுத்தம்; சிறிது நேரம் யோசித்தது.பாமை விதைத்து விட்டு சென்ற உருவத்தின் பிரத்தியேக வாசனையை நுகர்ந்தது செங்கிஸ்கான். ஏதோ யோசித்து தலையாட்டியது.உருவம் வந்த வழியை மோப்பம் பிடித்து ஓட ஆரம்பித்தது. வேகமாக கரைந்து கொண்டிருந்த நேரத்தோடு போட்டி போட்டு ஓடியது செங்கிஸ்கான்.களைப்பு ஏற்பட்டதும் சிறிது நேரம் பாமை வைத்து இளைப்பாறியது. செங்கிஸ்கானை தொடர்ந்து ஓடி வந்தான் மகிழ்; மீண்டும் பாமை கவ்வி ஓட துவங்கியது.செங்கிஸ்கான் இரண்டாம் முறை பாமை வைத்து இளைப்பாறியது. பாமை குனிந்து பார்த்தான் மகிழ்.டைமர் இன்னும், 10 நிமிடங்கள் இருப்பதை காட்டியது.''செங்கிஸ்கான்... பேய்தனமாக பாமுடன் போட்டி போடுகிறாய். சிறிது நேரத்தில், வெடித்து விடும். ஒரு கி.மீ., சுற்றளவில் இருக்கும் புல் பூண்டு கூட அழிந்து விடும். நீயும், துண்டுகளாய் சிதறி விடுவாய். அதை இங்கேயே வைத்து விட்டு தலைதெறிக்க விலகி ஓடி தப்பிப்போம்...''மகிழை பார்த்து முறைத்தது செங்கிஸ்கான்.'என்னை தொடர்ந்து வராதே... இங்கேயே நில்; நான் தனியாக இயங்குகிறேன்...'பாமை கவ்வி நாலுகால் பாய்ச்சலில் ஓடியது செங்கிஸ்கான்.மணிக்கு, 75 கி.மீ., ஓட்டம்; இன்னும், 58 நொடிகள்.அதே நேரம் கடத்தல் கும்பல் பதுங்கியிருந்த அறையில் -ஒட்டுமொத்த சகாக்களுடன் குடித்து, கும்மாளம் போட்டான் போதை மருந்து கடத்தல் மாபியா தலைவன் சினகா விஜய்காந்த்.பாமுடன் அவர்களின் நடுவில் பாய்ந்தது செங்கிஸ்கான். 9, 8, 7 என, துவங்கி பூஜ்ஜியத்தில் முடிந்தது டைம் பாம். ஆயிரம் டெசிபல் ஓசையுடன் ஒரு வானவில் பூகம்பம் வெடித்தது. போதை மருந்து கும்பலில் ஒருவரும் தப்பவில்லை. 'எல்லாரும் நல்லா இருங்கள் மக்களே...'வாழ்த்தியபடி சிதறியது செங்கிஸ்கானின் ஆன்மா.இருகைகளால் வாயை பொத்தி அழுதான் மகிழ்.பாற்கடல் அடுக்குமாடி குடியிருப்பின் முன் முகப்பில், 60 கிலோ வெள்ளியில் செங்கிஸ்கான் சிலை கம்பீரமாய் நிமிர்ந்திருந்தது. சிலையை திறந்து வைத்தார் அமைச்சர்; அனைவரும் கைதட்டினர்.சிலையின் கழுத்தில் ரோஜா மாலை அணிவித்தான் மகிழ். சிலையின் காலடியில் ஒரு கொத்து மகிழம் பூக்களை வைத்து வணங்கினான் காண்டீபன்.'மனித குலத்தின் நண்பன் செங்கிஸ்கான் புகழ் ஓங்குக!' அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த பெரியோர் முதல், சிறியோர் வரை உணர்ச்சிப்பூர்வமாய் கோஷமிட்டனர்.'இன்னும் நான் தான், இந்த அடுக்குமாடி குடியிருப்பின் காவல் தெய்வம். நல்லோர் வாழ தீயோர் ஒழியட்டும்...'அரூபமாய் காற்றில் மிதந்து அறிவித்தது செங்கிஸ்கான்.- முற்றும்.- ஆர்னிகா நாசர்