உள்ளூர் செய்திகள்

பரிசும் பாராட்டும்!

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அரசு நடுநிலைப் பள்ளியில், 2001ல், 6ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்... வகுப்பாசிரியர் சதானந்தம் ஆங்கில பாடமும் நடத்துவார். வகுப்பில் படுசுட்டியாக இருப்பேன். அன்று கரும்பலகையில், 'நீடு' என்ற வார்த்தையை எழுதி, 'இதற்கு என்ன அர்த்தம்...' என்று கேட்டார். ஒவ்வொருவரும் திணறிய போது விடையை நாசுக்காக, மறைமுகமாக புரியும் வகையில் தெரிவித்தார். இருந்தபோதும் எவரும் கவனித்து பதில் சொல்லவில்லை. என் முறை வந்த போது, 'தேவை, வேண்டும்' என விடையை இரு விதமாக சொன்னேன். உடனே சாக்லேட் பரிசாக கொடுத்தார். மறுநாளே ஆங்கில அகராதி ஒன்றை கொடுத்து, 'அர்த்தம் தெரிந்து படித்து ஆங்கில பாடத்தில் சிறப்பாக வளர்ச்சியடைவாய்...' என அறிவுரைத்து வாழ்த்தினார். அதை பின்பற்றி பொருளுணர்ந்து படித்தேன். ஆங்கில பாடத்தில், 96 மதிப்பெண் பெற்று சாதித்தேன். தொடர்ந்து கவனம் செலுத்தி உயர்ந்தேன். என் வயது, 31; கல்லுாரியில் விரிவுரையாளராக பணியாற்றுகிறேன். பள்ளி வகுப்பில் அறிவுரைகள் வழங்கி, வாழ்வை சிறப்பாக அமைக்க துாண்டுகோலாக இருந்த ஆசிரியர் சதானந்தத்தை போற்றுகிறேன். - கே.ஆர்.வி.மகிழன், காரைக்கால். தொடர்புக்கு: 95009 98013


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !