பதற்றம் தவிர்!
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், எஸ்.ஆர்.வி., பள்ளியில், 2007ல், 12ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்...எங்கள் இயற்பியல் ஆசிரியை காஞ்சனா சிறப்பாக கற்பிப்பார். சிரமம் இன்றி வாழ்வதற்கு தக்க வழிமுறைகளை அவ்வப்போது கூறுவார். அது நம்பிக்கை ஊட்டும் வகையில் இருக்கும்.பொதுத்தேர்வுக்கு தயாரானபோது, 'வாழ்வின் முதல் படியாக இந்த தேர்வை எடுத்துக்கொள்ளுங்கள். தேர்வு முடிவுக்கு பின், நிஜ உலகத்தை எதிர்கொள்ள போகிறீர்கள். உங்கள் உடலில் ஏற்படும் பருவ மாற்றத்தால் கவனச் சிதறலுக்கு வாய்ப்பு அதிகரிக்கும்; நல்வழியில் நடப்பதற்கு உதவிய பெற்றோரின் கண்காணிப்பை மீறி, தேவையற்ற சகாக்களுடன் தொடர்பு ஏற்படலாம்...'அது தவறான பாதைக்கு எண்ணத்தை திசை திருப்பி, மன அழுத்தத்தை அதிகரிக்கலாம். எனவே, சுயமாக முடிவு எடுக்க நேரும்போது கவனமாக செயல்படுங்கள்... நாம் எடுக்கும் முடிவை, குடும்பத்தினருடனோ, நலம் விரும்பிகளுடனோ பகிர முடியுமா என சிந்தியுங்கள். யாருமே ஏற்க மாட்டர் என தோன்றினால், அதை தவிர்த்து விடுவதே நல்லது...' என்று பக்குவமாக எடுத்துரைத்தார். அது, மனதின் ஆழத்தில் பதிந்தது.எனக்கு, 33 வயதாகிறது. தகவல் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்றில் பொறுப்பான பதவியில் இருக்கிறேன். பள்ளியில் பெற்ற அறிவுரையை நினைவில் நிறுத்தி, நிர்வாக முடிவுகளை தெளிவுடன் எடுக்கிறேன்; அதனால் எந்த சூழ்நிலையையும் சுலபமாக கையாள முடிகிறது. வாழ்வில் முன்னேற நிறைவான சிந்தனை ஊட்டிய ஆசிரியை காஞ்சனாவை நன்றி பெருக்குடன் நினைவில் கொண்டுள்ளேன்!- என்.ஹேமா, திருப்பூர்.தொடர்புக்கு: 89398 99933